Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 7, 2021

B.Ed படித்த பிறகு கூடுதலாக இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்

பி.எட் படித்த பின்பு கூடுதலாக இளநிலை மற்றும் முதுநிலை படித்தவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதால் முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் பரிதவிக்கும் சூழல் எழுந்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் 2,207 முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் சமீபத்தில் வெளியிட்டது. இதற்கான தேர்வுகள் நவம்பர் 13-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு trb.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அக்டோபர் 17-ம் தேதி கடைசி நாள். விண்ணப்பிப்போர் முதுநிலை பட்டம் மற்றும் பிஎட் முடித்திருக்க வேண்டும்.

இதில், இளங்கலையில் ஏதேனும் ஒரு படிப்பு முடித்துவிட்டு பிஎட் படித்த பிறகு, கூடுதலாக இளங்கலை அல்லது முதுகலை படித்தவர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படாததால், தகுதியுள்ள பலரும் பரிதவிப்பில் உள்ளனர்.

இதுகுறித்து, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜ் கூறும்போது, “நான் தேர்வுக்கு ஒரு வார காலத்துக்கு மேலாக விண்ணப்பிக்க முயற்சித்து வருகிறேன். ஆனால் விண்ணப்பிக்க முடியவில்லை. என்னைப் போல பலரும்விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். 2010-ம் ஆண்டு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தேன். 2011-ம் ஆண்டு பிஎட் முடித்தேன். 2012-ல் கூடுதலாக பி.ஏ. வரலாறும், 2017-ம் ஆண்டு எம்.ஏ வரலாறும் படித்தேன். ஆனால் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக இணையத்தில் தொடர்ந்து அறிவிப்பு வருகிறது.

பிஎட் படிப்பு என்பது பொதுவானது. என்னைப் போல, ஒரு பட்டப்படிப்புக்குப் பின்னர் பி.எட் முடித்துவிட்டு வேறு பட்டப்படிப்பு படித்தவர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த முறை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது, இந்தக் குழப்பங்கள் இல்லை. இது தொடர்பாக தேர்வு வாரியத்தை தொடர்புகொண்டால், அவர்கள் இணையத்தில் உள்ள பிரச்சினையை விரைவில் சரிசெய்கிறோம் என்றனர். ஆனால் இன்று வரை பிரச்சினை களையப்படாததால், விண்ணப்பிக்க முடியவில்லை” என்றார்.

அரசுப் பள்ளி ஆசிரியர் என்.முருகேசன் கூறும்போது, “தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள பலரும், இந்தக் குழப்பத்தால் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வரும் நாட்களில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை என அரசு விடுமுறை நாட்கள் வருவதால் விண்ணப்பிக்க இயலாது. எனவே, உடனடியாக இப்பிரச்சினையைக் களைந்து, பாதிக்கப்பட்ட அனைவரும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் கட்டிக்குளம் ஒ.சுந்தரமூர்த்தி கூறும்போது, “இந்தக் குளறுபடியால் பலருடைய வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும். எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கால அளவை நீட்டிப்பு செய்ய வேண்டும்” என்றார்.

திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷிடம் கேட்டபோது, “பாதிக்கப்பட்டோர் தொடர்பு கொண்டால், அவர்களிடம் நடந்த விவரங்களைக் கேட்டறிந்து உடனடியாக தலைமைக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும்” என்றார்.

2 comments:

  1. 10+2+3+2+1(அ)2 (அ) 10+2+3+1(அ)2+2 என்ற முறையில் படிக்க வேண்டும் ஆனால் நீங்கள் இளங்கலை பட்டம் கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்த பிறகு b.ed படித்தீர்கள் பிறகு b.a history படித்தீர்கள் இங்கு தான் தவறு ஏற்படுகிறது. தவறுக்கான காரணம் b.a history படித்து b.ed படிக்க வேண்டும்

    ReplyDelete
  2. B.sc computer science with b.ed padithapiragu m.sc computer science Thane padikkanum ethargu history padithirgal

    ReplyDelete