தற்காலிக ஆசிரியர் நியமனம் கூடாது - “நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Wednesday, June 29, 2022

தற்காலிக ஆசிரியர் நியமனம் கூடாது - “நாங்க பாஸ் ஆகி 13 வருஷம் ஆச்சு” - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குமுறல்!

பள்ளிக் கல்வித் துறையில் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக்கூடாது என வலியுறுத்தி ஆசிரியர்கள் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே நிரந்தர பணியில் நியமனம் செய்ய வேண்டும் என்றும், இதற்காக பல ஆயிரம் ஆசிரியர்கள் காத்திருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இவர்களுடைய கோரிக்கையை தமிழக அரசுக்கு கொண்டு செல்வதாக பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் உறுதியளித்தனர்.


இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், ‘’என்னைப்போன்ற ஆசிரியர்கள் பலர் மாதத்திற்கு பலமுறை ஆங்காங்கே போராடிக்கொண்டே இருக்கிறோம். ஓட்டு கேட்கும்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனே ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்கிறோம். அதிலும் குறிப்பாக 2013-இல் தேர்ச்சிபெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் செய்கிறோம் என்று கூறினார்கள். எங்களுக்கு பணி நியமனம் வேண்டும். நாங்கள் பல மாணவர்களை உருவாக்கிய ஆசிரியர்கள். இன்னும் இதுகுறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டுபோகவில்லை என கல்வித்துறை அமைச்சர் கூறுகிறார். கல்வித்துறை அமைச்சர் இங்கு வரும்வரை நாங்கள் இந்த இடத்தைவிட்டு போகமாட்டோம். நாங்கள் எங்களுடைய பிள்ளைக்குட்டிகளை எல்லாம் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் என்ன உங்கள் சொத்தையா எழுதித்தர கேட்கிறோம்?

நாங்கள் தேர்ச்சிபெற்று 13 வருடங்கள் ஆகிறது. நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்களா? மாட்டீர்களா? மாதத்திற்கு ஒரு சட்டம் மாற்றுகிறீர்கள். எங்களுக்கு பதில் சொல்லுங்கள். எங்கள் உழைப்பை பாருங்கள். உங்கள் வாக்குறுதியை நம்பித்தானே ஓட்டு போட்டோம். இந்த கட்சி ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. எங்களுடைய விஷயத்தை மட்டும் கலந்தாலோசிக்க நேரமில்லையா? எங்களை என்னவேணாலும் செய்யுங்கள். இந்தமுறை நாங்கள் எதற்கும் துணிந்துதான் வந்துள்ளோம். தகுதியில்லாமல் வேலை கேட்கவில்லை. நாங்கள் அனைவரும் தகுதிபெற்ற ஆசிரியர்கள். உரிமையை கேட்கிறோம். பதில் சொல்லுங்கள்’’ என்று குமுறுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad