Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 28, 2022

வடகிழக்கு பருவமழைக்குப் பின்னரே புதிய பணிகளுக்கு ஒப்புதல் - தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழைக்கு பின்னரே புதிய பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதால், மழைநீர் கால்வாய் அமைத்தல், சிறு பாலங்களுக்கு அடியிலுள்ள கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, தமிழகத்தில் அடுத்த மாதம் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், முந்தைய ஆண்டுகளில் சென்னை உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள், மழையால் அதிகளவில் பாதிக்கப்படும் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை, வெள்ளம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த் துறை உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து நகராட்சி நிர்வாகத் துறை பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. வடகிழக்குப் பருவமழை நெருங்கும் நிலையில், பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் சில பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க சென்னை உள்ளிட்ட
பெருநகரங்களில் சிறுபாலங்களுக்கு கீழ் படியும் கழிவுகளை அகற்றுவதற்கு
முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதோடு, சென்னையில் தி.நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாலங்களுக்கு கீழ் இயந்திரங்கள் செல்ல முடியாத இடங்களில் உள்ள கழிவுகளால் பல ஆண்டுகளாக குவிந்துள்ள மேடுகளை அதற்கான இயந்திரங்கள் கொண்டு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாய்களில் உடைப்பு ஏற்படாமல் கண்காணிக்கவும், உடைப்பு ஏற்பட்டுள்ள இடங்களை சீரமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இணைப்பு இல்லாத இடங்களில் உரிய இணைப்பை ஏற்படுத்தி மழைநீர் தடையின்றி செல்ல வழிவகை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுககு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, புதிய பணிகளை மழைக் காலத்துக்குப் பின்னரே ஒப்புதல் அளித்து தொடங்க நடவடிக்கை எடுக்க
சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது சென்னை மாநகராட்சியால் 16 சுரங்கப்பாதைகள், இதர துறைகளால் சில சுரங்கப்பாதைகள் நிர்வாகிக்கப்பட்டு வருகின்றன. இந்த சுரங்கப் பாலங்களில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் துறைகளின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கெனவே உள்ள மோட்டார் பம்புகளின் திறனைவிட கூடுதலாக 50 சதவீதம் திறன் கொண்ட பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், மழைநீரை பாலங்களில் இருந்து வெளியேற்றினால், அது மீண்டும் பாலத்துக்குள் வராமல் தடுக்க, கால்வாய்களில் திருப்பி விடப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் மழை பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

-ம.பவித்ரா

No comments:

Post a Comment