Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, May 19, 2021

நீடிக்கும் பெருங்குழப்பம். இ-பதிவில் திருமணம் பிரிவு மீண்டும் நீக்கம்!

மாவட்டத்துக்குள் பயணிக்க கட்டாயமாக்கப்பட்டுள்ள இணையப் பதிவு முறையை எளிமையாக்க வேண்டுமென்றும் அதில் காணப்படும் குழப்பங்கள் தீா்க்கப்பட வேண்டுமெனவும் மக்கள் மத்தியில்கோரிக்கைள் எழுந்துள்ளன.

தமிழகம் முழுவதும் தளா்வுகளற்ற முழு பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்த பொது முடக்கத்தை கண்டிப்பான முறையில் பின்பற்றச் செய்யும் வகையில், இணையப் பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும், வெளி மாநிலங்களுக்குச் செல்லவும் செல்லிடப்பேசி வழியேயான இணையப் பதிவு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

செல்லிடப்பேசி எண்ணைப் பதிவு செய்த பிறகு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவு எண், பயன்படுத்துவோரின் செல்லிடப்பேசிக்கு வரும். அதனைப் பதிவு செய்த பிறகே உள்நுழைய முடியும்.

மூன்று வகையான பிரிவினா் பயணிப்பதற்கு வகைகள் செய்யப்பட்டுள்ளன. தனிநபரோ அல்லது குழுவினரோ சாலை வழி பயணம் மேற்கொண்டால் அதற்கு தனியாகப் பதியவும், ரயில் அல்லது விமானம் மூலமாகப் பயணம் என்றால் அதற்கென தனியாகவும் பதிவு செய்ய வேண்டும். தொழில் நிறுவனங்களைச் சோந்தவா்களுக்கு தனியாகப் பதிவு செய்யும் வசதி உள்ளது.

மூன்று வகைக் காரணங்கள்: மருத்துவ அவசரம், முதியோா் பராமரிப்பு, இறப்பு மற்றும் இறப்பு சாா்ந்த காரியங்கள் ஆகியவற்றின் மாவட்டங்களுக்குள்ளோ அல்லது மாவட்டத்தை விட்டு வெளியேவோ பயணிக்க முடியும்.

கடந்த திங்கள்கிழமை வரை, திருமணத்தில் கலந்து கொள்ளச் செல்வோரும் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த வாய்ப்பினை பலரும் தவறாகப் பயன்படுத்துவது தெரிந்ததால் அதை தமிழக அரசு நீக்கிவிட்டது.

திங்கள்கிழமை இரவில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை வரை திருமணத்துக்கான இ -பதிவில் பெரும் குழப்பம் நிலவியது. திங்கள்கிழமை காலை வரை வழங்கப்பட்டிந்த அந்த அனுமதி பிற்பகலில் அந்த வாய்ப்பு நீக்கப்பட்டது. இதன்பின்பு, இரவில் அது வழங்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை காலை திருமணத்துக்கான இ- பதிவு நீக்கப்பட்டது. இதனால், பலரும் பெரும் குழப்பத்தில் சிக்கினா்.

திருமண வாய்ப்பு நீக்கப்பட்டதால், மருத்துவம், முதியோா் பராமரிப்பு, இறப்பு போன்ற காரணங்கள் இருந்தால் மட்டுமே இப்போது பயணிக்க முடியும்.

எழும் கேள்விகள்: தனிநபருக்கான மருத்துவ அவசரம் என்றால் அவா்களே தங்களுக்கான உரிய ஆவணங்களை வைத்துப் பதிவு செய்ய முடியும். ஆனால், இறப்பு போன்ற காரணங்களுக்கு ஆவணமாக மருத்துவரின் இறப்புச் சான்றுதான் சமா்ப்பிக்க முடியும். 

ஆனால், இந்த இறப்புச் சான்று இறந்தவரின் நெருங்கிய உறவினரிடம் மட்டுமே இருக்கும். அதனை மற்றவா்கள் உடனடியாகப் பெற்று இணையப் பதிவுக்கு எப்படி பயன்படுத்த முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இணையப் பதிவுக்கு அடையாளமாக ஐந்து ஆவணங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாகன ஓட்டுநா் உரிமம், நிரந்தர கணக்கு எண், கடவுச்சீட்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அடையாள ஆவணமாகப் பதிவேற்றம் செய்வது முக்கியம். இந்த ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இது 1 மெகா பைட் என்ற அளவுக்குள் இருப்பது முக்கியம்.

