Monday, July 31, 2023

மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுமா? எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன பரபர பதில்!

அரசின் நிதி நிலைமை சீரான பிறகு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் தேதியை முதலமைச்சர் அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இலவச லேப்டாப் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படாத நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மேல்நிலை ப்பள்ளிகளுக்கு, விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தினை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட முத்தியால் பேட்டை மேல்நிலைப்பள்ளியில் இன்று அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இலவச லேப்டாப்கள் வழங்கப்படாதது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும்போது, அரசின் நிதி நிலைமை சீரான பிறகு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் தேதியை முதலமைச்சர் அறிவிப்பார் எனத் தெரிவித்தார்.


மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்றது போல, ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியை இலவசமாக பார்க்க, அரசுப் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்வது குறித்து, துறை அமைச்சருடன் பேசி ஏற்பாடு செய்யப்படும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

மாணவர்களின் தகவல்களை எமிஸ் செயலியில் பதிவு செய்ய ஆசிரியர்கள் சிரமப்பட்டு வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள் சுலபமான முறையில் கையாளும் வகையில் செயலி மேம்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருவது பற்றிய கேள்விக்கு, ஆசிரியர் சங்கங்களுடன் 20 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளதாகவும், ஆசிரியர்கள் கருத்துகள் குறித்து நிதி அமைச்சருடன் பேசி இருப்பதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News