Monday, April 5, 2021

தமிழ்ப் புத்தாண்டு பொதுப் பலன்கள்

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

பிலவ வருடப் பலன்கள்: தமிழ் வருடங்கள் 60-இல் தற்சமயம் நடப்பிலிருக்கும் 34-ஆவது ஆண்டான சார்வரி ஆண்டு, பங்குனி மாதம் 31-ஆம் தேதி (13/14.04.2021) பின்னிரவு 02.35.04 (ஐஎஸ்டி)மணியளவில் முடிவடைந்து, 35-ஆவது ஆண்டான பிலவ ஆண்டு, சித்திரை மாதம் ஒன்றாம் தேதி பிறக்கிறது.

இந்த பிலவ வருடம் மகர லக்னத்தில், மேஷ ராசியில், சுக்கிர பகவானின் நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. லக்னம், தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கும் அதிபதியான சனி பகவான் லக்னத்தில் சந்திர பகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். லக்ன கேந்திரத்தில் ஆட்சி பெற்றுள்ள சனிபகவான் பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான சச மஹா யோகத்தைப் பெறுகிறார்.

லக்னமும், லக்னாதிபதியும் நன்றாக அமைந்திருந்தால்தான் மற்ற கிரகங்களால் உண்டாகும் யோக பலன்கள் பரிமளிக்கும் என்பது ஜோதிட விதி. அதாவது, பன்னிரண்டு பாவங்கள் இருந்தாலும் ஜாதகர் அடையப்போகும் சுக துக்கங்களில் 50சதவீதம் வெளிப்படுத்துவது லக்னமாகும் என்றால் மிகையாகாது.

"சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை; கெடுப்பாரும் இல்லை' என்பது ஜோதிட மொழி. சனி பகவான் சுப பலத்துடன் இருப்பதால் இந்த ஆண்டு மேன்மையான பலன்கள் உண்டாகும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இத்தகைய அமைப்பினால் நமது நாட்டைப் பலரும் பாராட்டுவார்கள். உலக அரங்கில் மிக உயர்ந்த பொறுப்புகளும் கிடைக்கும். இரண்டாம் வீட்டோன் வலுத்திருப்பதால் அந்நியச் செலாவணியின் இருப்பு உயரிய நிலையை எட்டிவிடும்.

நம் நாட்டை பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்த நாடுகள் நமது பரோபகாரச் செயல்களின் விளைவுகளால் அடங்கி விடுவார்கள். ஐக்கிய நாடுகள் அமைப்பிலும், உலக சுகாதார நிறுவனத்திலும் நமது குரலுக்கு புதிய மதிப்பு உண்டாகும்.

உள்நாட்டு உற்பத்தி உயரும். பூமிக்கு அடியில் கிடைக்கும் பொருள்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். குறிப்பாக, காரீய உலோகத்தினால் உயரிய மதிப்பு உண்டாகி, அது சம்பந்தமான தொழில்கள் உயர்வடையும். முடங்கிக்கிடந்த தொழில்களும் அரசாங்கக் கொள்கை முடிவினால் இயங்கத் தொடங்கும். வல்லரசு நாடுகளும் நமது பேச்சுக்குச் செவி சாய்க்கும்.

தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார்.

தனகாரகரான குரு பகவான் தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. இதனால் அன்னிய நாடுகளுக்குப் பொருளாதார வகையிலும் நமது நாடு உதவி செய்யும். விதண்டாவாதம் செய்பவர்களை புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி, சாதுர்யத்துடன் பேசி வெற்றி கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும்.

சிறு சிறு விஷயங்களிலும் அக்கறை காட்டுவதால் அனாவசிய விரயங்களும் ஏற்படாது. ஆன்மிக விஷயங்கள், தெய்வ வழிபாடுகளும் நிரம்ப நடக்கும். குரு பகவானின் ஐந்தாம் பார்வை ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டின் மீதும், அங்கு அமர்ந்திருக்கும் செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானின் மீதும் படிகிறது.

செவ்வாய் பகவான் பூமிகாரகராகி குரு பகவானின் அருட்பார்வையைப் பெறுவதால் எல்லை பிரச்னைகளில் சுமுகமான தீர்வு கிடைக்கும்.

மக்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க காப்பீட்டுத் திட்டங்களும் நல்ல முறையில் செயல்படுத்தப்படும். குரு பகவானின் ஏழாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டின் மீதும் படிகிறது.

"குரு பார்க்க கோடி புண்ணியம்', "குரு பார்க்க கோடி பாவநிவர்த்தி' என்பார்கள். அதாவது குரு பகவானின் சுபத்துவத்தால் நமது நாடு எத்தகைய எதிர்ப்புகளையும் சமாளிக்கும் சக்தியைப் பெற்றுவிடும்!
குரு பகவானைப் பற்றிச் சொல்வதென்றால் அதற்கு எல்லை என்பதே கிடையாது. ஏனென்றால், எல்லையற்ற பரம்பொருளின் பிரதிநிதித்துவம் பெற்றவரல்லவா இந்த குரு பகவான்!

அவரின் பார்வையைப் பெற்றால் தானே இந்த உலகம் தழைத்து, கொழித்து, செழித்து விளங்க முடியும். அவரே புத்திர காரகராகவும் ஆவதால் நமது நாட்டு மாணவ, மாணவிகள் சிறப்பான சாதனைகளைச் செய்வார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான யோககாரகரான சுக்கிர பகவான் சுகம், கல்வி, வீடு, வாகன ஸ்தானமான நான்காம் வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான ரிஷப ராசியை அடைகிறார்.

ஒரு கேந்திரம், திரிகோணத்திற்கோ, ஒரு திரிகோணம், கேந்திரத்திற்கோ அதிபதிகளாக வரும் கிரகங்களுக்கு "யோக காரகர்' என்று பெயர் என்பதை அனைவரும் அறிந்ததே!

சுக்கிர பகவானின் அருட்பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டின் மீது படிகிறது. சுக்கிர பகவானே வாகன காரகராக ஆவதால், போக்குவரத்துத் துறை நவீன மயமாக்கப்படும். வாகனங்கள் புதிய பாதுகாப்பு சாதனங்களைக் கொண்டு உருவாக்கப்படும். "குறைந்த விலையில் அனைவருக்கும் வாகனம்' என்கிற நிலை உருவாகும். நெடுநாளாக நலிவுற்றிருந்த நூல், ஜவுளி சம்பந்தப்பட்ட தொழில் வேகமாக வளர்ச்சி அடையும். வெள்ளி உலோகத்தையும் பயன்படுத்தும் துறைகள் வளர்ச்சி காணும்.

விவசாயம் விருத்தி அடையும். சுக்கிர பகவான் பிராணிகளுக்கும் காரகத்துவம் வகிப்பாராகையால், மாடு, கன்றுகளை வைத்துப் பராமரிப்பவர்கள், பால் உணவு சம்பந்தப்பட்ட துறைகளும் வளர்ச்சி அடையும். சிமெண்ட் துறையும் துரித வளர்ச்சி அடையும். ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான், தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சுய சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்பராசியை அடைகிறார். மீன ராசியில் உச்சம் பெறும் சுக்கிர பகவான் சந்திர கேந்திரத்தில் அமர்ந்திருப்பதால், புத பகவானுக்கு "நீச்சபங்க ராஜயோகம்' உண்டாகிறது.

புத பகவான் நேர் பார்வையாக தன் ஆட்சி, உச்சம் மூலத் திரிகோண வீடான, பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டைப் பார்வை செய்கிறார். நமது நாட்டு தூதுவர்களின் சாதுர்யமான பேச்சு எதிரிகளுக்குத் தக்க பதிலடியாக அமையும். பன்னாட்டு நீதிமன்றத்திலும் நமது நாட்டிற்கு முக்கிய பிரதிநிதித்துவம் கிடைக்கும். வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டிருந்த விலைமதிப்பற்ற கடவுள் சிலைகள் திரும்ப நமது நாட்டிற்கு வந்து சேரும்.

புள்ளியியல் துறையில் ஒரு குறிப்பிட்ட புதுமையான வழிமுறையைக் கண்டுபிடித்து உலகிற்கு அறியப்படுத்தும் யோகமும் உண்டாகும். சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் சுய சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். லக்னத்திற்கு நான்காம் வீடான கேந்திர ஸ்தானத்திற்கு அதிபதியாக சுபாவ அசுப கிரகமான செவ்வாய் பகவான் அமைவதால் அவர் லக்ன சுபராகவே கருதப்படுகிறார்.

சர லக்னத்திற்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் வீடு பாதக ஸ்தானமாகவும் அமைவதால் அந்த வீட்டுக்குரிய கிரகம் மறைவு பெற்றிருப்பது சிறப்பாகும். அதோடு அவரை குருபகவான் பார்வை செய்வது "பருத்தி புடவையாய்க் காய்த்தது' என்பார்களே அதுபோல் நன்மைகள் கூடிவிடும்.

செவ்வாய் பகவான் பொறியியல் துறைக்கும் காரகம் வகிக்கிறார் என்பதை அனைவரும் அறிந்ததே! துணிவு, நுண்ணிய அறிவுக்கும் காரணமாவதால் பொறியியல் துறை சிறப்பாக வளர்ச்சி அடைந்து, பல கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து, உள்நாட்டு உற்பத்தி குறித்த இலக்கினை எட்டிவிடும். நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கு அதிபதியான சந்திர பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். ஏழாம் வீடு என்பது சட்டப்பூர்வமான பிணைப்பாகும். இந்தப் பிணைப்பால் நமது நாட்டின் நட்பு பல நாடுகளுக்கு விரிவடையும் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதோடு அடிக்கடி செய்யும் பயணத்தையும் குறிக்கும்.

இந்தப் பிலவ ஆண்டில் நமது நட்பு நாடுகளால் சந்தோஷமும், அமைதியும் உண்டாகும். ஏழாம் வீடு நீர் ராசியாகவும், சர ராசியாகவும், அந்த வீட்டுக்கு அதிபதி சர ராசியில் யோகாதிபதியின் சாரத்தில் இருப்பதால் நீரால் சூழப்பட்ட நாடுகள், செழிப்பான தீவுகளைக் கொண்ட நாடுகளின் நட்பு உயர்வைத் தரும். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டுக்கு அதிபதியான சூரிய பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே இடத்தில் அமரும் நிலை) உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். சூரிய, சந்திர பகவான்களுக்கு அஷ்டமாதிபத்ய தோஷம் இல்லை என்பது ஜோதிட விதி!

மகர லக்னத்திற்கு சூரிய பகவான் அஷ்டமாதிபதியாக வருவதால் அஷ்டமாதிபத்ய தோஷம் ஏற்படாமல் மாறாக நன்மைகளே உண்டாகிறது என்பதும் அனுபவ உண்மை.

ராகு பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் சந்திர பகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் லக்ன சுபரான புத பகவானின் வீடான மிதுன ராசியை அடைகிறார்.

கேது பகவான் லாப ஸ்தானத்தில் புத பகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் குரு பகவானின் மூலத் திரிகோண ராசியான தனுசு ராசியை அடைகிறார்.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

கல்விச் செய்திகள்

Featured News