மாணவர் தற்கொலையை தடுக்க என்ன வழி? தோல்வியே இல்லாத வகையில் தேர்வு முறையில் தேவை மாற்றம்! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Friday, August 12, 2022

மாணவர் தற்கொலையை தடுக்க என்ன வழி? தோல்வியே இல்லாத வகையில் தேர்வு முறையில் தேவை மாற்றம்!


கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கணியாமூர் கிராமத்தின் தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதியின் மரணமும், அதன் தொடர்ச்சியாக நடந்த கலவரமும் தமிழகத்தில் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.ஸ்ரீமதி மரணத்தை தொடர்ந்து, தமிழகத்தின் பல பகுதிகளில் மாணவ - மாணவியர் அடுத்தடுத்து தற்கொலை செய்துஉள்ளனர்.

இது குறித்து, மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் சரண்யா ஜெய்குமார் கூறியதாவது:உளவியல் ரீதியாக இதை, 'மந்தை நடத்தை' என்று சொல்கிறோம். அதாவது ஒரு நிகழ்வு தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடக்கும்போது, தானும் அதேபோன்று செய்ய வேண்டும் என்ற மனநிலை மாணவ - மாணவியருக்கு உருவாகிறது.நீண்ட காலம் தனிமையில் இருப்போர், மனதிற்குள் எதையாவது வைத்து புழுங்கி கொண்டிருப்போர் தற்கொலைக்கு முயற்சிக்கக் கூடும்.தொடர் தற்கொலைகள் நிகழ்ந்து, அது பரபரப்பான செய்தி ஆகும்போது, அடுத்து வரக்கூடிய இரண்டு வாரங்களுக்கு பிள்ளைகள் மீது பெற்றோரும், ஆசிரியர்களும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு குழந்தை மனம் விட்டு பேசுகிறதோ, அந்த குழந்தைக்கு பிரச்னைகள் குறைவு. ஆனால், அதற்கு நேர் எதிராக இருக்கும் குழந்தைகளுக்கு பிரச்னை இருக்கக் கூடும். எதை பற்றியும் பேச விருப்பப்பட மாட்டார்கள். இப்படியுள்ள குழந்தைகள் ஆபத்தானவர்கள்.

நேர்மறை வார்த்தைகள்

பெரும்பாலான குழந்தைகளுக்கு எதிர்மறை போக்கு பிடிப்பதில்லை. இதை செய்யக் கூடாது; அதை செய்யக் கூடாது என்று, செய்யக் கூடாதவற்றை பட்டியல் போட்டால், அதன் மீது குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்படலாம். கட்டுப்பாடு போட்டு பிள்ளைகளை வீட்டில் அடைக்கும்போது, அதுவே பிள்ளைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி, தற்கொலை எண்ணத்துக்கு இட்டு செல்ல வாய்ப்புள்ளது. 'நீ எம்.பி.பி.எஸ்., தான் படிக்க வேண்டும்' என நிர்ப்பந்தப்படுத்த கூடாது. எல்லா படிப்புகளுக்கும் எதிர்காலம் இருக்கிறது என்பதை புரிய வைக்க வேண்டும்.

ஆசிரியர்களின் பங்கு

பிள்ளைகள் தற்கொலை எண்ணத்துக்கு போகாமல் இருப்பதில், பெற்றோருக்கு இருக்கும் பங்கை போல சமமான பங்கு, ஆசிரியர்களுக்கும் உள்ளது. யாரையும் அதட்டி, உருட்டி படிக்க வைக்க முடியாது. அன்பாக, அரவணைப்பாக இருக்கும் போது, ஆசிரியர்கள் மீது குழந்தைகளுக்கு ஈர்ப்பு உருவாகும். ஆசிரியர்கள் மீதான மதிப்பும் உயரும். ஆசிரியர்கள் என்ன சொன்னாலும், அதை கேட்பர். இவற்றையும் மீறி குழந்தைக்கு தற்கொலை எண்ணம் வருகிறது என்றால், குழந்தைகளுக்கான உதவி எண் '1098'க்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
இவ்வாறு சரண்யா ஜெய்குமார் கூறினார்.

பருவ தேர்வு அவசியம்

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க தலைவர் எம்.ஜே.மார்ட்டின் கென்னடி கூறியதாவது:பாடத்திட்டம் அதிகமாக இருக்கும்போது, பாடத்தை முழுமையாக புரிந்து கொள்வதும், அதை அச்சு பிசகாமல் தேர்வில் எழுதுவதும் சிரமமாகிறது.அப்படிப்பட்ட சூழலில், ஒரு பாட திட்டம் முழுதுக்கும், ஒரே தேர்வு வைக்கும் முறையை தவிர்க்கலாம். பாடங்களை பிரித்து, தேர்வுகளையும் பிரித்து நடத்தலாம். சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு இப்போது பருவத் தேர்வு முறையை கொண்டு வந்துள்ளனர். அவர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை தேர்வு நடத்தப்படுகிறது. அதனால், மாணவர்களுக்கு சுமையும், மன அழுத்தமும் ஏற்படுவதில்லை. அந்த ஏற்பாட்டை மாநில பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் கொண்டு வரலாம். ஒரே பாடத் திட்டமாக சி.பி.எஸ்.இ.,யை மாநிலம் முழுக்க அமல்படுத்தலாம். தேர்வு தோல்வியை நினைத்து அச்சப்பட்டு, தற்கொலை செய்து கொள்வது நிகழ்கிறது. அதனால், தேர்வில் தோல்வி என்ற நிலை இல்லாமல் செய்ய வேண்டும். அதற்கு, 'சப்ளிமென்ட்' தேர்வை தொடர்ச்சியாக நடத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

ஒரே மாதத்தில் 9 சம்பவங்கள்

கடந்த ஜூனில் நடந்த சம்பவங்கள்: * கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் * காஞ்சிபுரத்தில் பிளஸ் 1 மாணவன் தற்கொலை முயற்சி * அரியலுாரில் பிளஸ் ௨ மாணவி தற்கொலை * விருத்தாசலத்தில் பிளஸ் 2 மாணவர் தற்கொலை * திருநெல்வேலியில் பிளஸ் 1 மாணவர் தற்கொலை * கள்ளக்குறிச்சியில் மருத்துவ மாணவர் தற்கொலை * கள்ளக்குறிச்சியில் கல்லுாரி மாணவர் தற்கொலை * சேலத்தில் 15 வயது மாணவி தற்கொலை * திருவள்ளூரில் பிளஸ் 2 மாணவி தற்கொலை

'மனதை லேசாக வைக்க ஏற்பாடு செய்து வருகிறோம்!'

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கூறியதாவது:பல லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். ஒவ்வொருவரின் செயல்பாட்டையும் கண்காணிப்பது, சாத்தியமில்லாத விஷயம்.
இதை சரிசெய்ய, கல்வியாளர்கள், பள்ளி நிர்வாகிகள், மன நல நிபுணர்கள் உள்ளிட்ட அறிவார்ந்த தரப்பினரிடம் ஆலோசனை பெறப்பட்டு, அதன் அடிப்படையில் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு பின் பள்ளி திரும்பியுள்ள மாணவர்களுக்கு, கல்வியே ஒரு சுமையாக இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு பல்வேறு கவனச் சிதறல்கள் ஏற்பட்டிருப்பதை அறிந்துள்ளோம்.மாணவர்கள் படிப்பை ஒரு சுமையாகக் கருதாத அளவுக்கு, விளையாட்டு, பல்வேறு கலைகளில் திறனை வெளிப்படுத்தி, மனதை லேசாக வைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு, ஒவ்வொரு பள்ளிக்கும் மன நல ஆலோசகர்களை அனுப்பும் வேலை நடக்கிறது.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் போல, பருவத் தேர்வுகள் வாயிலாக பாடச் சுமையை குறைக்கலாமா என்பது குறித்து, யோசித்து வருகிறோம்.மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள், சிறந்த திரைப்படங்களை பார்க்க வசதி ஏற்படுத்தி தரப்படும். திரைக்கதை, கதை, களம், நடிப்பு உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக கட்டுரை எழுதவும் வாய்ப்பு அளிக்கப்படும். இப்படி பல திட்டங்கள் அரசிடம் உள்ளன. அவை செயல்பாட்டுக்கு வரும்போது, தகுதி படைத்த மாணவ சமுதாயம் புத்துயிர் பெறும். மன அழுத்தத்தால் நிகழும் தற்கொலைகளும் இல்லாமல் போகும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad