JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
வரும் செப்டம்பர் 12ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுவதும் 10, 12 மற்றும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு விடுத்தன. பொதுத்தேர்வுகளை ரத்து செய்யக்கூடாது, அது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் சில பெற்றோர்களால் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு மாணவர்களின் உயிரோடு விளையாட முடியாது என தெரிவித்தது. மேலும் கொரோனாவையும் மீறி தேர்வு நடத்தி ஏதேனும் மாணவர் உயிரிழந்து, அந்த மாணவரின் பெற்றோர் நீதிமன்றம் சென்றால் அது பெரிய பிரச்சினை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் பொதுத்தேர்வுகளை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட மத்திய அரசின் உத்தரவுகளை ரத்து செய்யமுடியாது என உச்சநீதிமன்றமும் வழக்கை தள்ளுபடி செய்து அறிவித்தது.
இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பொதுத்தேர்வுகளை ரத்து செய்வது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. சுமார் 60% பெற்றோர்கள் பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்ததாகக் கூறப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால் தமிழ்நாட்டிலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் நீட், JEE உள்ளிட்ட தகுதித்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கடந்த முறையை விட அதிக எண்ணிக்கையில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 198 நகரங்களில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (13-07-2021) மாலை 5 மணி முதல் மாணவர்கள் நீட் தேர்விற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment