Wednesday, September 28, 2022

நீரிழிவு நோயில் சிறுநீரக செயல்பாட்டை சீராக்கும் 'அதிசய மூலிகை'

இன்றைய நவீன வாழ்வியலில் அச்சுறுத்தும் பல நோய்நிலைகளுக்கு முக்கிய காரணம் உணவு முறைகள் தான். பாரம்பரியமாக பழகி வந்த இயற்கை விவசாயத்தை மறந்து போன காரணத்தால் நாம் சமாளிக்கபோகும் நோய்நிலைகளை பட்டியலிட்டால் கட்டுரையை படிக்கும் பலருக்கு நிச்சயம் தூக்கமே தொலைந்து போய்விடும்.

அதனால் ஏற்படும் நோய்நிலைகள் ஒருபுறமிருக்க, அதனால் உண்டாகும் உறுப்பு பாதிப்பும் என்பது ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய சவால். அந்த வகையில் நம் உடலில் பெரும்பாலும் பாதிக்கப்படும் முக்கிய உறுப்பு 'சிறுநீரகம்' தான். ஏனெனில் பெரும்பாலான மருந்துகளும், நம் உணவிற்காக விவசாயத்தில் பயன்படுத்தும் செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் நாம் உண்ணும் உணவில் கலந்திருப்பதும், அதனால் விளையும் உணவில் இயற்கையாகவே கலந்துள்ள ஈயம், பாதரசம் மற்றும் காட்மியம் போன்ற உலோகங்களும், நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை குறைத்து நலக்கேட்டை உண்டாக்கும் தன்மை உடையன என்பது அதிர்ச்சியான ஒன்று. இவ்வாறு உணவுகளும், மருந்துகளும் சிறுநீரகத்தின் பாதுகாப்பை ஒருபுறம் சிதைக்க, மறுபுறம் கட்டுக்கடங்காத சர்க்கரை அளவும் சிறுநீரக செயல்பாட்டை குறைக்கும் தன்மையுடையது.

நாள்பட்டு குறையாத சர்க்கரை அளவை குறைக்க போராடி வரும் தருணத்தில் திடீரென சிறுநீரக செயலிழப்பும், கைகோர்த்து ஒன்றிணையும் போது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை திக்குமுக்காட வைக்கும். நீரிழிவு நோயில் அதிகரித்த சர்க்கரை அளவும், அதனால் அதிகரிக்கும் ரத்த அழுத்தமும் இறுதிநிலை சிறுநீரக செயலிழப்புக்கு ஒருவழிப்பாதை அமைத்துக் கொடுக்கும். 'டாக்டர் எனக்கு சர்க்கரை அளவு குறையவே மாட்டேங்குது, ரத்த பரிசோதனை மட்டும் போதுமா, அல்லது சிறுநீர் பரிசோதனையும் அவசியமா?' என்று மருத்துவரிடம் கேட்க நினைக்கும் பலருக்கு சிறுநீர் பரிசோதனை அவசியம் என்பதே பதில். அதில் முக்கியமாக மைக்ரோ-அல்புமின் அளவு அல்லது அல்புமின் அளவை சோதிப்பது அவசியம்.

சிறுநீரில் அதிகரித்த ஆல்புமின் அளவுகளோடு, பரிசோதனையில் க்ளோமெருளஸ் வடிகட்டும் திறனும் குறைந்து காணப்பட்டு இந்த சிறுநீரகநோயை உறுதிசெய்யும். சர்க்கரை நோயை தொடர்ந்து இந்த சிறுநீரகநோய் வருவதால் 'டயாபெடிக் நெப்ரோபதி' என்றும் உறுதி செய்யப்படும். கால் வீக்கமும், அதிகரித்த ரத்த அழுத்தமும், குறைந்த உடல் எடையும், வாந்தியும், பசியின்மையும், தசை வலியும், உடல் வலியும் ஒன்று சேர்ந்து இது உடலை வருத்தும். "வரும் முன் காப்போம்" என்று நம் முன்னோர்கள் வாய்மொழியாய் கூறிய வாழ்வியல் புதையல்கள், கண் கெட்ட பிறகு சூரிய வணக்கத்தை போல தோன்றும்.

மாற்றுமருத்துவமாய் மாறிப்போன முதன்மை மரபு மருத்துவம் நினைவுக்கு வரும். இவ்வாறு சிறுநீரக நலத்தை தேடுபவர்களுக்கு அமிர்தமாய் காத்துக்கொள்ள சித்த மருத்துவம் கூறும் அதிசய மூலிகை தான் 'கருப்பு விதை' எனப்படும் 'கருஞ்சீரகம்'. பார்ப்பதற்கு சீரகத்தை ஒத்த உருவமும், கருப்பு நிறமும் கொண்ட நாம் பயன்படுத்த மறந்த அஞ்சறைப்பெட்டி கடைசரக்கு இந்த கருஞ்சீரகம். உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்ட சிறப்பான மூலிகை கருஞ்சீரகம்.

'ஆசீர்வாதத்தின் விதை' என்று கூறப்பட்டதும் கருஞ்சீரகம் தான். "கருப்பு விதை மரணத்தைத் தவிர அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்" என்கிறார் முகம்மது நபிகள். 'நோய் தீர்க்கும் கருஞ்சீரகம்' என்று பைபிள் கூட குறிப்பிடுகின்றது. கருஞ்சீரக விதைகளில் நார்ச்சத்து, அமினோ அமிலங்கள், சபோனின் ஆகிய வேதிப்பொருள்களுடன், உடல் இயக்கத்திற்கு தேவையான இரும்பு, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய தாதுஉப்புக்களும் மற்றும் லினோலெனிக் அமிலம் மற்றும் ஒலியிக் அமிலம் போன்ற கொழுப்பு அமிலங்களும், விட்டமின்கள் எ, சி, ஈ, கே ஆகியவையும் இயற்கையாகவே கலந்துள்ளது கூடுதல் சிறப்பு.

இதன் விதைகள் கறுப்பு நிறமாக இருக்க காரணம் இதில் உள்ள 'மெலட்டின்' என்ற வேதிப்பொருள்தான். இது அதிக மருத்துவ குணம் உடையதாக மதிப்பிடப்படுகின்றது. கருஞ்சீரகம் இன்று உலகையே அச்சுறுத்தும் கொடிய வியாதிகளான நீரிழிவு, இதய நோய்கள், புற்றுநோய் இவற்றை தடுக்கும் தன்மை பெற்றுள்ளதோடு சிகிச்சையிலும் நல்ல பலன் தருவதாக உள்ளதை பல ஆய்வுகள் கூறுகின்றன. பல்வேறு நோய்களை தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையும் இதன் விதைகளில் உள்ளது.

இதன் மருத்துவ குணத்திற்கு முக்கிய காரணம் இதன் விதைகளில் உள்ள 'தைமோகுயினோன்' என்ற வேதிப்பொருள் தான். இந்த வேதிப்பொருளை மையமாக உலக அளவில் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதும் சிறப்பான ஒன்று. இந்த வேதிப்பொருள் இருப்பதனால் கருஞ்சீரகம் வீக்கமுருக்கியாகவும், வலிநிவாரணியாகவும், உடல் வெப்பத்தை தணிப்பதாகவும், பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழிக்கும் கிருமிக்கொல்லியாகவும், பூஞ்சைக்கொல்லியாகவும், கல்லீரல், நரம்புமண்டலம், இதயம், சிறுநீரகம் ஆகிய உள்ளுறுப்புகளை பாதுகாப்பதாகவும், ஒவ்வாமையை நீக்குவதாகவும், புண்ணை ஆற்றுவதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு மாதவிடாயை சீராக்கும் தன்மையும், பிரசவத்திற்கு பின் பால்சுரப்பினை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு.

ஆஸ்துமா, தோல் வியாதிகள், மூட்டு வியாதிகள், இவற்றுக்கும் நல்ல பலனை தரக்கூடியது. சர்க்கரை வியாதி மட்டுமல்லாமல், மருந்துகளாலும், உணவு வகைகளாலும், கண்ணுக்கு தெரியாத உலோக சரக்குகளாலும் பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தை மீட்டெடுக்க இயற்கை நமக்கு கொடுத்த மூலிகை பொக்கிஷம் இந்த கருஞ்சீரகம். இதைப்பயன்படுத்த சிறுநீரக செயல்பாட்டை சீராக்கும் தன்மையுடையது. க்ளோமெருலஸ் வடிகட்டும் திறனை மேம்படுத்தும் தன்மையுடையதாகவும் சில ஆய்வுகள் கூறுவது சிறப்பு.

அதனால் தான் என்னவோ 'அதிசய மூலிகை' என்ற பெயரும் இதற்குண்டு. இத்தகைய கருஞ்சீரகத்தை பொடித்து சூரணமாகவோ, அல்லது இதனைக்கொண்டு தயாரிக்கப்படும் தைலமாகவோ இதனைப் பயன்படுத்த இதன் மருத்துவக்குணங்களை பெற முடியும். சரும பாதுகாப்பிற்கும், அழகிற்காகவும் கருஞ்சீரக தைலம் பெரிதும் உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடல் அழகிற்கு முக்கியத்துவம் தரும் பலர் உடல் ஆரோக்கியத்திற்கு தருவதில்லை. கருஞ்சீரகம் பல நம் உடலில் அற்புதங்களை நிகழ்த்தும் மூலிகை. ஆகவே கருஞ்சீரகத்தை அழகிற்காக மட்டுமில்லாமல் ஆரோக்கியத்திற்காகவும் அஞ்சறைப்பெட்டியில் சேர்த்து பயன்படுத்த நலம் நம்மை நாடி வரும்.