JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
உயர் ரத்த கொதிப்பு பிரச்சனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே 17ம் தேதி உலக ரத்த கொதிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சனை பொதுவாக வரக்கூடியது என்றாலும் முன்கூட்டியே கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் மரணத்தையும் ஏற்படுத்திவிடும். மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கம், மன அழுத்தம் மற்றும் வயது ஆகியவை உயர் ரத்த கொதிப்புக்கான காரணமாக கூறப்படுகிறது. உலகளவிலான பொது சுகாதாரப் பிரச்சனையாக கருதப்படுவதால் உயர் ரத்தக் கொதிப்பு குறித்து 2005ம் ஆண்டு முதல் உலக சுகாதார மையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
உயர் ரத்த அழுத்தம்
ரத்த அழுத்தம் என்பது உடல் முழுவதும் தேவையான ரத்தத்தை எவ்வளவு வேகத்தில் செலுத்துகிறது என்பதன் அளவீடாகும். ரத்த நாளங்களின் செயல்பாட்டுக்கு வேகமாக இதயம் ரத்தத்தை உந்தப்படும்போது, அதற்கு கூடுதலான ஆற்றல் தேவைப்படுகிறது. அந்த ஆற்றல் உயர் ரத்த அழுத்தத்துக்கு காரணமாக அமைகிறது. ஒருவருக்கு ரத்த அழுத்தமானது 140/90 என்ற அளவில் இருந்தால் உயர் ரத்த அழுத்தமாகும். 180/120 என்பது மிகவும் ஆபத்தான அளவு என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ரத்த அழுத்தமும்.. உப்பும்
உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் உப்பு முக்கிய பங்கு வகிப்பதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் உப்பு, தண்ணீர் குடிக்கும் அளவை அதிகப்படுத்துவதாக கூறும் மருத்துவர்கள், இது இதயம் செலுத்தும் ரத்தத்தின் அளவில் அழுத்தத்தை உண்டாக்குதாக தெரிவித்துள்ளனர். குழம்புகளில் இருக்கும் உப்புகளைத் தவிர, மிக்சர், முறுக்கு போன்ற கார உணவு நொறுக்குத் தீனிகளிலும் உப்பு அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும். இனிப்புகளிலும் உப்பு இருக்கும் என்பதால் நீங்கள் சாப்பிடும் உணவில் கவனம் தேவை.
கோவிட் மற்றும் உயர் ரத்த அழுத்தம்
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் 2வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஏற்கனவே பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் உயிரிழந்து வருகின்றனர். நீரிழிவு நோய், இதய பிரச்சனை, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை எடுப்பவர்களை கொரோனா வைரஸ் அதிகம் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தீவிர சிகிச்சையினால் அவர்கள் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தாலும், கொரோனாவுக்கு பிந்தைய உடல் உபாதைகளால் பாதிக்கப்படுவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.
இதனால், வரும்முன் காப்பது மட்டுமே மிகச்சிறந்த தடுப்பு மருந்து என்பதால், மேற்குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றவர்களைவிட கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த ஆண்டு ரத்தக் கொதிப்பு நாள் விழிப்புணர்வு பிரச்சாரமாக, ரத்த அழுத்தத்தை சரியாக அளவிட்டு, கட்டுப்படுத்தி, நீண்ட நாட்களுக்கு வாழ்வோம் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. ரத்தக் கொதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், தியானம், சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை கடைபிடிக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment