Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 21, 2021

பள்ளிகளைத் திறக்க முடிவு செய்தால் முதலில் தொடக்கப் பள்ளியில் இருந்து ஆரம்பியுங்கள் - ஐசிஎம்ஆர்


இந்தியாவில் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்தால், முதலில் தொடக்கப் பள்ளியில் இருந்து வகுப்புகளைத் திறக்க ஆரம்பிப்பது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்று ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் காரணமாகக் கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளன. கோவிட் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மேல்நிலை வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் தொடங்கலாமா என்று மத்திய, மாநில அரசுகள் யோசித்து வருகின்றன. மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட கல்லூரிகளும் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பள்ளிகளைத் திறப்பதென்றால், தொடக்கப் பள்ளியில் இருந்து தொடங்குது சரியாக இருக்கும் என்று ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''தொற்றுப் பரவலைக் கையாளுவதில் இளைஞர்களைவிடக் குழந்தைகள் சிறப்பாக இருக்கிறார்கள். மனித செல்களில் கோவிட்-19 வைரஸ் பரவலை அதிகப்படுத்தும், ஏசிஇ (ஆஞ்சியோடென்சினாக மாற்றும் என்ஸைம்கள்) ஏற்பிகள், பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளிடம் குறைவாகவே உள்ளன

சில நாடுகளில், குறிப்பாக ஸ்கேண்டிநேவிய (டென்மார்க், ஸ்வீடன், நார்வே போன்ற வடக்கு ஐரோப்பிய நாடுகள்) நாடுகளில் முதல், இரண்டாம் அல்லது மூன்றாம் அலைகளில், அவர்கள் தொடக்கப் பள்ளிகளை மூடவே இல்லை. எத்தகைய கரோனா அலைகளை அந்த நாடுகள் எதிர்கொண்டபோதிலும் அவர்களின் ஆரம்பப் பள்ளிகள் மட்டும் திறந்தேதான் இருந்தன.

அதனால் இந்தியாவில் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்து பணிகளை ஆரம்பித்தால், முதலில் தொடக்கப் பள்ளியில் இருந்து வகுப்புகளைத் திறக்க ஆரம்பிக்க வேண்டும். அதுவே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

அதே நேரத்தில், தொடக்கப் பள்ளி மாணவர்களைக் கையாளும் ஆசிரியர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள், துப்புரவுப் பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதை உறுதி செய்யவேண்டும்'' என்று ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்தார்

No comments:

Post a Comment