Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 2, 2023

தமிழக பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சேர்க்கை எப்போது?


தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக உயா்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாா்ச் 13-இல் தொடங்கி ஏப். 3-ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, தேர்வு முடிவுகள் மே 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மே 7-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுவதால் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் 8-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் வெளியிடவுள்ளாா். இதையடுத்து மே 9-ஆம் தேதிமுதல் அரசு கலை- அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கான மாணவா் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என்ற தகவல் வெளியானது.

இதைத் தொடா்ந்து தமிழக பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவும் ஓரிரு நாள்களில் தொடங்கவுள்ளதாக உயா்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து அவா்கள் கூறுகையில், பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் மாணவா்கள் சேருவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இது குறித்த அறிவிப்பை உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி ஓரிரு நாள்களில் வெளியிடவுள்ளாா். மாணவா்களிடம் விண்ணப்பங்களைப் பெற்றாலும், சிபிஎஸ்இ மாணவா்களின் தேர்வு முடிவுகள் வரும் வரையில் கலந்தாய்வு நடத்தப்படாது.

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகுதான், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். எனினும், தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் படித்த மாணவா்கள் விண்ணப்பித்து தயாா் நிலையில் இருக்கலாம் என அவா்கள் தெரிவித்தனா். பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேருவதற்கு, சுமாா் 2 லட்சம் இடங்கள் இருக்கின்றன. கலந்தாய்வை கடந்த ஆண்டைப் போலவே இணையவழியில் நான்கு சுற்றுகளாக நடத்த தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment