Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, August 15, 2022

75ஆம் ஆண்டு சுதந்திர தினம் : 75 பெண்களின் பங்கு குறித்த முழு விவரம்

1. டாக்டர் பிச்சைமுத்து அம்மாள்:

கதர் விற்பனையையே ஓர் ஆயுதமாகக் கொண்டு ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடுவதற்காக 'சகோதரிகள் சங்கம்' என்ற அமைப்பு மதுரையில் தொடங்கப்பட்டது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முப்பது பெண்கள், இரண்டு மணிநேரம் நூல் நூற்பார்கள். அவர்களுக்குக் கல்வியோடு ராட்டின பயிற்சியையும் அளித்தவர் பிச்சைமுத்து அம்மாள்.

2. சேலம் அங்கச்சி அம்மாள்:

சென்னை, மவுன்ட் ரோடில் இருந்த கர்னல் நீலின் சிலையை அகற்றுவதற்காக தொடங்கப்பட்ட சத்தியாகிரகத்தில், சிலையை உடைப்பதற்காக கழுத்தில் மாலை, கையில் கோடாரியுடன் வீறு கொண்டு எழுந்தார் அங்கச்சி அம்மாள். அதற்காக கைது செய்யப்பட்டவருக்கு நீதிமன்றக் காவலும் ஏழு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

3. அம்மாகண்ணு:

'தென்னாற்காடு வேலு நாச்சியார் என்று அழைக்கப்பட்ட அஞ்சலையம்மாள், சுதந்திரப் போராட்ட வீராங்கனை. இவரின் 12 வயது மகள் அம்மாகண்ணுவும் அப்படியே. நீல் சிலை உடைப்புச் சத்தியாகிரகத்தில் கைது செய்யப்பட்டவர், நான்கு ஆண்டுகள் சிறார் இல்ல தண்டனையை அனுபவித்தார்.
முதல் பெண்கள்! - மதராஸ் மாகாணத்தின் முதல் பெண் அமைச்சர் - ருக்மிணி லட்சுமிபதி

4. ருக்மணி லட்சுமிபதி:

உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் சிறை சென்ற முதல் பெண்ணான வீணை இசைக்கலைஞர் ருக்மணி லட்சுமிபதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மாகாணத்தின் முதல் பெண் சட்டப்பேரவை உறுப்பினர். சென்னை மாகாணத்தில் முதல் பெண் அமைச்சரும்கூட.

5. யாமினி பூர்ண திலகம்மா:

இந்திய அரசுச் சட்டத்தில் சீர்திருத்தங்கள் செய்வதற்காக பிரிட்டிஷாரால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சைமன் குழுவை எதிர்த்து பேரியக்கம் உருவானது. 1927-ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட பெண்கள் அடங்கிய எதிர்ப்புக் குழுவின் முக்கியத் தலைவர்களில் ஒருவர், இந்த யாமினி.

6. முனியம்மாள்:

கதரை ஆயுமாகக் கொண்டு போராடுவதற்காக மதுரையில் நிறுவப்பட்ட சகோதரிகள் சங்கத்தின் முக்கிய உறுப்பினர். தேசியம் தொடர்பான விவாதங்களில் ஈடுபட்டதோடு, பெண்களுக்கு நூல் நூற்கும் ராட்டினப் பயிற்சியுடன், போர்க்களப் பயிற்சியும் கொடுத்தவர்.

7. எஸ். அம்புஜம்மாள்:

அந்நிய துணிக்கடைகள் மறியல் போராட்டத்தில் முக்கியப் போராளி. இவரது பத்து நாள்கள் தொடர் போராட்டத்தைத் தடுப்பதற்காக கேவலமான வழிமுறைகளை எல்லாம் கையாண்டது ஆங்கிலேய அரசு. அதன் ஒருகட்டமாக அவர் மீது சாக்கடை நீர் வீசியடிக்கப்பட்டது.

8. பி.லீலாவதி:

அந்நிய துணிக்கடைகள் மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றவர். இதில் கைது செய்யப்பட்ட லீலாவதி உள்ளிட்ட பெண்களை தலச்சேரி நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது, வழியில் அவர்களுடைய தாலி அறுக்கப்பட்ட கொடுமையும் நடந்தது. இச்சம்பவத்தினால் அப்பகுதி தாலியறுத்தான் தலச்சேரி என்று வரலாற்றில் இடம்பெற்றது.

9. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன் பட்டியை சேர்ந்த கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், காந்தியக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார். 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று பல ஆண்டுகள் சிறையிலே கழித்தார். விடுதலைக்கு பிறகே திருமணம் என்பதில் உறுதியாக இருந்து, 1950வது வருடத்தில் காதம் திருமணம் செய்து கொண்டார்.

10. ராணி அவந்தி பாய்:

மத்திய பிரதேச பகுதியைச் சேர்ந்தவர். வாள் வீச்சிலும், அரசியல் ராஜ தந்திரத்திலும் வல்லவர். கணவர் ராஜா விக்ரமாதித்ய சிங் இறந்தவுடன், வாரிசு இல்லாத அவர்களுடைய நாட்டை ஆங்கிலேயர் கைப்பற்ற முனைய, எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் எய்தியவர்.

11. கமலா தேவி சட்டோபாத்யாய்:

காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர். உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கைது செய்யப்பட்ட முதல் பெண் இவர்தான்.

12. ராணி லட்சுமி பாய்:

மகாராஷ்ர பகுதியைச் சேர்ந்தவர். வாரிசு இல்லாத தன் நாட்டை ஆங்கிலேயர் கைப்பற்ற முனைய, அவர்களுக்கு எதிராக வாளேந்தியவர். சரணடைவதற்கு மறுத்து முதுகில் பிள்ளையுடன் போர் செய்தவரை, முதுகில் குத்தியே உயிர் பறித்தார்கள்.

13. சுசேதா கிருபளானி

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட, தலைமறைவாக இருந்தபடி சுதந்திரப் போராட்டங்களை நடத்தியவர். சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்றவர்களின் குடும்பங்களை ஆதரித்தவர். ஆச்சர்யா கிருபளானியின் மனைவி. உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பு வகித்தவர். சுதந்திர இந்தியாவில் முதல்வராகப் பொறுப்பேற்ற முதல் பெண்.

14. சுனிதி சௌத்ரி:

`ஆணுக்கிங்கே இளைப்பில்லை' என்று நிரூபித்த எண்ணற்ற பெண்களில் இவரும் ஒருவர். தன்னுடைய 14 வயதிலேயே ஆயுதத்தைக் கையிலேந்தி போராடிய இவர், ஆங்கிலேய நீதிபதி ஒருவரைச் சுட்டுக்கொன்றார். இதற்காக 7 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

15. பீனா தாஸ்:

ஆங்கிலேயருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த வீரப்பெண்மணி. கல்லூரி மாணவியாக இருந்தபோது, ஆங்கிலேய ஆளுநர் ஒருவரைச் சுட்டுக்கொல்ல முயன்றதற்காக 9 வருடங்கள் சிறைத் தண்டனை பெற்றவர்.

16. ராணி காயிதின்ல்யு:

விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால், ஆங்கில அரசாங்கம் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இந்திய விடுதலைக்குப் பின்னரே இவருக்கு விடுதலைக் கிடைத்தது.

17. அக்கம்மா செரியன்:

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக, பள்ளித் தலைமை ஆசிரியர் பணியைக் கைவிட்டவர். வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தை வரவேற்றதற்காகச் சிறைவாசம் அனுபவித்தவர்.

18. டி.கே.பட்டம்மாள்:

சுதந்திரப் போராட்ட மேடைகளிலும், இசைத் தட்டுகளிலும் ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர். தொடர்ந்து நிறைய பாடல்களைப் பாடும் வாய்ப்புகள் வந்தபோதும் தேசபக்திப் பாடல்களை தவிர மற்ற பாடல்களை பாடுவதில்லை என்று மறுத்துவிட்டவர்.

19. அசலாம்பிகை அம்மையார்:

தன்னுடைய பாடல்கள் மூலம் மக்களிடம் விடுதலை எழுச்சியை ஊட்டியதோடு, பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கச் செய்தவர்.

20. பத்மாவதி ஆஷர்:

சுதந்திரப் போராட்டத்தில் மிகப்பெரும் சக்தியாக விளங்கியவர். இவரின் தியாகத்தின் நன்றியாக அவினாசி சாலையில் ஒரு பகுதிக்கு 'பத்மாவதிபுரம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

21. லலிதா பிரபு:

மக்களிடம் தேசபக்தி கனலை மூட்டியவர். வியாபாரிகளை அணுகி அந்நிய பொருள்களை விற்பனை செய்யாதீர்கள் என்றும், வாடிக்கையாளர்களிடம் அந்நிய பொருள்களை வாங்காதீர்கள் என்றும் சொன்னவர். கடைக்காரர்கள் இந்த அறிவுரையை கேட்காவிட்டால் கடைகளுக்கு முன்னால் படுத்து போராடியவர்.

