வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் என்ன செய்ய வேண்டும்? - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Tuesday, August 2, 2022

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நேற்றுடன் (ஜூலை 31) முடிந்துவிட்டது. இன்னமும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாதவர்கள், தாக்கல் செய்யத் தவறவிட்டவர்கள் இனி என்ன செய்ய வேண்டும்?

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கரோனா பேரிடர் காரணமாக மக்களின் சிரமங்களைத் தவிர்க்க, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வந்தது மத்திய அரசு. ஆனால், இந்த முறை கால நீட்டிப்பு செய்யப்படவில்லை. வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31 தான் என்று அறிவித்துவிட்டனர். கடைசி நாள் முடிந்த நிலையில் பலரும் எதிர்பார்த்தபடி நீட்டிப்பு அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

அபராதம்.. அதுவும் எவ்வளவு?

ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யாவிட்டாலும் , இந்தாண்டு (2022) டிசம்பர் 31ஆம் தேதி வரை கணக்கைத் தாக்கல் செய்ய முடியும்.

ஆனால், இது தாமத வருமான வரிக்கணக்குத் தாக்கலாகக் கருத்தில் கொள்ளப்படும். அவ்வாறு தாமதமாக வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோர் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

ஜூலை 31ஆம் தேதிக்குப் பிறகு கணக்குத் தாக்கல் செய்வோரிடமிருந்து தாமத கட்டணம் வசூலிக்கப்படும்.

இதன்படி, ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் தனிநபா்களுக்கு ரூ. 5 ஆயிரம், ரூ.5 லட்சத்துக்கு கீழ் வருமானம் ஈட்டுபவா்களுக்கு ரூ. 1,000 தாமததுக்கான அபராதமாக வசூலிக்கப்படும்.

வேறென்ன இழப்பு?

நிலுவைத் தேதியை தவறவிட்டவர்கள், உங்கள் சொத்து / பங்குகள் / மூலதனச் சொத்துகளின் விற்பனையில் ஏற்படும் இழப்புகள் போன்ற (வீட்டுச் சொத்தின் இழப்பு தவிர) ஏதேனும் இருந்தால் அவற்றைத் தொடர அனுமதிக்கப்படாது என்று நிதியியல் நிபுணர் ஒருவர் கூறுகிறார்.

ஆனால், இதுபோன்ற பங்குகள் அல்லது சொத்துகள் விற்பனையில் ஏற்படும் இழப்புகளை, நீங்கள் 8 ஆண்டுகள் வரை தொடர அல்லது நீட்டித்துக் கொள்ள இயலும். அதாவது, எதிர்காலத்தில், விற்பனை அல்லது பங்குகள் அல்லது உறுதிப்பத்திரங்கள் விற்பனையில் உங்களுக்கு லாபம் கிடைக்கும் போது, அதனை நீங்கள் முன்நிதியாண்டில் பெற்ற நஷ்டத்திலிருந்து கழித்துவிட்டு, நிகர லாபத்துக்கு மட்டுமே வரிப்பிடித்தம் செய்யப்படும்.

ஒரு வேளை, இந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதிக்குப் பிறகு ஒருவர் தனது வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தார் என்றால், இந்தச் சலுகை கிடைக்காது. அதாவது அவரது நஷ்டம் அடுத்த நிதியாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட இயலாது. லாபம் ஈட்டும்போது மொத்த லாபத் தொகைக்கும் அவர் வரி கட்டியாக வேண்டும்.

இதே நிலைதான், ஜூலை 31ஆம் தேதிக்குப் பிறகு வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் ஒருவர், அசையாச் சொத்துகளை விற்கும்போது அடையும் நஷ்டம் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட மாட்டாது.

மூன்றாவது.. ஆனால் முக்கியமானது

இனி தாமதமாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோர் எதிர்கொள்ளும் மூன்றாவது ஆனால் மிக முக்கியமான சிக்கல் வட்டி வடிவில் உள்ளது. ஒரு வேளை, நீங்கள் தாமதமாக வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்யும்போது, உங்கள் வருவாய்க்கு ஒரு குறிப்பிட்டத் தொகையை வரியாக செலுத்த நேரிட்டால், அந்த வரித் தொகைக்கு ஒரு மாதத்துக்கு ஒரு சதவீதம் என்ற அளவில் வட்டியும் செலுத்த நேரிடும்.

இந்த வரிக்கான வட்டித் தொகை என்பது, நீங்கள் செலுத்தும் தாமத கணக்குத் தாக்கலுக்கான அபராதத் தொகையுடன் கூடுதலாக வசூலிக்கப்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad