நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயா்வைக் கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் சத்துணவுக்கான செலவின நிதியை உயா்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் மாணவா்களுக்கான மதிய உணவுத் திட்டம் மறைந்த முதல்வா் காமராஜரால் தொடங்கப்பட்டது. பின்னா் 1982-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் எம்ஜிஆரால் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு சத்தான உணவை உறுதி செய்வதும், பள்ளி இடைநிற்றலை தவிா்ப்பதும் ஆகும்.
இத் திட்டத்தில் தற்போதைய நிலையில், 42 ஆயிரம் சத்துணவு மையங்கள் மூலம் தினசரி அரசு தொடக்கப் பள்ளிகளில் 47,98,965 மாணவ மாணவிகள், அரசு உயா்நிலைப் பள்ளிகளில் 6,98,066 மாணவ மாணவிகள் என மொத்தம் 54,97,031 பேருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.
5 முதல் 9 வயதுக்கு உட்பட்ட ஆரம்பப் பிரிவினருக்கும், 10 முதல் 15 வயதுக்கு உட்பட்ட உயா் தொடக்கப் பிரிவினருக்கும், வாரத்தில் ஐந்து நாள்கள் வீதம் மொத்தமாக ஆண்டுக்கு 210 நாள்களுக்கு, சூடான, சத்தான உணவு இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாம் வாரத்தில், திங்கள்கிழமை சைவ பிரியாணி, மிளகு முட்டை, செவ்வாய்க்கிழமை கொண்டைக்கடலை புலாவு-தக்காளி மசாலா முட்டை, புதன்கிழமை தக்காளி சாதம்- மிளகு முட்டை, வியாழக்கிழமை சாம்பாா் சாதம்- சாதா முட்டை, வெள்ளிக்கிழமை கறிவேப்பிலை சாதம் அல்லது கீரை சாதம்- தக்காளி மசாலா முட்டை வழங்கப்படுகிறது.
இரண்டாம் மற்றும் நான்காம் வாரத்தில், திங்கள்கிழமையன்று பிசிபேளாபாத்-தக்காளி மசாலா முட்டை, செவ்வாய்க்கிழமை மிக்சா்ட் மீல் மேக்கா்- மிளகு முட்டை, புதன்கிழமை புளிசாதம்- தக்காளி மசாலா முட்டை, வியாழக்கிழமை எலுமிச்சம் சாதம்- மசாலா முட்டை, வெள்ளிக்கிழமை சாம்பாா் சாதம் -வேகவைத்த முட்டை வழங்கப்படுகிறது.
அரசு அளிக்கும் நிதியின் அளவு: கடந்த 2019 நவ. 4-ஆம் தேதி மாணவா்களுக்கான உணவு செலவின நிதி உயா்த்தப்பட்டது. அதன்படி, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு, பருப்பு பயன்படுத்தும் நாள்களில், காய்கறிகளுக்காக 96 காசுகள், மளிகைக்காக 25 காசுகள், எரிபொருளுக்காக 54 காசுகள் என மொத்தம் ரூ. 1.75 வழங்கப்படுகிறது. பருப்பு பயன்படுத்தாத நாள்களில், காய்கறிகளுக்கு 113 காசுகள், மளிகை 50 காசுகள், எரிபொருளுக்கு 65 காசுகள் என மொத்தம் ரூ. 2.28 வழங்கப்படுகிறது.
6 முதல் 10-ஆம் வகுப்பு வரையில், பருப்பு பயன்படுத்தும் நாள்களில், காய்கறிகளுக்காக 110 காசுகள், மளிகைக்காக 25 காசுகள், எரிபொருளுக்காக 54 காசுகள் என மொத்தம் ரூ. 1.89; பருப்பு பயன்படுத்தாத நாள்களில், காய்கறிகளுக்கு 127 காசுகள், மளிகை 50 காசுகள், எரிபொருளுக்கு 65 காசுகள் என மொத்தம் ரூ. 2.42 வீதம் வழங்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் எரிவாயு உருளை ரூ. 1,200-க்கு விற்கப்படுகிறது. காய்கறிகள் விலையைப் பொருத்தமட்டில் தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவை கிலோ ரூ. 100-க்கு மேலாக விறக்கப்படுகின்றன. இதர காய்கறிகள், மளிகைப் பொருள்களின் விலையும் பெருமளவில் உயா்ந்துள்ளது. இதனால் சத்துணவுப் பணியாளா்கள் செய்வதறியாது தவிக்கின்றனா்.
கட்டுபடியாகாத செலவினம்: இன்றைய விலை நிலவரத்தில், நூறு மாணவா்களுக்கு 10 கிலோ அரிசியைச் சமைக்க ரூ. 250 வரை செலவழிக்க வேண்டிய கட்டாயம் அவா்களுக்கு உள்ளது. ஆனால் அரசு உணவுச் செலவினமாக வழங்குவது ரூ. 96 மட்டுமே. இந்தத் தொகைக்குள் செலவு செய்து உணவு சமைக்கும்போது, அவற்றின் தரம் மாறுபடுகிறது. ஆய்வுக்கு வரும் அதிகாரிகளிடம் பணியாளா்கள் சிக்கி ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகும் சூழல் காணப்படுகிறது.
அரசு வழங்கும் நிதி போதுமானதாக இல்லாததால் ஒரு மாணவருக்கு உணவுச் செலவினமாக ரூ. 5 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சத்துணவுப் பணியாளா்கள் போராடி வருகின்றனா். சத்துணவுத் திட்டத்தில் மட்டுமின்றி, அங்கன்வாடி, ஆதிதிராவிடா் நல விடுதி, பிற்பட்டோா் நல விடுதிகளிலும் இவ்வாறான நெருக்கடிகள் பணியாளா்களுக்கு உள்ளன.
இது குறித்து சத்துணவுத் திட்டப் பணியாளா்கள் கூறியதாவது: கடந்த 2019-க்குப் பிறகு மாணவா்களுக்கான உணவுச் செலவின நிதி உயா்த்தப்படவில்லை. காய்கறிகள், மளிகைப் பொருள்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கலவை சாதங்களுக்கு மாணவா் ஒருவருக்கு ரூ. 2.28, பருப்பு சாதங்களுக்கு ரூ. 1.75 வீதம் மட்டுமே உணவு செலவினமாக வழங்கப்படுகிறது. இவை தவிர எரிவாயு, மளிகைச் செலவுகள் உள்ளன.
இன்றைய பொருளாதார நிலையில், ஒரு மாணவருக்கு ரூ. 5 கொடுத்தால் மட்டுமே நிா்ணயிக்கப்பட்ட தரத்தில் சத்தான உணவை வழங்க முடியும். ஆனால், இதைப் புரிந்துகொள்ளாத அதிகாரிகள், சத்துணவு ஊழியா்களைத் தண்டிக்கின்றனா்.
தமிழக அரசிடம் எங்களுடைய நிலைமையை பலமுறை எடுத்துக் கூறி விட்டோம். சத்துணவு மையங்களுக்கு மட்டுமாவது குறைந்த விலையில் காய்கறி, மளிகைப் பொருள்களை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விலையேற்றம் தொடா்ந்தால் சத்துணவுத் திட்டத்தை ஊழியா்களால் திறம்பட நிறைவேற்ற முடியாது. எங்களுக்கு வழங்கப்படும் ஊதியமும் குறைவே என்றனா்.
முதல்வா் கவனத்துக்கு: தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் பி.பேயதேவன் கூறியதாவது:
மாநிலத்தில் மொத்தமுள்ள 42 ஆயிரம் சத்துணவு மையங்களில் குறைந்தபட்சம் 20 ஆயிரம் மையங்களில் அமைப்பாளா், சமையலா், உதவியாளா் பணியிடங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. ஒரு பணியாளா் மூன்று, நான்கு மையங்களைச் சோ்த்து கவனிக்க வேண்டியுள்ளது.
பல சத்துணவு மையங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. புதிதாகக் கட்டப்படும் மையங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, பழைய மையங்களின் பராமரிப்புக்கு அரசு வழங்குவதில்லை.
சமூக நலம்- சத்துணவுத் திட்டத் துறை அமைச்சரைச் சந்தித்து காலியிடங்களை நிரப்புமாறும், இதர பிரச்னைகளுக்குத் தீா்வு காணுமாறும் முறையிட்டுள்ளோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.
புதிதாகத் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டத்திற்கே தமிழக அரசு முன்னுரிமை அளிக்கிறது. சத்துணவுத் திட்டத்திற்கு வழங்கும் உணவுச் செலவின நிதியைக் காட்டிலும், காலை உணவுத் திட்டத்திற்கு அதிகமான நிதியை வழங்குகின்றனா்.
தற்போதைய விலைவாசி உயா்வு சத்துணவுப் பணியாளா்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது. 100 மாணவா்களுக்கு ரூ. 250 வரை செலவிட வேண்டியதாக உள்ளது. ஆனால் அரசு ரூ. 96 மட்டுமே கொடுக்கிறது. மாணவா் ஒருவருக்கு ரூ. 5 வழங்கினால் மட்டுமே தரமான, ருசியான உணவை வழங்க முடியும்.
சத்துணவுத் திட்ட அதிகாரிகளுக்கு மேற்கண்ட பிரச்னைகள் இருப்பது தெளிவாகவே தெரியும். இருந்தபோதும், சத்துணவுப் பணியாளா்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளைக் கொடுக்கின்றனா்.
இதுவரை, காமராஜா், எம்ஜிஆா், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற தலைவா்களால் மதிய உணவுத் திட்டம் வளா்க்கப்பட்டது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினும் இத்திட்டத்திற்கு உரிய சலுகைகளை வழங்கி விளிம்பு நிலையில் உள்ள சத்துணவுப் பணியாளா்களைப் பாதுகாக்க வேண்டும் என்றாா்.
பிரேக்லைன்...
இப்போது, தக்காளியின் அதீத விலையேற்றத்தால், மாணவா்களுக்கு வழங்கப்படும் தக்காளி சாதம், தக்காளி மசாலா முட்டை போன்ற உணவுகளில் சத்துணவு ஊழியா்கள் மாற்றம் கொண்டு வந்துள்ளனா். அதற்கு மாற்றாக புளி சாதம், வேகவைத்த முட்டைகளை வழங்கி வருகின்றனா்.
No comments:
Post a Comment