22. எஸ்.ஆர்.ரமணி பாய்:

கம்பீரமான குரல் வளத்தால் தேசபக்திப் பாடல்களைப் பாடி மக்களிடம் தேசபக்தி கனலை மூட்டியவர். அவர் பாடிய "ஆடு ராட்டே மகிழ்ந்தாடும் ராட்டே சுய ஆட்சியைக் கண்டோமென் றாடு ராட்டே" என்ற பாடல் கதராடை உற்பத்தி மூலம் சுய ஆட்சியை பெறமுடியுமென்ற கருத்தை வலியுறுத்தியது.

23. மீரா பென்:

இங்கிலாந்தில் பிறந்த ஆங்கிலேயப் பெண்மணி. ஒத்துழையாமை இயக்கத்தின்போது சிறை சென்றவர். இவரை தன் மகளாக ஏற்றுக்கொண்டார் காந்தி.

24. கேத்ரின் மேரி ஹெல்மேன்:

லண்டனில் பிறந்தவர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உணவு, மருந்து, செய்தி, சட்ட ஆலோசனைகளை வழங்கியவர். கிராமப்புற பெண்களின் நலனுக்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்காகவும் அர்ப்பணித்தார்.

25. அஞ்சலையம்மாள்:

கடலூரில் பிறந்தவர். நீலன் சிலையை அகற்றும் போராட்டம், உப்புக் காய்ச்சும் போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் கலந்துகொண்ட இவரின் வாழ்க்கை, பெரும்பாலும் சிறை வாசத்திலேயே கழிந்தது
.
26. சொர்ணதாம்பாள்

மதுரையை சேர்ந்த சொர்ணதாம்பாளும், இவருடைய கணவரும் சுதந்திர போராட்ட வீரகள். போராட்டங்களில் ஈடுபட்ட இவரை ஆங்கிலேயே அரசின் காவல்துறை கைது செய்ததுடன், கூட போராடிய பெண்ணுடன் சேர்த்து ஆடைகளின்றி அழகர் மலையில் ஒரு இரவில் விட்டு விட்டு சென்றனர்.

27. ஜானகி ஆதி நாகப்பன்:

கோலாலம்பூரில் பிறந்தவர். தன் 18 வயதிலேயே ராணுவத்தில் சேர்ந்து, ஜான்சி ராணி படையில் துணைத் தளபதியாக உயர்ந்தவர். பர்மா இந்திய எல்லையில் துப்பாக்கி ஏந்தி போர் புரிந்தவர். இந்தியாவின் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் மலேசியப் பெண்.

28. விஜயலட்சுமி பண்டிட்:

நேருவின் சகோதரி. உடன்பிறப்பைப் போலவே தேச விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். சோவியத் கூட்டமைப்பு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியத் தூதராகப் பணியாற்றியவர். ஐக்கிய நாடுகள் அவையின் முதல் பெண் தலைவர் என்ற பெருமைக்குரியவர்.

29. அம்மு சுவாமிநாதன்:

கேரளாவில் பிறந்தவர். அனைத்திந்திய மகளிர் அமைப்பின் நிலைக்குழு தலைவராகப் பணியாற்றியவர். பெண்களுக்குத் தேர்தலில் பங்கு பெற உரிமை, கட்டாய இலவச கல்வி, குழந்தை திருமண ஒழிப்பு போன்றவற்றை வலியுறுத்தியவர்.

30. சரசுவதி ராசாமணி:

பர்மாவின் ரங்கூனில் பிறந்தவர். இவரின் தந்தை தங்கச் சுரங்கம் வைத்திருந்த இந்தியர். இவரின் குடும்பம் இந்திய சுதந்திர இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருந்து இயக்கத்துக்கு பொருளுதவியையும் அளித்தது.

