Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, February 25, 2021

ஆயுளை அதிகரிக்கும் "வாழை இலை உணவு".!!!





வாழை இலையில் உணவைச் சாப்பிடுவது நமது கலாசாரம் மட்டுமின்றி ஆரோக்கியமானது, ருசியானது, ஆயுளை வளர்க்கும் நல்ல பழக்கமும் கூட. மேலும் தோலுக்குப் பளபளப்பைக் கொடுத்து, செரிமானக் குறைபாடு, பலகீனம், உடல்வலி, நாள்பட்ட சளி, ருசியின்மை ஆகியன நீங்கும் என சித்த மருத்துவம் சொல்கிறது.மேலும், அது வாழை இலையில் சாப்பிடும் முறையையும் சொல்கிறது. 

சாப்பிடும் முன் தரையில் லேசாக நீர் தெளித்து இலையின் நுனி, உண்பவரின் இடப்பக்கமும், அடிப்பகுதி வலப்பக்கமும் இருக்குமாறு விரிக்க வேண்டும். பின்பு, இலையில் சிறிது நீர் தெளித்து கையால் துடைத்து, ஒரு சொட்டு நெய் இலையில் தடவி அதன்மேல் உணவு பதார்த்தங்களைப் பரிமாற வேண்டும்.இலை நுனிப்பகுதியில் இருந்து முதலில் உப்பு, ஊறுகாய், பச்சடி, பொரியல், கூட்டு, வடகம், வடை, அப்பளம் போன்றவற்றை வரிசையாகவும், நடுப்பகுதியில் சாதம், பருப்பு அதன் மேல் நெய் விட்டு தொன்னைகளில் தனித்தனியே குழம்பு, ரசம், பாயாசம், மோர் வைக்க வேண்டும் எனவும் சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.

உறவினர்களை மேற்கு திசை நோக்கி அமர்த்தியும், சாதுக்கள், ஞானிகளை வடக்கு நோக்கி அமர்த்தியும் உணவு பரிமாற வேண்டும். கெட்டுப் போன அல்லது விஷம் கலந்த உணவுகளை வாழை இலையில் வைத்தால் இலையின் மேற்புறத்தில் ஒரு புதிய நிற நீர் உற்பத்தியாகி இலையில் ஒட்டாமல் வடிந்துவிடும்.இதனை வைத்து உணவின் விஷத்தன்மையை அறியலாம். ஆகையால் தான் எதிரி விருந்துக்கு அழைத்தாலும் தலை வாழை இலையில் தைரியமாக சாப்பிடலாம் என முன்னோர்கள் கூறினார்கள்.

அல்சர் நோயினால் பாதிப்படைந்தவர்கள் தொடர்ந்து வாழை இலையில் சாப்பிட்டால் இரைப்பை மற்றும் முன் சிறுகுடலில் உள்ள புண்களைக் கரைத்து புதிய செல்களைத் தோற்றுவிக்கும் தன்மை வாழை இலைக்கு உண்டு.ஆகையால் தான் தீக்காயம் ஏற்பட்டால், அந்த இடத்தில் வாழை இலையால் சுற்றுவது வழக்கம். உணவு சாப்பிட்ட பின் இலையை நம்மை நோக்கி மடிக்க வேண்டும். இதற்கு உணவு நன்றாக இருந்தது. 

நம் உறவு நீடிக்க வேண்டும் என்று அர்த்தம்.சித்த மருத்துவம் சொன்ன நன்மைகளை பார்த்தோம். இனி நமது அறிவியல் சொல்லும் நன்மைகளை பார்ப்போம். நாம் சாப்பிடப் பயன்படுத்தும் வாழை இலையில் உடல் எடை கூடாமல் தடுக்கும் நார்ச்சத்து, உப்புகளை சரியாக வைத்திட பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம் மற்றும் செம்புச் சத்துகள், கண்களைப் பாதுகாத்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் குடற்புண்களை ஆற்றும் பீனால், ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும் வைட்டமின் கே, புற்றுநோய் காரணிகளை அழிக்கும் சாலிசிலிக் அமிலம் ஆகியவை உள்ளன. 

அதனால் வாழை இலையில் உண்பது ஆரோக்கியம் என்கிறது அறிவியல்.வாழை இலையில் நீர் தெளித்து, அதன்மேல் நெய் தடவி சூடான உணவுகளை வைக்கும் போது மேற்கண்ட சத்துக்களெல்லாம் குளோரோபில்லுடன் கரைந்து, உணவுடன் கலந்து வருவதால் தொண்டையில் தோன்றும் அலர்ஜியைத் தடுத்து நம் ஆயுளைக் கூட்டுகிறது என்றும் கூறுகிறது. அதனால் வாழை இலையில் சாப்பிட்டு ஆரோக்கியத்தைக் கூட்டுவோம்.

No comments:

Post a Comment