Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, February 10, 2021

பயிற்சி மையத்திலேயே ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளலாம்!

ஓட்டுநர் உரிமத்தின் வரைமுறை குறித்து மத்திய அரசு பிப்ரவரி 5-ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு அங்கீகாரம் தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மக்களுக்குத் தரமான ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்காக, ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு இருக்க வேண்டிய வசதிகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைக் கொண்டுவர மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

மேலும், இந்த மையங்களில் வெற்றிகரமாகப் பயிற்சியை முடிக்கும் ஓட்டுநர்கள், ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போது, ஓட்டுநர் பரிசோதனையில் (Driving test) கலந்து கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

இந்த நடவடிக்கை, போக்குவரத்துத் துறையில் சிறப்புப் பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் கிடைக்க உதவும். இது அவர்களின் திறனை அதிகரிப்பதோடு, சாலை விபத்துக்களையும் குறைக்கும்.

பொது மக்களிடம் இருந்து ஆலோசனை பெறுவதற்காக, இந்த வரைவு அறிவிப்பு சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆலோசனைகள் பெற்ற பின்பு இது முறைப்படி வெளியிடப்படும்." என்று குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த திட்டம் நடைமுறைக்கு என்ன நடக்கும்? என்று மக்களிடையே கேள்வி எழுகிறது.

ஓட்டுநர் உரிமம் பெற ஏற்கனவே இருக்கும் நடைமுறைகள் என்ன?

பொதுவாக ஓட்டுநர் உரிமம் பெற 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 18 வயது நிரம்பியவர்கள் 50CCக்கு அதிகமான கியர் வாகனங்கள் ஓட்டுவதற்கு விண்ணப்பிக்கலாம். 16 வயதுடையவர்கள் 50 CCக்கு கீழ் உள்ள கியர் இல்லாத வாகனங்கள் ஓட்ட விண்ணப்பிக்க முடியும்.

இதற்கு முகவரி ஆதார சான்று வேண்டும். அத்துடன் வயது ஆதார சான்று மற்றும் புகைப்படங்கள் தேவைப்படுகிறது.

முதலில் பழகுநர் உரிமம் பெற வேண்டும். அது ஆறு மாதங்களுக்கு மட்டும் வழங்கப்படும். இந்த உரிமத்தைக் கொண்டு ஆறு மாதங்களுக்குள் ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும். ஒருவேளை அதைத் தவறவிட்டால், மீண்டும் பழகுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.கோப்பு படம்

ஓட்டுநர் உரிமத்திற்குச் செல்கையில், அங்கிருக்கும் அதிகாரி உங்களின் வாகனம் ஓட்டும் திறனைப் பரிசோதிப்பார். இருசக்கர வாகன ஓட்டிகளை 8 போட அறிவுறுத்துவார், நான்கு சக்கர வாகனத்திற்கு காரில் அதிகாரி ஏறிக்கொள்வார். அவர், நீங்கள் வாகனத்தை இயக்கும் விதத்தைக் கண்காணிப்பார்.

அதாவது வேகத்திற்கு ஏற்ப கியர் மாற்றுவது, பிரேக் பிடிப்பது, ஆக்ஸிலேட்டர் பயன்படுத்துவது, சிக்னலில் வாகனத்தை எப்படி நிறுத்துகிறீர்கள் என்று அனைத்தையும் கண்காணிப்பார்.

அதன்பின் எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில், நீங்கள் சாலையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளைப் பற்றியே கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். அதனைத் தொடர்ந்து கண்கள் பரிசோதனை செய்யப்படும். இந்த தேர்வுகள் அனைத்திலும் வெற்றிபெற்ற பின்னரே, உங்களுக்கான ஓட்டுநர் உரிமத்திற்கு ஒப்புதல் வழங்கப்படும்.

புதிய வரைமுறை

புதிய ஓட்டுநர் உரிமத்திற்கான வரைமுறையில் இது முற்றிலும் மாறுபடுகிறது. நீங்கள் பயிற்சிபெறும் மையத்திற்கு நேரடியாகச் சென்று பயிற்சி பெற்றுவிட்டால், உங்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். ஒருவேளை அந்த மையத்தின் கட்டுப்பாடுகளின்படி, தேர்வுகள் ஏதேனும் நடத்தப்படலாம்.

மத்திய அரசின் புதிய நடைமுறை குறித்து தோழன் அமைப்பைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, "இந்த நடைமுறை மிகவும் தவறானது. தற்போது, அரசின் கட்டுப்பாட்டுக்குள் ஓட்டுநர் பயிற்சி வழங்கப்படவில்லை. தனியாரிடமே, பலரும் ஓட்டுநர் பயிற்சி எடுத்து வருகின்றனர். தனியாரிடம் பயிற்சி எடுத்த பலரும் முறையாகக் கற்றுக்கொள்ளாமல் உரிமம் பெற்றுச் செல்கின்றனர். அவர்கள், தனியாரிடம் கற்றுக்கொள்ளட்டும், ஆனால் அவர்களுக்கு உரிமம் கொடுக்கும்போது அரசு கண்காணிக்க வேண்டும். அவ்வாறு கண்காணிக்கவில்லை என்றால் அடுத்தடுத்து விபத்துக்களைச் சந்திக்க வாய்ப்புள்ளது.இராதாகிருஷ்ணன்

அதிகம் விபத்து ஏற்படுத்திய நபருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கிய அதிகாரியைக் கண்காணித்து பதவியில் பின்னடைவு வழங்கக் கோரிக்கை வைத்துள்ளோம். இதன் மூலம், சரியாக வாகனம் ஓட்ட தெரியாத நபர்கள் சாலையில் வருவது குறைந்துவிடும். ஆனால், தற்போது செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள நடைமுறை மிகவும் தவறானது. இதனால் வாகன உற்பத்தியும், வியாபாரமும் தான் அதிகரிக்கும்.

பெரிய பெரிய நிறுவனங்கள் வாகனம் ஓட்ட நன்றாகக் கற்றுத்தருகிறோம், வாகனத்தில் விபத்தைக் குறைக்க கற்றுத் தருகிறோம் என்று வழிமுறைகளைக் கூறுவர். இது அரசாங்கத்தால் கண்காணிக்கப்படுமா என்றால், நிச்சயம் நடக்காது.

இதன் மூலம் சிறிய சிறிய ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் முற்றிலும் பாதிக்கப்படும். மத்திய அரசு கொண்டுவரும் சட்டத்தைக் கடைப்பிடிக்கும் பெரிய நிறுவனங்களை நோக்கி அனைவரும் செல்ல நேரிடும். இதனால், ஊழலுக்கே வழிவகுக்கும்." என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment