
தமிழகத்தில் 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகள் இன்று தொடங்கி வரும் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 11, 12-ம் வகுப்பு தேர்வுகள் நிறைவு பெற்றுவிட்டன. தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்வு வரும் 6-ம் தேதியுடன் முடிவடைகிறது.
அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் வரும் 10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட வருடாந்திர நாட்காட்டியில் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வாக்குச்சாவடி மையங்கள்: இதற்கிடையே, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதன் வாக்குச்சாவடி மையங்களாக பள்ளிகள் செயல்பட இருக்கின்றன. இதையடுத்து, 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் முன்கூட்டியே ஏப்ரல் 1 முதல் 16-ம் தேதி வரை நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அதன்படி, 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகள் இன்று (1-ம் தேதி) முதல் தொடங்குகின்றன.
இதைத் தொடர்ந்து, 4, 5-ம் வகுப்புகளுக்கு வரும் 6-ம் தேதியும், 1, 2, 3-ம் வகுப்புகளுக்கு வரும் 8-ம் தேதியும் இறுதி பருவத் தேர்வுகள் தொடங்கி நடைபெறவுள்ளன. காலை, மதியம் என இருவேளைகளாக நடத்தப்படும் இத்தேர்வுகள் ஒட்டு மொத்தமாக, வரும் 16-ம் தேதியுடன் நிறைவு பெறுகின்றன.
அதன் பின்னர், 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான கோடை விடுமுறை வரும் 17-ம் தேதி முதல் தொடங்கும். எனினும், ஆசிரியர்கள் பள்ளி இறுதி வேலைநாள் வரை பணிக்கு வரவேண்டும். விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகளை ஜூன் 4-ம் தேதி திறப்பதற்கும் திட்டமிட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.






No comments:
Post a Comment