Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, May 19, 2021

10ஆம் வகுப்பு மதிப்பெண்களை மதிப்பிடப் பள்ளிகளுக்குக் கால அவகாசம் நீட்டிப்பு: சிபிஎஸ்இ அறிவிப்பு

பள்ளிகள் 10ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை அட்டவணைப்படுத்தவும், சிபிஎஸ்இ வாரியத்தில் சமர்ப்பிக்கவும் கால அவகாசத்தை நீட்டித்து சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். இதனால் நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வுகள் அனைத்தும் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று ரத்து செய்யப்பட்டன.

மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையைக் கணக்கிடப் புதிய முறையை சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்டது. அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்கள் ஏதாவது ஒரு மாணவருக்கு மனநிறைவைத் தரவில்லை என்றால், அந்த மாணவர் தனிப்பட்ட முறையில் பள்ளிக்குச் சென்று முறையிட்டுத் தேர்வு எழுதிக்கொள்ளலாம். அதற்கான சூழல் இருந்தால் தேர்வுகள் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி 20 மதிப்பெண்கள் அக மதிப்பீடாக வழங்கப்படும். ஓராண்டு முழுவதும் தேர்வுகள் அல்லது மதிப்பீடுகள் மூலம் அளவிடப்பட்ட மாணவரின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு 80 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பள்ளிகளில் மதிப்பெண்களை மதிப்பிட்டு, அட்டவணைப்படுத்த 8 பேர் அடங்கிய குழு அமைக்க வேண்டும் என்றும் அதில் பள்ளி முதல்வருடன் 7 ஆசிரியர்கள் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. கணிதம், அறிவியல், சமூக அறிவியல், இரு மொழிப் பாடங்களுக்குத் தலா 5 ஆசிரியர்கள், அருகில் உள்ள பள்ளிகளில் இருந்து 2 ஆசிரியர்கள் மதிப்பெண்களை மதிப்பிடுவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட சில மாணவர்கள், ஆண்டு முழுவதும் மதிப்பிடப் போதிய அளவு தேர்வில் கலந்து கொள்ளவில்லை என்ற சூழலில் ஆன்லைன் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவே செயல்திறனை மதிப்பீடு செய்யலாம் என்றும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியது.

இந்த நடைமுறையில் 10ஆம் வகுப்பு மதிப்பெண்களைக் கணக்கிட்டு அட்டவணைப்படுத்தி, ஜூன் 11ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தியது. ஜூன் 20ஆம் தேதி மதிப்பெண் பட்டியலுடன் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் பள்ளிகள் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை அட்டவணைப்படுத்தவும், சிபிஎஸ்இ வாரியத்தில் சமர்ப்பிக்கவும் கால அவகாசத்தை நீட்டித்து சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறும்போது, ''தொற்றுப் பரவலின் தீவிரத்தால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனாலும் ஆசிரியர்கள், ஊழியர்களின் பாதுகாப்பு கருதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ வாரியத்திடம் 10ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசித் தேதி ஜூன் 30 ஆகும். மீதமுள்ள பிற செயல்பாடுகளுக்குத் தேர்வு முடிவுகளை வெளியிடும் குழு, கால அட்டவணையைத் தயாரித்து வெளியிடும்'' என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment