Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, May 18, 2021

இன்னைக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க?

சிறுநீரகக் கல்

வெயில் காலம் வந்துவிட்டது, இந்நேரத்தில் ஒழுங்காக தண்ணீர் பருகாமல் போனால் அது நம் சிறுநீரகத்தை வெகுவாக பாதிக்கும் என்பது நாம் அறிந்ததே. இதன் நீண்ட கால விளைவுதான் கிட்னியில் தோன்றும் கற்கள்.

ஆண்கள், பெண்கள், ஏன் ஓடியாடித் திரியும் குழந்தைகளுக்குக் கூட இப்போதெல்லாம் சிறுநீரகக் கல் பாதிப்பு ஏற்படுகிறது.

வெயில் காலத்தில் வியர்வை மற்றும் மூச்சு மூலம் நிறைய நீர்ச்சத்தை இழக்கிறோம். இதனால் உடலின் கழிவுகள் மற்றும் தேவையற்ற தாது உப்புகளை வெளியேற்றத் தேவையான நீர் இல்லாமல் சிறுநீரகம் கஷ்டப்படுகிறது. தாது உப்புகள் சிறுநீரகத்திலேயே தேங்கி நாளடைவில் சிறு சிறு கற்களாக உருமாற்றம் அடைகின்றன.

இந்தக் கற்கள் சிறுநீரகத்தை விட்டு வெளியேறி, சிறுநீர்ப்பாதையை அடைக்கும்போது பின்புற விலாப் பகுதியிலிருந்து ஆரம்பித்து பிறப்புறுப்பு வரை தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. சிறுநீர் வருவது போன்ற உணர்வு இருக்கும் ஆனால் சிறுநீர் வராமல் இருப்பது, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்/வலி, அங்கே ரத்தம் கசிதல், வாந்தி, காய்ச்சல், குளிர், நடுக்கம், சோர்வு போன்றவை இதன் பிற அறிகுறிகள் ஆகும்.

இளமையில் கல்.

வெயிலில் சுற்றும் / வேலை செய்யும் 20-40 வயது ஆண்களில் சிறுநீரகக் கல் பிரச்னை அதிகம் வருவதைக் காண்கிறோம். அல்ட்ராசவுண்ட், சி.டி ஸ்கேன் மூலம் கல்லின் அளவும் பாதிப்பும் அறியப்படுகிறது. லேப் பரிசோதனையில் சிறுநீரில் ரத்தம், நோய்த்தொற்று இருக்கிறதா என்று கண்டறியப்படுகின்றன.

சிகிச்சைகள்.

60-70% நோயாளிகளில், மாத்திரை மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் மூலமே கற்களைக் கரைத்துவிட முடியும். காய்ச்சல்/வாந்தி போன்ற அறிகுறிகள் இல்லாமல் சிறுநீரகத்தின் உள்ளே அல்லது மூத்திரப் பை அருகே சிறிய கல் இருந்தால் ஒரு மாதம் வரை மருந்துகள் கொடுத்து கல் வெளியேற்றப்படுகிறது. இதுபோன்ற நோயாளிகளைக் குறைந்தது 3-4 லிட்டர் தண்ணீர் அருந்துமாறு அறிவுறுத்துகிறோம்.




பொதுவாக, எப்போதும் சிறுநீர் தண்ணீர் போன்ற நிறத்திலேயே இருக்க வேண்டும். மஞ்சள், பழுப்பு என்று நிறம் மாறுபட்டால் இன்னும் போதிய அளவு நீங்கள் தண்ணீர் அருந்தவில்லை என்று அர்த்தம். இது 95% பேருக்கு பொருந்தும். ஆனால் இதய நோயாளிகள், சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் இவ்வளவு தண்ணீர் அருந்தக்கூடாது, அவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே நீர் அருந்த வேண்டும்.

வலியைக் குறைக்க வலி நிவாரணிகள், வலியின்றி சிறு கற்கள் வெளியேறவும், சிறுநீரிலேயே கல் கரைந்திடவும் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. தீராத வலி/பிற தீவிர அறிகுறிகளுடன் வருவோர்க்கு உடனடி சிகிச்சையாக எண்டோஸ்கோப்பி லேசர் சிகிச்சை வழங்கப்படுகிறது. 'டே கேர்' செயல்முறை, அதாவது காலையில் எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்துகொண்டு அன்று மாலையோ அல்லது மறுநாள் காலையோ வீடு திரும்பலாம். இந்த நவீன சிகிச்சையில் வலி இல்லாமல், தழும்புகள் இல்லாமல் கற்களை அகற்றிவிட முடிகிறது. மிக மிகத் தீவிரமான நிலையை எட்டிய நோயாளிகளுக்கு மட்டுமே லேப்பரோஸ்கோப்பி/ஓப்பன் சர்ஜரி எல்லாம் தேவைப்படும், ஆனால் இவை மிக மிக சொற்பமே!

கேல்சியம் ஆக்சலேட், யூரிக் ஆசிட், நோய்த்தொற்றினால் ஏற்படும் மிருதுவான மேட்ரிக்ஸ் கற்கள் போன்றவை சிறுநீரகக் கற்களின் சில வகைகளாகும். சிறுநீரகக் கற்களால் தொற்றும், தொற்றால் சிறுநீரகக் கற்களும் வர வாய்ப்புண்டு. குரோன்ஸ் டிசீஸ் (Crohn's disease) போன்ற குடல் பிரச்னை உள்ளோர்க்கு சிறுநீரகத்தில் கல் ஏற்பட வாய்ப்புண்டு. மேலும், சிறுநீரகக் கல் பிரச்னையைக் கவனிக்காமல் விட்டால் நாளாக ஆக உடலின் பிற உறுப்புகள் பாதிப்படையக்கூடும்.

வராமல் தடுத்துக்கொள்ள சில வழிகள்!

* ஒருநாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள்.

* அதிக உடல் உழைப்பில் ஈடுபடுவோர், உடற்பயிற்சி செய்வோர், மாரத்தான் வீரர்கள், களத்துக்குச் செல்லும் முன்னரே தேவையான நீர் அருந்த வேண்டும். கையில் எப்போதும் தண்ணீர் பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

* ஊறுகாய், அப்பளம், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற உப்பு அதிகமான உணவுகளைக் குறைக்கவும்/தவிர்க்கவும்.

* குழந்தைகளுக்கு அதிக நொறுக்குத்தீனி/ஜங்க் ஃபுட் கொடுத்து பழக்கக்கூடாது.

* கிட்னி பிரச்னை உள்ளவர்கள் இறைச்சி உணவுகளைக் குறைத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.

* உயரத்துக்குத் தேவையான எடையைப் பராமரிக்க முயற்சிக்கவும்.

* டி.பி. சொரியாசிஸ், எச்.ஐ.வி. மருந்துகளாலும் கிட்னியில் கல் வரலாம். மருத்துவரிடம் இதுகுறித்து கேட்டு அறிந்துகொள்ளுங்கள்.

* ஏற்கெனவே சிறுநீரகக் கல் அகற்றப்பட்டவர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை செக் அப் செய்துகொள்வது நல்லது.

தோராயமாக, சிகிச்சை எடுத்துக்கொண்ட 100 நோயாளிகளில் 50 பேருக்கு, 10 வருடங்கள் கழித்து சிறுநீரகக் கல் பிரச்னை மீண்டும் வருவதைக் காண்கிறோம். வாழ்வியலில் மாற்றத்தைக் கொண்டுவரத் தவறுவதுதான் இதற்கு காரணம். தண்ணீர் ஒழுங்காக பருகினாலே இப்படி நடக்க வாய்ப்பில்லை. ஒருமுறை சிறுநீரகக்கல்லின் வலியால் அவதிப்பட்டவர்கள் மீண்டும் இந்தத் தவறை செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

'வாழ்வியல் மாற்றத்தால் பெண்களுக்கும், ஏன் குழந்தைகளுக்கும்கூட இப்போது சிறுநீரகக் கல் வருகிறது.'

கோவிட் பயம் வேண்டாம்.

கோவிட் காலத்தில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வீட்டிலேயே பெரும்பாலானோர் இருப்பதால், தேவையான அளவு தண்ணீர் பருகி உடல் நலன் மேல் அக்கறை செலுத்துகிறார்கள் என்று நம்புகிறேன். ஆனால், சிறுநீரகப் பிரச்னையை வைத்துக்கொண்டு, கோவிட் வந்துவிடுமோ என்ற பயத்தில் டாக்டரை அணுகாமல் இருப்பது மிக மிகத் தவறு.

கோவிட் இருந்தாலும்கூட சிறுநீரகத்தில் வலி, அடைப்பு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் கிலெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி போன்ற அவசரகால சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகளை நாட வேண்டும். முதலாம் கோவிட் அலையில், பயம் காரணமாக சிறுநீரகப் பிரச்னையைக் கவனிக்காமல் விட்டு, இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர்களைக் கோவிட் நேரத்திலும் குணப்படுத்தியுள்ளோம். எனவே, சிறுநீரக நோயாளிகள் சிகிச்சை எடுத்துக்கொள்ள எந்தவித பயமும் தயக்கமும் வேண்டாம்!

No comments:

Post a Comment