Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 15, 2021

பள்ளிக் கல்வித்துறை ஊழியர்களுக்கு ஏப்.16, 17-ல் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் கரோனா தடுப்பூசி இட்டுக் கொள்ள ஆர்வம் காட்டாததையடுத்து, ஆட்சியரின் உத்தரவின் பேரில் நாளையும், நாளை மறுநாளும் (ஏப்.16, 17) சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் திருச்சி, லால்குடி, முசிறி, மணப்பாறை ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த 4 கல்வி மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என 12,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.

தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஏற்கெனவே கரோனா தடுப்பூசி இட்டுக் கொண்டுள்ள நிலையில், பிறரில் பெரும்பாலானோர் கரோனா தடுப்பூசி இட்டுக் கொள்ளவில்லை.

இதனிடையே, கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் அனைத்து நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி இட்டுக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே அறிவுறுத்தினார்.

ஆனாலும், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத 12,000 பேரில் இதுவரை சுமார் 3,000 பேர் வரை மட்டுமே கரோனா தடுப்பூசி இட்டுக் கொண்டுள்ளனர். இதையடுத்து, திருச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் அனைவரும் கரோனா தடுப்பூசி இட்டுக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்கள், அனைவருக்கும் கல்வித் திட்ட உதவித் திட்ட அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு அவர் இன்று அனுப்பிய உத்தரவு விவரம்:

''திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கரோனா தடுப்பூசி இட்டுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளார்.

கரோனா தடுப்பூசி இட்டுக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறியும், பெரும்பாலான பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரியவருகிறது.

எனவே, கரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு கல்வி மாவட்ட அளவில் இன்றும் (ஏப்.16), நாளையும் (ஏப்.17) சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment