Saturday, June 17, 2023

எம்பில் படிப்பு செல்லாது என அறிவிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலை.,யை முற்றுகையிட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் படித்த எம்பில் படிப்பு செல்லாது என அறிவிக்கப்பட்டநிலையில், அப்பல்கலை.,யை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2016, 2017, 2018 ஆண்டுகளில் கோடைகால தொடர் படிப்பாக எம்பில் பயிற்றுவிக்கப்பட்டது. இப்படிப்பை மாநிலம் முழுவதும் இருந்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உட்பட 2,617 பேர் படித்தனர். பட்டம் பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள், சான்றுகளை பள்ளிக் கல்வித்துறையிடம் சமர்ப்பித்து, உயர்க்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு பெற்று வந்தனர்.

ஆனால் அந்த எம்பில் படிப்பை உயர்க்கல்வித்துறை ஏற்காததால், ஊக்க ஊதியம் பெற்ற ஆசிரியர்களிடம் இருந்து பணத்தை பிடித்தம் செய்ய தணிக்கைத்துறை அறிவுறுத்தியது. இதுதொடர்பான வழக்கிலும் உயர்நீதிமன்றமும் எம்பில் படிப்பை ஏற்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எம்பில் பட்டங்களுடன் நேற்று காரைக்குடி அழகப்பா பல்கலை.,யை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், பல்கலை., சார்பில் நீதிமன்றத்தில் உரிய விளக்கம் அளிக்காததால் எம்பி பட்டம் செல்லாது என தீர்ப்பு வந்துள்ளது. இதனால் ஊக்க ஊதிய உயர்வையும் திரும்ப செலுத்தும்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் பல்கலை., உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பல்கலை., துணைவேந்தர் ரவி, பதிவாளர் ராஜமோகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News