Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, December 1, 2022

ஆசிரியர்களை கல்வி சாராத பணிகளில் ஈடுபடுத்த ஆந்திர அரசு தடை


அரசு பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணி, மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட கல்வி சாராத பணிகளில் ஈடுபடுத்த ஆந்திர அரசு தடை விதித்துள்ளது.

ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, அரசு பள்ளிக் கல்வியின் தரம் குறித்த ஆண்டு அறிக்கை சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதில், மூன்றாம் வகுப்பில் படிக்கும் 22.4 சதவீத மாணவர்களால் மட்டுமே, இரண்டாம் வகுப்பு பாடங்களை படிக்க முடிவதாகவும், 39 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே கழித்தல் கணக்கு போட தெரிந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆந்திராவில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கற்கும் திறன் குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

இதையடுத்து, மாநில கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, அரசு பள்ளி ஆசிரியர்களை கல்விப் பணியை தவிர வேறு பணிகளில் ஈடுபடுத்த மாநில அரசு தடை விதித்துள்ளது.

இது குறித்து ஆந்திர பள்ளிக் கல்வித்துறை கமிஷனர் சுரேஷ் குமார் கூறியதாவது:

மாணவர்களின் கல்வி கற்கும் ஆற்றலை அதிகரிக்க வேண்டுமானால், ஆசிரியர்களை கல்வி கற்பிக்கும் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் அரசிடம் கோரிக்கை வைத்தன.

இதை ஏற்று, கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, ஆசிரியர்களை இனி கல்வி சாராத பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த உத்தரவால், தேர்தல் பணி, மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட கல்வி சாராத பணிகளில் ஆந்திர அரசு பள்ளி ஆசிரியர்கள் இனி ஈடுபட வேண்டிய அவசியம் இருக்காது.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் உதவிக்காக, தற்காலிக பணிக்காக அனுப்பப்பட்ட ஆசிரியர்களும் திரும்ப பெறப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment