Thamizhkadal WhatsApp Channel

பி.இ., முடித்தவருக்கு ஆசிரியர் பணி நியமன உத்தரவு வழங்க உத்தரவு

பொறியியல் பட்டம் பெற்று, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு, நான்கு வாரங்களில் நியமன உத்தரவை வழங்கும்படி, பள்ளி கல்வித் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த, பொறியியல் பட்டதாரியான ராக சைனி பிரியா என்பவர், தாக்கல் செய்த மனு: கோவில்பட்டியில் உள்ள பொறியியல் கல்லுாரியில், பி.இ., கணினி அறிவியல் பாடப்பிரிவில் சேர்ந்து, 2014ல் தேர்ச்சி பெற்றேன்.

உயர் கல்வித் துறை வெளியிட்ட வழிமுறைப்படி, பொறியியல், தொழில்நுட்பவியல் பயின்ற விண்ணப்பதாரர்கள், சிறப்பு பாடமாக அறிவியல், கணிதவியல் படித்தவராக இருந்தால், பி.எட்., படிப்பில் சேரலாம்.

அதன்படி, நான் பி.எட்., கணிதம் படிப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற்றேன்; ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றேன்.

இந்நிலையில், பொறியியல் முடித்து பி.எட்., முடித்தவர்களை கணக்கில் கொள்ளாமல், கலை மற்றும் அறிவியல் பாடங்களில், பி.எட்., முடித்தவர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கியது.

உரிய சான்றிதழ்கள் வழங்கியும், இன்னும் எனக்கு பணி வழங்கவில்லை. எனவே, எனக்கு பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.எஸ்.ஜெகதீசன்; ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் நீலகண்டன்; பள்ளிக்கல்வித் துறை தரப்பில் கூடுதல் அரசு பிளீடர் வி.நன்மாறன் ஆஜராகினர்.

இவ்வழக்கில், நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கடந்த, 2019 டிசம்பரில்,அரசு பிறப்பித்த உத்தரவில், பொறியியல் பட்டத்துடன் பி.எட்., தேர்ச்சி பெற்றிருந்தால், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதி பெறுவதாகவும்; 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு பயிற்றுவிக்க, அவர்கள் தகுதி பெறுவதாகவும் கூறப்பட்டு உள்ளது.

பொறியியல் பட்டதாரியான மனுதாரர், பி.எட்., படிப்பை முடித்து, ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். எனவே, நான்கு வாரங்களில், நியமன உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories