Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, April 10, 2021

கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு வரும் 16ம் தேதி தொடக்கம்

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த ஜனவரி மாதம் முதல் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. குறைந்தகால இடைவெளி இருப்பதால் பாடத்திட்டத்திலும் வெகுவாக பாடங்கள் குறைக்கப்பட்டு அதன்படி பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், மே 3ம் தேதி தேர்வுகள் தொடங்குவதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டு மாணவர்கள் அதற்காக தயாராகி வருகின்றனர்.

தற்போது, இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் பிளஸ்2 தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்னும் தெளிவாக வெளியாகாத நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்தும் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு குறிப்பிட்ட தேதியில் நடக்குமா ஒத்திப்போகுமா என்று சந்தேகம் நீடித்து வருகிறது. இந்நிலையில் தான், பிளஸ் 2 செய்முறை தேர்வுகளை 16ம் தேதி தொடங்கி 24ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்முறை தேர்வுகள் இரண்டுகட்டமாக 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஒரு கட்டமாகவும், 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்முறை தேர்வுக்காக சென்னையில் 413 பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. செய்முறைத் தேர்வின் போது கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், அரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

மைக்ரோஸ் கோப் பயன்படுத்த தடை

பிளஸ் 2 வகுப்பு செய்முறைத் தேர்வுக்கு கொரோனா தடுப்புக்காக 23 வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் நடக்கும் அனைத்து மையங்களிலும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் தூய்மைப் பணிகள் செய்ய வேண்டும். மாணவர்கள் இடையே சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். செய்முறை தேர்வில் ஒவ்வொரு பிரிவிலும் 25 மாணவர்களுக்கு குறையாமல் பங்கேற்க செய்ய வேண்டும். மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும், அதற்கான தேதியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் முடிவு செய்து அறிவிக்க வேண்டும்.

கொரோனா பாதிக்கப்பட்ட மண்டலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு வேறு பள்ளிகளில் தேர்வு நடத்த வேண்டும். வேதியியல் செய்முறை தேர்வில் பிப்பெட் உபகரணத்தை மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது, வாய் வழியாக ரசாயனங்களை உறிஞ்சும் கருவிகளை மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது. அதேபோல, தாவரவியல் மற்றும் உயிரியல் பாட செய்முறைத் தேர்வில் மைக்ரோஸ்கோப்பை மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்க கூடாது. அதில் மாணவர்கள் கண் வைத்து பார்க்க வேண்டி இருப்பதால், மைக்ரோஸ்கோப்புக்கு தடை விதிக்க வேண்டும். இது போல 23 விதிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment