புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28% ஆக உயர்வு - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Thursday, July 22, 2021

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28% ஆக உயர்வு

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவலைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை மூன்று தவணைகளுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. கரோனா தொற்றுக்காகப் பெருமளவு தொகை செலவு செய்யப்படுவதாலும், போதிய நிதி ஆதாரம் இல்லாததாலும் இந்த முடிவெடுக்கப்பட்டது.

ஓராண்டு இடைவெளிக்குப் பின் மத்திய அமைச்சரவை நேரடியாக பிரதமர் மோடி இல்லத்தில் அண்மையில் கூடியது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு அறிவித்த அகவிலைப்படி உயர்வை அமல்படுத்த மத்திய கூடுதல் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, மத்திய உள்துறைக் கட்டுப்பாட்டிலுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலுள்ள புதுச்சேரி அரசுத் துறைச் செயலாளர்கள் அனைவருக்கும் நிதித்துறை சார்பு செயலாளர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதன்படி, புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசுத் தரப்பில் விசாரித்தபோது, "ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கும் ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad