Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, June 3, 2021

தாய்மொழிவழி கல்வியால்தான் சுதந்திரமான சிந்தனை உருவாகும்; பிளஸ் 2 வரை தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு தமிழறிஞர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை தமிழ்வழிக் கல்வியை கட்டாயப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்றுதமிழறிஞர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன்தலைமையிலான குழு வடிவமைத்த 'தேசிய கல்விக் கொள்கை-2020'-க்கு மத்திய அரசு கடந்தஆண்டு ஜூலை 29-ம் தேதி ஒப்புதல் அளித்தது.அதைத் தொடர்ந்து 2021-ம் கல்வியாண்டுக்குள்புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதற்கேற்ப நாடு முழுவதும் கல்விக் கொள்கையின் அம்சங்கள் தற்போது படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், கலை, அறிவியல், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளை தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என்று கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.

அந்த வகையில் வரும் கல்வியாண்டு முதல் (2021-22) தமிழ், இந்தி உட்பட 8 பிராந்திய மொழிகளில் பொறியியல் கல்வியைப் பயிற்றுவிப்பதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) அனுமதி வழங்கியுள்ளது. இதற்குநாடு முழுவதும் பரவலாக வரவேற்பு கிடைத்துள்ளது.

அதேபோல், தமிழகத்தில் தாய்மொழியான தமிழ்வழிக்கல்வியை வலுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து ஒய்வுபெற்ற பேராசிரியர் வி.கோமதிநாயகம் கூறியதாவது:

ஆங்கில மொழி மீதான மோகம்

ஒரு குழந்தை தனது பள்ளிக்கல்வியை தாய்மொழி வழியாக படித்தால் தனது திறனறிந்து ஆளுமையை வெளிக்கொணர்வது எளிதாக அமையும். சீனா, ஜப்பான், கொரியா மற்றும்ஐரோப்பிய நாடுகள் தாய்மொழிவழி கல்விக்குத்தான் முக்கியத்துவம் தருகின்றன. ஆனால், தமிழகத்தில் ஆங்கில மொழி மீதான மோகத்தால் குழந்தைகளை குறுகிய வட்டத்துக்குள் அடைத்துவிடுகிறோம். அதன்விளைவு தமிழ்வழியில் படிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும், தற்போது தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்குக்கூட பிழையின்றி தமிழ் எழுத தெரியாத நிலையே உள்ளது. இந்தச் சூழலில் பொறியியல் படிப்புகளை தமிழ்வழியில் அறிமுகம் செய்தால் முழுமையாக பலன் தராது.

எனவே, சிபிஎஸ்இ உட்பட அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்வழிக்கல்வியை கட்டாயமாக்க வேண்டும். குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு வரையேனும் இந்த திட்டத்தைசெயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.இதுதவிர மேல்நிலை வகுப்புகளில் மொழிப்பாடங்களை முதல் தாள், 2-ம் தாள் என 2 தேர்வுகளாக எழுதும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். அதனுடன், தமிழ் படிப்புக்கான பாடத்திட்டத்தை மேம்படுத்துவதும் மிகவும் அவசியம்.அதேநேரம் ஆங்கில மொழியை சரளமாகப் பேசவும், எழுதவும் மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தாய்மொழி உணர்வோடு கலந்தது

மூத்த தமிழறிஞர் அவ்வை நடராசன் கூறும்போது, ''பொறியியல் படிப்புகளை தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் கற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தாய்மொழி என்பது நம் அனைவரின் மனதோடும், உணர்வோடும் கலந்த ஒன்றாகும். அந்த மொழியில் பேசுவது, எழுதுவது, எண்ணுவது எளிமையாகவும், முழுமையாகவும் அமையும் என்பதைத் தொடர்ந்துஅறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தாய்மொழிவழி கல்வியால்தான் சுதந்திரமான சிந்தனை உருவாகும். எனவே, பெற்றோர்களும் தயக்கங்களைக் களைந்து ஆர்வத்துடன் தமிழ்வழியில் பிள்ளைகளை படிக்க வைக்க முன்வர வேண்டும்'' என்றார்.

மாணவர்களின் புரிதலற்ற தன்மை

தமிழக தமிழாசிரியர் கழகத்தின் துணைத் தலைவர் ஜெ.கங்காதரன் கூறியதாவது:

பெற்றோர், தமிழ்மொழியை நமது அடையாளமாக எண்ணாமல் பள்ளியில் ஒரு பாடமாகப் பார்க்கும் கண்ணோட்டம்தான் சிக்கலுக்கு அடித்தளமிடுகிறது. பெற்றோர் பலர், தங்கள் குழந்தைகளின் ஆரம்பக் கல்வியை ஆங்கிலவழியில் படிக்கவைக்கின்றனர். கல்விக்கட்டணம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட இதர அம்சங்களைக் கருத்தில் கொண்டு 6-ம் வகுப்பில்தான் தமிழ்வழி கல்விக்குவருகின்றனர். அவ்வாறு சேரும் குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகள் பற்றிய புரிதலும் முழுமையாக இருப்பதில்லை.

8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்பதால் மாணவர்கள் கற்றலில் பின்னடைவு ஏற்பட்டாலும் சிக்கல் எழாது. அவர்கள் 9-ம் வகுப்புக்கு செல்லும்போது தடுமாறத் தொடங்குகின்றனர். வேறுவழியின்றி பாடங்களை புரிந்து படிப்பதற்கு பதிலாக மனப்பாடம் செய்து தேர்ச்சி நிலையை நோக்கி செல்லத் தொடங்குகின்றனர். இந்த முழு புரிதலற்ற தன்மை மாணவர்களின் உயர்கல்வி வரை சிக்கலை ஏற்படுத்துகிறது.

ஒரு அரசுப் பள்ளியைச் சுற்றி 3 கி.மீ. தொலைவுக்குள் தனியார் பள்ளி இயங்க அனுமதி வழங்கக் கூடாது என்று விதிமுறை உள்ளது. அதைமீறி பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுமதி வழங்கியுள்ளது. அப்பள்ளிகளின் அங்கீகாரத்தை தமிழக அரசு உடனே ரத்து செய்ய வேண்டும்.

இதுதவிர உயர்கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அம்சங்களில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரித்து வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். அதேபோல், பள்ளிக்கல்வியில் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்வழிக் கல்வியின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் உணர்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment