Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, July 26, 2021

அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி தொலைக்காட்சிதான் ஒரே வழி என்ற நிலையை மாற்றுவோம்: அமைச்சர் உறுதி

அரசுப் பள்ளி மாணவர்கள் கற்கக் கல்வி தொலைக்காட்சிதான் ஒரே வழி என்ற நிலை தொடர்ந்து இருக்கக்கூடாது என்றும் அதை மாற்றுவோம் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சிகளை அளிக்கும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

''கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நாங்களே புதுமையான முயற்சிகளைப் பரிசோதித்துப் பார்க்கிறோம். பள்ளிகளைத் திறந்தால்தான் மாணவர்கள் படிக்க முடியும் என்ற நிலை இருக்கக்கூடாது. ஏற்கெனவே இருக்கின்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் கல்வியை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

கல்வி தொலைக்காட்சி மூலமாக மட்டுமே அவர்கள் படிக்க முடியும் என்ற நிலை நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்து இருக்கக்கூடாது. அடுத்தடுத்த ஊடகங்கள் மூலம் மாணவர்களை அணுகவேண்டிய நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வசதி இல்லை என்பது உண்மைதான். இணைய வசதியும் இடையூறாக உள்ளது. இதுதொடர்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரை இன்று சந்தித்துப் பேச உள்ளேன். இவற்றை அடிப்படையாகக் கொண்டு முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, உரிய முடிவு எடுக்கப்படும்.

2020- 21ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 2.04 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஜூலை 24-ம் தேதி வரை தனியார் பள்ளிகளில் இருந்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்''.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

No comments:

Post a Comment