Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, November 22, 2022

'காமன் சர்வீஸ்' மின் இணைப்புக்கு 'ஆதார்' அவசியமில்லை!


இலவச மற்றும் மானிய மின் கட்டண சலுகையில் இடம்பெறும் வீடுகள், விசைத்தறி, விவசாயம், குடிசை வீடுகள் ஆகிய பிரிவினர் மட்டும், தங்களின் 'ஆதார்' எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும்.அதேசமயம், வீட்டு பிரிவு மின் கட்டணத்தில் இருந்த, 'காமன் சர்வீஸ்' எனப்படும் பொது சேவைக்கு, தனி மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதால், அந்த இணைப்புக்கு, ஆதார் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதேசமயம், வீட்டு பிரிவு மின் கட்டணத்தில் இருந்த, 'காமன் சர்வீஸ்' எனப்படும் பொது சேவைக்கு, தனி மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதால், அந்த இணைப்புக்கு, ஆதார் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.

தமிழக மின் வாரியம் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும்; 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது. விசைத்தறிகளுக்கு 750 யூனிட் வரை மானிய விலையிலும், விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு முழுதும் இலவசமாகவும் மின்சாரம் வழங்கப்படுகிறது.


கட்டணம்

தொழிற்சாலைகள், வணிகம், உயரழுத்தம் என, மற்ற பிரிவுகளுக்கு சலுகையின்றி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மத்திய அரசு, மானிய திட்டங்களில் முறைகேட்டை தடுக்க பயனாளிகளின், 'ஆதார்' எண்ணை, சம்பந்தப்பட்ட திட்டத்துடன் இணைக்குமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை, மின் வாரியம் இம்மாதம் 15ம் தேதி முதல் துவக்கியது.

'ஒரே நபர், மூன்று, நான்கு இணைப்பு வைத்திருந்தாலும், அனைத்திற்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்' என, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, சில தினங்களுக்கு முன் தெரிவித்தார்.

'யார் யார் ஆதார் இணைக்க வேண்டும்; வீடுகளில் உள்ள பொது சேவை பிரிவுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமா; வாடகைதாரர் ஆதார் இணைக்க வேண்டுமா?' என, பல சந்தேகங்கள் எழுந்துஉள்ளன.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மானிய திட்டங்களுக்கு மட்டும், பயனாளியின் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்.

எனவே, இலவச மற்றும் மானிய மின்சாரம் வழங்கப்படும் வீடுகள், விசைத்தறி, விவசாயம், குடிசை வீடுகள் ஆகிய நான்கு பிரிவுகளை சேர்ந்தவர்கள், மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை அவசியம் இணைக்க வேண்டும்.

இந்த விபரம், ஆதார் எண்ணை இணைக்கும், www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நபர் எத்தனை மின் இணைப்பு பெற்றிருந்தாலும், ஒவ்வொரு இணைப்பின் எண்ணையும் தெரிவித்து, ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

பல வீடுகளை உடைய அடுக்குமாடி குடியிருப்புகளில், 'மோட்டர் பம்ப், லிப்ட்' போன்றவற்றை உள்ளடக்கிய, 'காமன் சர்வீஸ்' எனப்படும் பொது சேவைக்கு, வீட்டு பிரிவில் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இதனால், அந்த பிரிவுக்கும் வீடுகளுக்கு வழங்கப்பட்ட 100 யூனிட் இலவசம், மானிய விலை மின்சாரம் கிடைத்தது.

மானிய சலுகை

கடந்த செப்., 10 முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதில் பொது சேவை பிரிவுக்கு வீட்டு கட்டணத்திற்கு மாற்றாக, 'ஒன் டி' என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டு, தனி கட்டண விகிதம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த பிரிவுக்கு ஒரு யூனிட் கட்டணம் 8 ரூபாயும்; மாதம் நிரந்தர கட்டணமாக கிலோ வாட்டிற்கு 100 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பொது சேவைக்கு இலவச மற்றும் மானிய சலுகை கிடையாது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது சேவை மின் இணைப்பு, தனி நபரின் பெயரில் இருக்காது. எனவே, அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர், பொது சேவை பிரிவு இணைப்புக்கு, ஆதார் இணைக்க வேண்டியதில்லை.

ஆதார் எண் இணைக்கும் மின் வாரிய இணையதளத்தின் பக்கத்தில், 'வீட்டு உரிமையாளரா; வாடகைதாரரா?' என்று கேட்கப்படுகிறது. வீட்டு உரிமையாளர்கள், ஆதார் எண்ணை பதிவேற்றலாம். வாடகைதாரரும் ஆதார் எண்ணை பதிவிடலாம்.

ஆனால் வாடகைதாரர்கள், வீட்டை காலி செய்யும் போது, ஆதார் எண்ணை, 'நீக்கம் செய்வதற்கான வசதி இணையதளத்தில் வழங்கப்படவில்லை. அந்த வசதியை ஏற்படுத்துமாறு வாடகைதாரர்கள், மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துஉள்ளனர். 

போலீஸ், ரயில்வே போன்ற அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கட்டி கொடுத்துள்ள குடியிருப்புகளில் வசிப்போர், ஆதார் எண்ணை இணைக்கும்போது, வாடகைதாரர் என்ற பிரிவை தேர்வு செய்ய வேண்டும். அவர்களின் பெயரில் வீடு இருந்தால், உரிமையாளர் என்ற பிரிவை தேர்வு செய்து, ஆதார் எண்ணை இணைக்கலாம். 

விவசாயம், குடிசை வீடுகளுக்கு மீட்டர் பொருத்தப்படவில்லை. இதனால், இவற்றுக்கு இணைப்பு எண்ணும் இல்லை. எனவே, அவர்கள் எப்படி மின் இணைப்பு எண்ணை பெற வேண்டும் என்பதை, மின் வாரியம் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment