Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 31, 2021

திறந்தவெளி பல்கலைகழகங்கள் மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள், அரசு பணியில் பதவி உயர்வு பெற முடியாது: சென்னை ஹைகோர்ட் அதிரடி

திறந்தவெளி பல்கலைகழகங்கள் மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள், அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக பத்திரப் பதிவுத் துறையில் இரண்டாம் நிலை சார் பதிவாளராக தேர்வான வேலூர் மாவட்டம் சோழிங்கரைச் சேர்ந்த செந்தில்குமார், துறைரீதியான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளதால் முதல் நிலை சார் பதிவாளராக பதவி உயர்வு வழங்க கோரி அரசுக்கு விண்ணப்பித்தார்.

ஆனால், கல்லூரிக்கு சென்று இளங்கலை பட்டப்படிப்பை படிக்காமல், திறந்தவெளி கல்வி மூலம் பட்ட மேற்படிப்பை முடித்துள்ளதால், பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற தகுதியில்லை என வணிகவரித் துறை அவரது கோரிக்கையை நிராகரித்தது.

தனி நீதிபதி உத்தரவு

இதனை எதிர்த்து செந்தில்குமார் தாக்கல் செய்த வழக்கில் விசாரித்த தனி நீதிபதி, அரசு நிர்ணயித்துள்ள தகுதி என்பது, பணி நியமனத்திற்கானது தானே தவிர, பதவி உயர்வுக்கு அல்ல என கூறி, அந்த உத்தரவை ரத்து செய்ததுடன், பதவி உயர்வு பட்டியலில் செந்தில்குமார் பெயரை சேர்க்கவும் உத்தரவிட்டார்.

ஹைகோர்ட் விசாரணை

இதை எதிர்த்து தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவுத் துறை தலைவரும், வணிகவரித் துறை செயலாளரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை தலைவர், வணிகவரித்துறை செயலாளர் ஆகியோரின் தரப்பில் அரசு வழக்கறிஞர் இரா.நீலகண்டனும், சார் பதிவாளர் செந்தில்குமார் தரப்பில் எம்.ராமமூர்த்தியும் ஆஜரானார்கள்.

பதவி உயர்வு கூடாது

நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில்,, திறந்தநிலை பல்கலைக்கழகம் அல்லது தொலைதூர கல்வி மூலம் பட்டப்படிப்பு முடிக்காமல், பட்ட மேற்படிப்பு படித்தவர்களை பணி நியமனத்துக்கோ, பதவி உயர்வுக்கோ பரிசீலிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி, பதவி உயர்வு பட்டியலில் செந்தில்குமாரை சேர்க்க வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

தொலைதூர கல்வி என்றால் என்ன?

தொலைதூர கல்வி என்பது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களால் மட்டுமே வழங்க முடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு நிறைய அளவு தோன்றிய தனியார் பயிற்சி மையங்கள், திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்வியை வழங்கி வந்தன. இதில் பல முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகார்களை அடுத்து, பல்கலைக்கழக மானியக் குழு அதற்கு தடை விதித்தது. மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள், தமிழகத்திற்குள் மட்டுமே தொலைநிலைக் கல்வியை வழங்க முடியும். அதன் பயிற்சி மையத்தை வேறு மாநிலங்களில் நிறுவக் கூடாது.

சில படிப்புகளுக்கு கிடையாது

மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண், கட்டடக்கலை, ஹோட்டல் மேனேஜ்மெண்ட், நர்சிங், பார்மசி, பி.எட் உள்ளிட்ட செய்முறை சார்ந்த பயிற்சி அவசியம் எனக் கருதப்படும் தொழில்முறை படிப்புகளை தொலைதூரக் கல்வி முறையில் படிக்க இயலாது. ஆனால், இப்படிப்புகளைச் சார்ந்த திறன் மேம்பாட்டு பட்டய, சான்றிதழ் படிப்புகளை படிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment