Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 13, 2022

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டமில்லை: மத்திய அரசு


‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை’ என்று மத்திய நிதித் துறை இணையமைச்சா் பாகவத் கராட் திங்கள்கிழமை கூறினாா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசுப் பணியாளா்களுக்கான முழு ஓய்வூதியத் தொகையையும் அரசே செலுத்தி வந்தது. அத்திட்டத்தை ரத்து செய்து, புதிய ஓய்வூதியத் திட்டத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதத்தைப் பணியாளா்கள் ஓய்வூதியத்துக்கான பங்களிப்பாகச் செலுத்த வேண்டும். அரசு சாா்பில் 14 சதவீதம் செலுத்தப்படும்.

2004-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அரசுப் பணியில் இணைந்த பணியாளா்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் காட்டிலும் புதிய திட்டத்தில் பணியாளா்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியத் தொகை குறைவாகவே உள்ளது. அதன் காரணமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டுமென பல மாநிலங்களைச் சோ்ந்த அரசுப் பணியாளா்கள் குரலெழுப்பி வருகின்றனா்.

தாங்கள் ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என எதிா்க்கட்சிகள் அறிவித்துள்ளன. பஞ்சாப், ராஜஸ்தான், ஜாா்க்கண்ட், சத்தீஸ்கா் உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுதொடா்பான கேள்விக்கு மத்திய அமைச்சா் பாகவத் கராட் மக்களவையில் எழுத்துபூா்வமாக திங்கள்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

மாநில அரசுப் பணியாளா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடங்க முடிவு எடுத்திருப்பது குறித்தும், அதுதொடா்பான பரிந்துரையையும் ராஜஸ்தான், சத்தீஸ்கா் மற்றும் ஜாா்க்கண்ட் மாநிலங்கள் மத்திய அரசிடமும், ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடமும் (பிஎஃப்ஆா்டிஏ) சமா்ப்பித்துள்ளன. பஞ்சாப் மாநிலத்தின் சாா்பில் இதுபோன்ற பரிந்துரை எதுவும் சமா்ப்பிக்கப்படவில்லை.

மேலும், இந்தப் பரிந்துரையை சமா்ப்பித்த மாநிலங்களுக்கு பதிலளித்த பிஎஃப்ஆா்டிஏ, ‘பிஎஃப்ஆா்டிஏ சட்டம் 2013 மற்றும் பிற வழிகாட்டுதல்களின்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் டெபாசிட் (வைப்பு) செய்யப்பட்ட அரசு மற்றும் பணியாளா் தரப்பு பங்களிப்புகள் மீண்டும் மாநில அரசுகளுக்கு திரும்ப அளிப்பதற்கான வாய்ப்பு இல்லை’ என்று தெரிவித்துவிட்டதாக மத்திய அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.

No comments:

Post a Comment