31. உஷா மேக்தா:

குஜராத்தில் பிறந்தவர். நண்பர்களுடன் இணைந்து ரகசிய காங்கிரஸ் வானொலியை 1942-ல் தொடங்கினார். சுதந்திரத்துக்குப் பிறகு, இந்திய அரசு இவருக்கு பத்மவிபூஷண் விருதை வழங்கி சிறப்பித்தது.

32. அருணா ஆசஃப் அலி:

உப்பு சத்தியாக்கிரகத்தின்போது சிறை சென்றவர். அரசியல் கைதிகளை விடுவித்தபோது இவர் விடுவிக்கப்படாததால், மக்கள் போராட்டம் நடந்தது. வெளையனே வெளியேறு இயக்கத்தின்போது மும்பையில் கோவாலியா குள மைதானத்தில் காங்கிரஸின் கொடியை பெரும் தடைகளையும் மீறி ஏற்றினார். பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர்.

33. மாதங்கினி ஹஸ்ரா:

மூன்று முறை துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட போதும், மூவர்ண கொடியை சரியவிடாமல் கையிலேந்தி சுதந்திர போராட்ட அணிவகுப்பில் முன்னேறிச் சென்ற வீரமங்கை.

34. தாரா ராணி ஸ்ரீவத்ஸவா:

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் காவல் நிலையத்தின் மீது மூவர்ணக் கொடியை ஏற்றும் போராட்டத்தில் முனைப்போடு செயல்பட்டவர்.

35. போகேஸ்வரி புகநாநி:

ஆறு மகன்கள், இரண்டு மகள்கள் என அனைவரையும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுத்தியவர். தன் பேத்தியை தாக்கிய ஆங்கிலேயே கேப்டனை, தேசிய கொடியை அகற்றிவிட்டு அந்தக் கொடி கம்பத்தால் அடித்துத் துவைத்தார். இதற்காக துப்பாக்கியால் சுடப்பட்டார்.

36. கனக்லதா பருவா:

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கிராமவாசிகள் குழுவை வழிநடத்தி, உள்ளூர் காவல் நிலையம் அருகே தேசிய கொடியை ஏற்ற முற்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டவர்.

37. ராஜ குமாரி குப்தா:

பிறப்பால் இளவரசியான குப்தா, ஜாலியன் வாலாபாக் படுகொலை ஏற்படுத்திய தாக்கத்தால் சுதந்திர போராட்டத்தில் இணைந்த சமூக சீர்திருத்தவாதி.

38. கல்பனா தத்தா:

ஆயுதமேந்தி போராடியவர். 1930 ல் சிட்டகாங்கில் குண்டுத் தாக்குதல் நடத்தியவர். சுதந்திர இந்திய ஆயுதப்படை இயக்கத்தில் உறுப்பினராகவும் இருந்தார்.

39. சிவகாமு அம்மா:

அன்னி பெசன்ட் அம்மையார் சிறை வைக்கப்பட்டபோது, பம்பாய் மருத்துவக் கல்லூரிப் படிப்பை உதறிவிட்டு, சுதந்திர போர்க்களத்தில் இறங்கியவர். அம்மையாரின் விடுதலைக்காக போராடியவர்.

40. கே.பி.சுந்தராம்பாள்:

தன் கணவர் என்.ஜி.கிட்டப்பாவின் மறைவுக்குப் பிறகு, பாடுவதை நிறுத்தியிருந்தார் சுந்தராம்பாள். காந்தியின் வேண்டுகோளுக்கு இணங்கி, மீண்டும் பாடத் தொடங்கினார். தன் பாடல்கள் மூலம் கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளையர் எதிர்ப்புப் போராட்டங்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்றவர்.

41. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்:

தன் கணவர் ஜெகநாதனுடன் இணைந்து, சமூக அநீதிகளுக்கு எதிராகவும், விவசாயக்கூலிகளுக்கு சொந்த நிலம் கிடைக்கவும் காந்திய வழியில் போராடியவர். 96 வயதாகும் இவர், தற்போதும் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்கிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்றவர், 'பூமிதான இயக்கத்'திலும் பங்களிப்பு செய்தார்.

42. அம்ருத் கௌர்:

பஞ்சாப் கபூர்தாலாவின் அரசர் சர் ஹர்னம் சிங்கின் மகள். இங்கிலாந்தில் கல்வி பயின்றவர், காந்தியின் அன்புக்குப் பாத்திரமானவர். உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டங்களில் பங்கெடுத்து சிறைக்குச் சென்றிருக்கிறார்.

43 சொர்ணத்தம்மாள்:

'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கெடுத்தவர், மதுரை புறநகர்ப் பகுதியில் தெருத்தெருவாக நடந்து, மக்களிடையே சுதந்திர வேட்கையைத் தூண்டியவர். அந்நிய துணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மறியல் போராட்டத்தில் பங்கெடுத்து பலமுறை சிறை சென்றவர்.

44. என்.எம்.ஆர்.எஸ்.பர்வதவர்த்தினி:

சுதந்திரப் போராட்டத்தில் தன் கணவர் தீவிரமாகப் பங்கெடுத்து, சிறைக்குச் சென்றிருந்த நேரத்தில், அவர் வழியில் மதுக்கடை மறியலில் ஈடுபட்டவர். கண்டன ஊர்வலம் நடத்தியதால், ஆறு மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்.

45. கே.பி.ஜானகியம்மாள்:

மேடை நாடகங்கள் மூலம் சுதந்திர உணர்வை வெளிப்படுத்தியவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தமிழகத்தில், முத்துராமலிங்க தேவருடன் இணைந்து பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அதில் தன்னை இணைத்து கொண்டார் ஜானகி அம்மாள்
.

46. அருப்புக்கோட்டை செல்லம்மாள்:

கள்ளுக்கடை மறியல் மற்றும் அந்நிய துணி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு மூன்று மாத சிறைத் தண்டனை பெற்றவர். தென் மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் பலரையும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்க வைத்தவர்.

47. அபா காந்தி :

காந்தியின் பேரன் கனு காந்தியின் மனைவியான அபா, காந்தியின் பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு பக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறார். 'நவகாளி யாத்திரை'க்குப் பிறகு, நாடு முழுக்க வன்முறை வெடித்தபோது. சமாதான பயணம் மேற்கொண்ட காந்தியுடன் அபாவும் சென்றார்.

48. டாக்டர் சுசீலா நய்யார் :

காந்தியின் உடல்நலனைக் கவனித்துக்கொண்டதுடன், பல்வேறு கூட்டங்களுக்கும் அவரைக் கைதாங்கலாக அழைத்துச் சென்றவர். 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கஸ்தூரிபா காந்தியுடன் இணைந்து போராடி சிறைக்குச் சென்றவர்.

49. மனு காந்தி:

காந்தியால் பேத்தி என்றழைக்கப்பட்டவர். 'நவகாளி யாத்திரை'யில் காந்தியுடன் சுற்றுப்பயணம் சென்றார். நடைபாதையில் மனிதக்கழிவுகளை வீசி சிலர் இடையூறு செய்தபோது, அவற்றைக் கூச்சம் பார்க்காமல் சுத்தம் செய்தவர்.

50. அஞ்சலை பொன்னுசாமி:

சுதந்திர போராட்டத்தில் சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய ஐ என் ஏ (IN A) படையில் உறுப்பினராக இருந்தவர். ஆங்கில படைக்கு எதிராக துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டவர், ரைஃபிள்கள் தொடங்கி, ஸ்டென் கன் வரை பல்வேறு வகையான துப்பாக்கிகளை கையாளத் தெரிந்தவர்.

51. துர்காவதி

பகத் சிங்குடன் சேர்ந்து ஆங்கிலேய படைகளுக்கு எதிராக வெடிகுண்டுத் தயாரிப்பில் ஈடுபட்டவர். பகத்சிங்கின் தூக்கு தண்டனையை எதிர்த்து இறுதிவரை போராடியவர். இவரின் தாக்குதல்களில் ஆட்டம் கண்ட ஆங்கிலேயர்கள், ' தி அக்னி ஆஃப் இந்தியா' என்று இவரை அழைத்தனர்.

52. வை.மு கோதைநாயகி:

எழுத்திலும், மேடைப் பேச்சிலும் வல்லவர். அந்நிய துணி எதிர்ப்பு, லோதியன் கமிஷனுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த போது, குற்ற வழக்குகளில் சிறைப் பட்டிருந்த சிறைக் கைதிகளை தனித்தனியாகச் சந்தித்து. வன்முறை பாதையிலிருந்து திசைதிருப்பி காந்திய பாதைக்கு கொண்டு சென்றவர்.

53. குயிலி:

ஆங்கிலேயே கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடியவர். வேலுநாச்சியாரின் போர் படையில் பெண்கள் படைக்கு தலைமையேற்றவர். சிவகங்கையிலிருந்த ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கை அழிக்க, தனக்கு தானே தீ வைத்துக் கொண்டு, நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்த மனித வெடிகுண்டு

54. துர்காபாய் தேஷ்முக்:

இந்திய அரசியலமைப்பு சபை மற்றும் திட்ட ஆணையத்தின் உறுப்பினராக இருந்தவர். மேலும் ரிசர்வ் வங்கியின் முதல் இந்திய வம்சாவளி ஆளுநராகவும் இருந்தவர். சட்ட ஒத்துழையாமை இயக்கங்களை தலைமை தாங்கி நடத்தியதற்காக 1930 முதல் 1933 வரை சிறையில் அடைக்கப்பட்டார்.

55. பரபதி கிரி :

தேசப்பற்று காரணமாக 10 வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்தி, இந்திய தேசிய காங்கிரசுக்கு பிரசாரம் செய்யத் தொடங்கியவர். 16வது வயதில் மேற்கு ஒடிஷாவில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு தலைமை ஏற்றவர்.

56. ராணி குடியாலோ :

13 வயதில் விடுதலைப் போராட்டத்தில் குதித்தவர். அந்த வயதில் வரிகொடா இயக்கத்திற்கு தலைமை ஏற்று போராட்டத்தை வெற்றிகரமாக முடித்தவர், விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 16 வயதில் ஆங்கிலேய அரசு இவரை சிறையில் அடைத்தது. இவரின் வீர செயலுக்காக நேரு இவரை ' ராணி குடியாலோ ' என்று சிறப்பு பெயர் வைத்து அழைத்தார்.

57. S. N.சுந்தராம்பாள்

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டியில் 1913-ம் ஆண்டு பிறந்தார். சுதந்திரப் போராட்டத்தின் போது பல போராட்டங்களில் பங்கேற்ற சுந்தராம்பாள், 1941 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பிறந்த மகனுடன் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். திருப்பூர் மாவட்டத்தில் பல போராட்டங்களை நடத்திய இவர், சுதந்திரத்திற்கு பின்னும் விவசாயிகளுக்கான போராடியவர்.

58. கமலா நேரு:

ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டவர். பெண்களை இணைத்து வெளிநாட்டு துணிகள் மற்றும் மது விற்பனைக்கு எதிராகப் போராட்டம் செய்தார்.

59. கஸ்தூரிபாய் காந்தி:

மகாத்மா காந்தியின் தென்னாபிரிக்க போராட்டங்களிலும், இந்தியாவின் சுதந்திர போராட்டங்களிலும் தீவிரமாகப் பங்கேற்றவர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.

60. மஞ்சு பாசினி:

உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றவர்.

61. ராணி சென்னம்மா

கர்நாடகாவை சேர்ந்த துணிச்சல் மிக்க பெண்மணி ராணி சென்னம்மா. வில்வித்தை, வாள்வீச்சு என பல கலைகளில் தேர்ந்த இவர், ஆங்கிலேயருக்கு எதிரான போரில் தீரத்துடன் போராடி, 1829ல் வீரமரணமடைந்தவர்.

62. நாகம்மாள் மற்றும் கண்ணம்மாள்:

கள்ளுக்கடைக்கு எதிரான அறவழிப் போராட்டத்தை முன் நின்று நடத்தியவர்கள் நாகம்மாள் மற்றும் கண்ணம்மாள். ஈரோட்டைச் சேர்ந்த இவர்கள் விடுதலைப் போராட்டங்களிலும், சுய மரியாதை இயக்கத்திலும் இணைந்து செயல்பட்டனர்.

64. பத்மாசனி அம்மாள்:

இந்திய விடுதலைக்காகப் போராடிய முதல் தமிழ்ப்பெண் . தன் கணவர் சீனிவாச வரதனுடன் இணைந்து பாரதியாரின் புரட்சிப் பாடல்களைப் பாடி மக்கள் மத்தியில் எழுச்சியூட்டியவர்.

66. பேகம் அசரத் மஹால்:

கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் தானே படைகளைத் திரட்டிச் சென்று லக்னோவைக் கைப்பற்றி சாதனை படைத்தார். பின்னர் ஆங்கிலேயர்கள் லக்னோவைக் கைப்பற்றியதால் பின் வாங்கினார். இவருக்கு அடைக்கலம் தர யாரும் முன் வராததால் இமயமலைக் காடுகளில் வாழ்ந்து மறைந்தார்.

67. மனிபென் படேல்:

இந்தியாவின் இரும்பு மனிதர் எனப் போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் மகள்.ஒத்துழையாமை இயக்கம், உப்புச்சத்தியாகிரகப் போராட்டம், வெள்ளையனே வெளியேறு ஆகிய போராட்டங்களில் காந்தியின் தலைமையின் கீழ் கலந்து கொண்டவர். சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.

68. மணலூர் மணியம்மாள்:

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டிருந்த மணியம்மாள், காந்தி தஞ்சைக்கு வந்தபோது அவர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். பண்ணை அடிமை முறைக்கு எதிராகப் போராடியதால் தன் குடும்பத்தினராலேயே தள்ளிவைக்கப்பட்டார்.

69. மரகதம் சந்திரசேகர்:

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மரகதம் சந்திரசேகர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயலாற்றினார். ஐந்து முறை மக்களவை உறுப்பினராகவும் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் சிறிது காலம் பதவி வகித்துள்ளார்
. 

70. கோவிந்தம்மாள்:

1943-ல் மலேசியாவில் நேதாஜியின் எழுச்சி உரையை கேட்டபிறகு, கோவிந்தம்மாள் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தார். ஆறு பவுன் தாலி, ரப்பர் தோட்டம் உள்ளிட்டவற்றை விற்று, அந்த நிதியை ஐ.என்.ஏ-வுக்கே வழங்கினார். ஐ.என்.ஏ.வில் போர்ப்பயிற்சி பெற்று கேப்டன் லட்சுமியுடன் இணைந்து, அணிக்கு தலைவியானார்.

71. சரஸ்வதி பாண்டுரங்கம்:

சேலம் மாவட்டம் ஆத்தூரில் பிறந்தவர்.. 1931ல் சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கேற்றதற்காக சரஸ்வதி தன் குழந்தையுடன் கேரளாவின் கண்ணூர் சிறையில் தள்ளப்பட்டார். அங்கு அவரின் குழந்தை உயிரிழந்தபோதும் மனம் தளரவில்லை. மகன், மகளை பறிகொடுத்த நிலையிலும் ஆங்கிலேயரை எதிர்த்து சிறைவாசம் அனுபவித்த சிங்கப்பெண் சரஸ்வதி.

72. பியாரி பீபி:

கரூரில் பிறந்த பியாரி பீபி 1941-ல் பிரிட்டீஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் 5 மாதங்கள் சிறையில் தள்ளப்பட்டார். இஸ்லாத்தை சார்ந்திருந்த போதும் ஒரு பெண்ணாக, ஆண்களுக்கு நிகராக சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து பலமுறை சிறை சென்ற பியாரி பீபியின் தியாகம் விலை மதிப்பற்றது.

73. எம்.ஆர். கமலவேணி:

பாடகியும் நடிகையுமான எம்.ஆர். கமலவேணி, தேசியப்பாடல்களை பாடி, மக்களிடையே சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியவர். "அண்டம் கிடுகிடுங்க லண்டன் நடுநடுங்க அகிம்சைப் போர் தொடுத்தார் காந்திமகான்" என்ற வரிகளால், பிரிட்டிஷ் அரசை அதிரச் செய்தார்.

74. எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாள்:

சேவாசதன் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்த எம்.எஸ்-க்கு மீரா திரைப்படம் பெயர் வாங்கித் தந்தது. 1940ல் சுதந்திரப் போராட்ட வீரர் சதாசிவத்தை மணந்தார். சுதந்திரத்திற்காக ஒலித்த இவரது குரல், பாரத் ரத்னா, மகசேசே உள்பட பல விருதுகளை வென்றது.

75. டி.வி.எஸ். சௌந்தரம்:

நெல்லை மாவட்டம் திருகுறுங்குடியில் பிறந்தவர். சிறந்த மருத்துவர்; சமூக சீர்திருத்தவாதி; விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்தவர். எம்.பி., எம்.எல்.ஏ பதவிகளை அலங்கரித்தவர், பெண்ணின் திருமண வயதை 18 ஆக உயர்த்தும் சட்ட முன்வடிவை கொண்டு வந்து நிறைவேற்றியவர்.

No comments:

Post a Comment