Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, May 21, 2021

பள்ளி கல்வி இயக்குநர் பதவி உண்டா; இல்லையா? ஆசிரியர்களும், அதிகாரிகளும் குழப்பம்!

பள்ளி கல்வி இயக்குநர் என்ற பதவி உள்ளதா, இல்லையா என்ற அரசாணை வராததால், ஆசிரியர்களும், அதிகாரிகளும் குழப்பம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சியில், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. இதன்படி, பள்ளி கல்வித்துறையில் இயக்குநர் என்ற பொறுப்பில், முதல் முறையாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.இதற்கு ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பும், வரவேற்பும் உள்ளது.பள்ளி கல்வி தலைமை பொறுப்பில் நந்தகுமார் ஐ.ஏ.எஸ்., பொறுப்பேற்று உள்ளார்.

இவர் பள்ளி கல்வி இயக்குநர் பதவிக்கான, பணிகளை மேற்கொண்டுள்ளார்.ஏற்கனவே, பள்ளி கல்வி இயக்குநராக பணியாற்றிய கண்ணப்பன், எந்த பதவியில் அமர வேண்டும் என, தமிழக அரசு இன்னும் அரசாணை பிறப்பிக்கவில்லை.அதனால், அவர் எந்த பதவியில் பணியாற்ற வேண்டும்; தனக்கான அலுவலகம் எதுவென்று தெரியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளி கல்வி துறையின் தலைமை பொறுப்பில் இருந்த அதிகாரிக்கு, இடமாற்றமில்லை; பணியிடமில்லை; காத்திருப்பும் இல்லை என, வைத்திருப்பது இதுவே முதல் முறை என, பள்ளி கல்வி அதிகாரிகளும், ஆசிரியர்களும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

கமிஷனர் பொறுப்பு

அதேநேரத்தில், கமிஷனர் என்ற பொறுப்பில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி, இயக்குநரின் இடத்தில் பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே இருந்த இயக்குநர் என்ற பதவி உண்டா, இல்லையா; உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு தனியாக இயக்குநர் நியமிக்கப்படுவாரா என்றும், பள்ளி கல்வி துறையினர் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பள்ளி கல்வி செயலர் தீரஜ்குமார், தலைமை செயலர் மற்றும் முதல்வர் அலுவலக அதிகாரிகள் உரிய முடிவு எடுக்க வேண்டும்.பள்ளி கல்வியின் தலைமை பொறுப்பு மாற்றம் தொடர்பாக, தெளிவான அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது

No comments:

Post a Comment