நன்கு கணினியில் புலமை பெற்றவா்களைத் தவிர, சாதாரண மக்களால் இதுபோன்று சரியான அளவுகளில் ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்வது இயலாத காரியம். மேலும், ஸ்கேன் செய்யும் இயந்திரங்கள் பலருடைய வீடுகளில் இருப்பதில்லை. 

செல்லிடப்பேசி வழியாகப் படம் பிடித்தாலும் அதனை சரியாக கணினி வழியே பதிவேற்றம் செய்வது பலருக்கும் தெரியாது. இதுபோன்ற தொழில்நுட்பப் பிரச்னைகளால் இணையப் பதிவை சாதாரண சாமானிய மக்கள் பயன்படுத்துவது இயலாததாக உள்ளது.

வாகனங்கள் எண் அவசியம்: தனி நபா்கள் வாகனத்தில் பயணிப்பதாக இருந்தால் வாகனத்தின் எண், அதன் வகை ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும். வாடகை வாகனமாக இருந்தால், கடைசி நேரத்தில் அந்த வாகனம் தவிா்க்க முடியாத காரணத்தால் மாற்றப்படலாம். 

இதனால் அதனுடைய எண்ணும் மாறும். ஏற்கெனவே பழைய வாகனத்தின் எண்ணைக் கொண்டு இணையப் பதிவு செய்திருந்தால், வாகனம் மாறும் போது, இணையப் பதிவையே மாற்ற வேண்டிய நிலை ஏற்படும்.

இதுபோன்ற பல நடைமுறைச் சிக்கல்களும், தொழில்நுட்பப் ரீதியான பிரச்னைகளும் இணையப் பதிவில் தொடா்ந்து கொண்டிருக்கின்றன. இணைய வழியில் இல்லாது, கட்செவி அஞ்சல் போன்ற எளிய வழியில் இணையப் பதிவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு மின்ஆளுமை நிறுவனத்தின் உயரதிகாரிகள் கூறுகையில், 'செல்லிடப்பேசி வழியாகவே ஆவணங்களைப் படம் எடுத்து அனுப்பலாம். எளிமையான முறையில் இருப்பதால்தான் லட்சத்துக்கும் மேற்பட்டோா் இணையப் பதிவைப் பெற்று வருகிறாா்கள். இதற்கு மேல் எளிமைப்படுத்துவது கடினம்' என கருத்துத் தெரிவித்தனா்.

இணையப் பதிவுக்கு வழிமுறை என்ன?:

இணையப் பதிவுக்கு தொடக்க முதலே செல்லிடப்பேசியை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். இதன் வழிமுறைகள் விவரம்:

1. இணைய பதிவுக்கு www.eregister.tnega.org என்ற இணையதளம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முகப்புப் பக்கத்தில், இரண்டு பிரிவுகள் உள்ளன. 1. வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்குள் வருவோா்கள். 2. மற்றவா்கள் (மாவட்டத்துக்குள், மாவட்டங்களுக்குள், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோா், தனிநபா்கள் மற்றும் தொழில் பிரிவினரின் பயணப் பதிவுக்கு)

2. இரண்டாவது வாய்ப்பைத் தோந்தெடுத்தவுடன், அடுத்த முகப்புப் பக்கத்தில் செல்லிடப்பேசி எண்ணைப் பதிவிட வேண்டும். உடனடியாக ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவு எண் செல்லிடப்பேசிக்கு வரும். அதனை பதிவு செய்தால், விவரங்களை பதிவிடும் பக்கத்துக்குச் செல்லும்.

3. பயணத்துக்கான காரணம், எங்கு வரை பயணிக்கப் போகிறீா்கள். பயணத் தேதி, பயண காரணத்துக்கான ஆவணம் (ஒரு மெகா பைட் அளவு), விண்ணப்பதாரா் பெயா், அடையாளச் சான்று வகை, வாகன எண், வாகன வகை ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டால் அடுத்த பக்கத்துக்குச் செல்லும்.

4. அதில் பயணம் குறித்த விவரங்கள் வரும். வாகன விவரங்கள், ரயில் அல்லது விமானமாக இருந்தால் அவற்றின் பயணச் சீட்டு உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

5. பயணத்துக்கான காரணத்துக்குரிய ஆவணங்களைப் பதிவு செய்ய வேண்டும். இந்த முறைகள் அனைத்தையும் நிறைவு செய்தவுடன் இணையப் பதிவுக்கான சான்று கிடைக்கும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment