நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் என மூன்று பொருள்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் பொடிதான் திரிபலா சூரணம்.
பக்குவமான முறையில் இதை தயாரிக்க வேண்டும். இதை காயகல்பம் என்றும் நித்ய ரசாயனம் என்றும் அழைக்கிறார்கள். மருந்துகளில் அமிர்தம் என்றும் இதை சொல்லலாம். உடலில் நோய் வராமலும் நோயை தீர்க்கும் அற்புத மருந்தாகவும் இவை செயல்படுகிறது. இதை எப்படி எடுத்துகொள்ள வேண்டும். இதை சாப்பிட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
நெல்லிக்காய் - 4 பங்கு, தான்றிக்காய் - 2 பங்கு, கடுக்காய் - 1 பங்கு அளவில் எடுத்துகொள்ள வேண்டும். நெல்லிக்காய், கடுக்காயை விதை நீக்கி பயன்படுத்த வேண்டும்.
இந்த மூன்றையும் நிழலில் காயவைத்து அரைத்து பொடியாக்கவும். கடுக்காய், தான்றிக்காய் நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும் என்றாலும் தயாரிக்க சிரமம் இருப்பவர்கள் நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும் பொடியை வாங்கி பயன்படுத்தலாம்.
எல்லா காலங்களிலும் இதை உள்ளுக்குள் எடுத்துகொள்ளலாம். ஆனால் உரிய முறையில் எடுத்துகொள்ள வேண்டும். கோடையில் நீருடனும், குளிர்காலத்தில் தேனுடனும், மழைக்காலங்களில் வெந்நீருடனும் கலந்து சாப்பிடவேண்டும். இதை சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
துவர்ப்பு சுவையுடைய இந்த சூரணம் உடலில் வாதம், கபம், பித்தம் மூன்றால் வரும் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. உடலினுள் உறுப்புகள் வரை சென்று செயலாற்றக்கூடிய குணத்தை கொண்டது என்பதால் சாதாரண கிருமிதொற்று முதல் புற்றுநோய் செல்கள் வரை எதிர்த்து போராடக்கூடிய அளவுக்கு இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் எதிர்ப்புசக்தியை தருகிறது. உடலுக்குள் நுழையும் கிருமிகளை எதிர்த்து போராடும் அளவுக்கு உடலுக்கு எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கிறது. சிறந்த ஆன்டி பயாடிக் என்றும் இதை சொல்லலாம். ஆய்வு ஒன்றிலும் திரிபலா சூரணம் புற்றுநோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாகவும், புற்றுசெல்கள் வளரும் அபாயத்தையும் குறைக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
செரிமானக்கோளாறுகளை அடிக்கடி சந்திப்பவர்கள் குடல் பிரச்சனைகளையும் கொண்டிருப்பார்கள். உணவுப்பாதை, குடல் இயக்கம் சீராக செயல்பட இந்த சூரணம் உதவுகிறது. குடலுக்கு செல்லும் உணவுப்பாதையில் இருக்கும் நச்சுகளை நீக்கி மலச்சிக்கல் இல்லாமலும் காக்கிறது. குடல் நச்சுக்களை வெளியேற்றும் போது குடலில் இருக்கும் நாடாப்புழுக்கள், ஒட்டுண்ணிகள், பூச்சி தொற்றுகள் போன்றவற்றை வெளியேற்ற உதவுகிறது. குடல் சுத்தமாக இருந்தாலே உடலில் பாதி பிரச்சனைகள் வராமல் இருக்கும்.
சீரான ரத்த ஓட்டம்:
உடல் ஆரோக்கியமாக இருக்க உடலில் ரத்த ஓட்டமும் தடையின்றி இருக்க வேண்டும். ரத்தத்தில் இருக்கும் நச்சுகளை நீக்கி , ரத்த ஓட்டத்தை சீராக்க இவை உதவுகிறது. அதோடு ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிகையை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால் ரத்த சோகை வராமல் தடுக்கப்படுகிறது. ரத்தத்தை சுத்தம் செய்வதால் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. சருமம் இயற்கையாகவே பளபளப்பை அடைய இந்த சூரணம் உதவுகிறது.
நீரிழிவு:
நீரிழிவு இருப்பவர்கள் அதை கட்டுக்குள் வைக்க திருபலா சூரணத்தை எடுத்துகொள்ளலாம். இவை கணையைத்தின் வேலையை சிறப்பாக்கி இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கிறது. அதிக நீரிழிவு பிரச்சனையான ஹைப்பர் கிளைசீமியா என்று சொல்லகூடிய சர்க்கரை நோயாளிகளுக்கு இவை அருமருந்தாக இருக்கும். உடலில் குளுக்கோஸ் அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது. திரிபலாவில் உள்ள கசப்பு சுவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை எப்போதும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. திரிபலா சூரணத்தை ஐந்துகிராம் அளவு எடுத்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து கால் டம்ளர் அளவு சுண்டியதும் குடித்து வந்தால் பலன் தரும்.
எடையை கட்டுக்குள் வைக்கும்:
உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளால் அதிகரித்திருக்கும் எடையை கட்டுக்குள் வைக்க பக்கவிளைவில்லாமல் இவை உதவுகிறது. உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைக்கும் குணத்தை இது கொண்டிருப்பதால் இதை தினமும் எடுத்துகொள்ளலாம். உடலில் கொழுப்பை உண்டாக்கும் அடிபோஸ் செல்களை தாக்கி கொழுப்பின் அளவை குறைக்க செய்கிறது. தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் திரிபலா சூரணத்தை வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதை குடித்த பிறகு அரை மணி நேரத்துக்கு வேறு ஆகாரம் எடுத்துகொள்ள கூடாது.
No comments:
Post a Comment