நாளை தமிழகம் முழுவதும் ஆடிக் கிருத்திகை கொண்டாடப்படுகிறது. முருகன் ஆலயங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஆடிக் கிருத்திகை தினத்தையொட்டி, அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள்.
பலரும் காவடி சுமந்து, திருத்தணிகை முருகனை தரிசித்து, தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள்.
இந்நிலையில், உள்ளூர் மக்களும் ஆடிக்கிருத்திகை விழாவில் கலந்து கொள்ள வசதியாகவும், வெளியூரில் இருந்து வந்து செல்கிற பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கருத்தில் கொண்டு, திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நாளைய விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் வரும் ஆகஸ்ட் 26ம் தேதி முழு பணி நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதம் முழுவதுமே வழிபாட்டுக்குரிய மாதம் தான் என்றாலும், ஆடியில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது ஆடி கிருத்திகை. சாதாரணமாக கார்த்திகை நட்சத்திரத்தில் விரதம் இருப்பது மிகவும் நல்லது. அதிலும் ஆடி கிருத்திகை அன்று விரதம் இருந்தால், நமக்கு இருக்கும் தோஷங்கள் அனைத்தும் விலகி விடும் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு.
கிருத்திகை விரதத்தை எப்படி கடைபிடிப்பது?
சிவபெருமானின் அருளால் தோன்றி ஆறு கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டவர் முருகப்பெருமான். அந்த கார்த்திகை பெண்களை கௌரவிக்கும் வகையில் அவர்கள் ஆறு பேரும் "கார்த்திகை" நட்சத்திரமாக மாறி அன்றைய தினத்தில் முருகப்பெருமானை வழிபடப்படும் வழக்கம் ஏற்பட்டது. அனைத்து கிருத்திகை நாட்களுமே முருகனுக்கு உகந்தவை என்றாலும் தை கிருத்திகை, ஆடி கிருத்திகை என்ற இரு கிருத்திகைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
பொதுவாக ஆடிக் கிருத்திகை தினத்தில் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படும். முருக பக்தர்கள் காவடி சுமந்து, திருத்தணி மலை மீது ஏறி தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்துவது வழக்கம். இன்றைய தினம் முருகன் துதிப் பாடல்கள், கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் இவைகளை மனதில் பாராயணம் செய்யலாம். இந்த ஆடி கிருத்திகை தினத்தில் அதிகாலை குளித்து முடித்து விட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அறு கோண கோலம் இட வேண்டும்.
நெய் தீபமேற்றி, பூக்கள் மற்றும் பழங்களை நிவேதனம் வைத்து உணவு மற்றும் நீரேதும் அருந்தாமல் கந்த சஷ்டி கவசம் அல்லது சண்முக கவசத்தை பாராயணம் செய்யலாம். இயலாதவர்கள் உப்பு சேர்க்கப்படாத உணவை உண்டு மாலையில் அருகில் உள்ள முருகன் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இதனால் தீராத கஷ்டங்கள் தீர்ந்து நல்வாழ்வு பெறலாம் என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment