Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 26, 2021

யாருக்கெல்லாம் பிளஸ் 2 மறு தேர்வு: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம்


கரோனா சூழல் சீரடைந்த பிறகு 3 வகையான மாணவர்களுக்கு பிளஸ் 2 மறு தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

''10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் இருந்து (உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களுடைய சராசரி) 50% மதிப்பெண்களும், 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் இருந்து (ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை (Written) மதிப்பெண் மட்டும்) 20% மதிப்பெண்களும், 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் இருந்து (Practical) / அக மதிப்பீடு (Internal) 30% மதிப்பெண்களும் எடுத்துக்கொள்ளப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதி இருந்தால் அதிகபட்ச மதிப்பெண் பெற்று இருப்பேன். இந்த முறையால் மதிப்பெண் குறைந்துவிட்டது என்று சொல்லும் மாணவர்களுக்காக விருப்பத் தேர்வை நடத்த முடிவு செய்துள்ளோம்.

சிபிஎஸ்இ வாரியத்தைப் போல கரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு விருப்பப்படும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். எனினும் அவ்வாறு நடத்தப்படும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்ணே அவர்களது இறுதி மதிப்பெண்ணாக அறிவிக்கப்படும்.

மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 30,000 தனித்தேர்வர்களுக்கும் மறு தேர்வு நடைபெறும்.

அதேபோல 11ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வு, அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு மற்றும் 12ஆம் வகுப்பு அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு ஆகிய தேர்வு நிலைகளில் ஒன்றில் கூட கலந்து கொள்ளாத மாணவர்கள் 603 பேர் உள்ளனர். அவர்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

அந்த வகையில் 3 வகையான மாணவர்களுக்கு கரோனா சூழல் கட்டுக்குள் வந்தபிறகு தேர்வு நடத்தப்படும்.

இந்த மதிப்பெண் கணக்கீட்டு முறையில் திருப்தி இல்லாத மாணவர்கள் எத்தனை பேர் தேர்வை எழுத முன்வருகிறார்கள் என்பதைக் கணக்கிட்ட பிறகு, தேர்வுத் தேதி அறிவிக்கப்படும்''.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

No comments:

Post a Comment