Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, February 28, 2021

10, 11ம் வகுப்புகளுக்கு ஆல்பாஸ் அறிவித்ததால் பொதுத்தேர்வு கட்டணம் திரும்ப கிடைக்குமா? மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டதால் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் செலுத்திய பொதுத்தேர்வு கட்டணத்தை கல்வித்துறை திரும்ப வழங்குமா என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டன. கடந்த ஆண்டு 10ம் வகுப்பு வரை ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது. 11, 12ம் வகுப்புகளுக்கு விடுபட்ட பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. 

இதைத்தொடர்ந்து நடப்பு கல்வியாண்டிற்கு இணையதளம் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 10, 12ம் வகுப்புகளுக்கும், பின்னர் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கும் சமூக இடைவெளியுடன் நேரடி வகுப்புகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

10ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என அரசு திடீரென அறிவித்தது. இது மெல்ல கற்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும், நன்றாக பயிலும் மாணவர்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. 

இதனிடையே தனியார் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டணத்தை அரசு வசூலித்தது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.115ம், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.175ம், செய்முறை தேர்வையும் சேர்த்து எழுதும் மாணவர்களுக்கு ரூ.225ம் தேர்வு கட்டணமாக வசூல் செய்தனர். 

தற்போது 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் பொதுத்தேர்வு எழுத வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. எனவே அரசு ஏற்கனவே வசூலித்த தேர்வு கட்டணங்களை மாணவர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டுமென பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 

தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் இந்த கட்டணத்தை அரசு திருப்பி தர வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment