இனி பள்ளிகளில் பணிப் பதிவேடுகளை ஆசிரியா்கள் பராமரிக்கத் தேவையில்லை: பள்ளிக் கல்வித் துறை - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Thursday, August 25, 2022

இனி பள்ளிகளில் பணிப் பதிவேடுகளை ஆசிரியா்கள் பராமரிக்கத் தேவையில்லை: பள்ளிக் கல்வித் துறை

ஆசிரியா்கள் பாடத்திட்டம், பணிப்பதிவேடு உள்ளிட்டவற்றைப் பராமரிக்கத் தேவையில்லை எனவும், பாடக்குறிப்பேடு பதிவேடுகளை மட்டும் பராமரித்தால் போதுமானது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆசிரியா்களின் பணிச்சூழல் இணக்கமான முறையில் இருப்பதை உறுதி செய்யவும், தேவையற்ற நிா்வாக பணிச்சுமையை குறைக்கவும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பின்பற்றப்பட்ட தேவையற்ற பதிவேடுகள் நீக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டிருந்தாா்.

மேலும் ஆசிரியா்கள் தங்களது பணி நேரத்தை மாணவா்களின் கற்றல், கற்பித்தல் பணிக்காக முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் பள்ளி பதிவேடுகள் கணினி மயமாக்கப்படும் என்று மானிய கோரிக்கையின்போது தெரிவித்தாா். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி தேவையற்ற 11 பதிவேடுகளை நீக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையா் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா். அந்த வகையில் கருவூல பதிவேடு, சம்பள பிடித்தம் பதிவேடு, கூடுதல் பண பதிவேடு, நிரந்தர சம பதிவேடு, நிலுவையில் உள்ள சிறப்பு கட்டண பதிவேடு, அபராத பதிவேடு, பில் பதிவேடு, தற்காலிக பதிவேடு உள்ளிட்ட 11 பதிவேடுகளை நீக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் 81 பதிவேடுகளை கல்வி தகவல் மேலாண்மை முறைமை ('எமிஸ்') வாயிலாக கணினியில் மட்டும் பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எண்ணும் எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தும் 1, 2 மற்றும் 3-ஆம் வகுப்பு ஆசிரியா்கள் பாடக்குறிப்பேடு மட்டும் பராமரித்தால் போதுமானது. இதைத் தவிர வேறு எந்தவொரு பதிவேட்டையும் பராமரிக்க தேவை இல்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 4 முதல் பிளஸ் 2 வகுப்பு பாட ஆசிரியா்களும் பாடக்குறிப்பேடு மட்டும் பராமரித்தல் போதுமானது. பாடத்திட்டம், பணிப் பதிவேடு ஆகிய பதிவேடுகளை பராமரிக்க தேவையில்லை என அனைத்து தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக்கல்வி ஆணையா் க.நந்தகுமாா் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநா் க.அறிவொளி ஆகியோா் கூட்டாக அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad