Thursday, September 19, 2024

தமிழகத்தில் இனிமேல் ரூ.20 பத்திரங்களை பயன்படுத்த கூடாது.. வாடகை ஒப்பந்தம் மாற்றம்: பதிவுத்துறை அதிரடி


வீடு, கடை வாடகை உள்ளிட்ட சாதாரண ஒப்பந்த ஆவணங்கள் குறித்து புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது..

இதுகுறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை பதிவுத்துறை வலியுறுத்தி அறிவித்திருக்கிறது. வாகன ஒப்பந்தம் பற்றின இந்த அறிவிப்பானது பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.

வாடகை ஒப்பந்தம் என்பது, நில உரிமையாளருக்கும் குத்தகைதாரருக்கும் இடையே கையொப்பமிடப்பட்ட சட்ட ஒப்பந்தமாகும்.. குத்தகையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்துமே இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

நம்முடைய நாட்டை பொறுத்தவரை, ஒரு வருடத்திற்கும் மேலான வாடகை ஒப்பந்தங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்... ஆனாலும் வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்கான பொறுப்பு, அந்தந்த மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்..

கரண்ட் பில்: சுருக்கமாக சொல்லப்போனால், வாடகை, அட்வான்ஸ், கரண்ட் பில் கட்டணம் போன்ற தகவல்கள் வாடகை ஒப்பந்தத்தில் இருக்கும். வாடகை ஒப்பந்தம் 11 மாதங்களுக்கு மட்டுமே முதல்கட்டமாக கையெழுத்திட முடியும்... அதற்கு மேற்பட்ட மாதங்கள் அதே வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர் தொடர்ந்து தங்க நேர்ந்தால் ஒப்பந்தத்தை புதுப்பிப்பது கொள்ள வேண்டும்.

11 மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் வீட்டு உரிமையாளருக்கு வீடு தேவைப்பட்டாலோ, குடியிருப்போர் வேறு வீட்டுக்குச் சென்றாலோ 3 மாதங்களுக்கும் முன்பாகத் தகவல் இருவருக்குள் தெரியப்படுத்திக்கொள்ள வேண்டும்... மற்றபடி ஒருநாளில் முடிவு செய்து மறுநாள் வீட்டைவிட்டு வெளியேறுவதோ, வெளியேற்றுவதோ முடியாது.

வாடகை ஒப்பந்தம்: வாடகை ஒப்பந்தத்துக்கு 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர்கள்தான் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஸ்டாம் பேப்பரில் கையெழுத்திடப்படும் ஒப்பந்தம் வாடகைக்கு குடியிருப்பவருக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமாக அமைகிறது..

தமிழ்நாட்டில், சொத்துக்களை வாங்கும்போது அதன் மதிப்பில், 7 சதவீதம் முத்திரை தீர்வை, 2 சதவீதம் பதிவு கட்டணம் தற்போது வசூலிக்கப்பட்டு வருகிறது.. இந்த மதிப்பு அடிப்படையில், முத்திரை தாள்களை பயன்படுத்த வேண்டும் அல்லது இ - ஸ்டாம்பிங் முறையில் உரிய தொகையை செலுத்த வேண்டும். இ-ஸ்டாம்பிங் என்பது சம்பந்தப்பட்ட சொத்தின் மீது நீதித்துறை அல்லாத முத்திரை வரியை அரசாங்கத்திற்கு செலுத்துவதற்கான ஆன்லைன் முறையாகும்..

குத்தகை ஒப்பந்தங்கள்: ஆனால், வீடு வாடகை, நிலம் குத்தகை ஒப்பந்தங்களை பதிவு செய்வதில்லை. உதாரணமாக, வீட்டை வாடகைக்கு விடுவோர், 11 மாதம் என்ற காலவரையறையில் ஒப்பந்தம் மேற்கொள்கிறார்கள்.. ஆண்டுதோறும் இந்த ஒப்பந்தங்களை புதுப்பித்து கொள்ளும்போது, 20 ரூபாய் முத்திரைத் தாளை பயன்படுத்தியே எழுதுகிறார்கள்.

அதனால்தான், தமிழகத்தில் இனி சாதாரண ஒப்பந்தங்களுக்கு 20 ரூபாய் பத்திரங்களை பயன்படுத்துவதை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது.. அதன்படி, குறைந்த மதிப்பிலான பத்திரங்களை நிறுத்த அரசு முடிவு செய்துள்ள நிலையில், ரூ. 20 ரூபாய் பத்திரங்களை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக 200 ரூபாய் பத்திரங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது...

பத்திரங்கள்: அதேபோல, பத்திர பதிவு ஒப்பந்தங்களை பதிவு செய்யாமல் வைத்திருந்தாலும் 20 ரூபாய் பத்திரங்களுக்கு பதில் 200 ரூபாய் பத்திரங்களை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடகை என்றதுமே, சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.. எப்போதுமே வாடகைக்கு குடியிருப்பவர்கள் சுமார் 10 வருடத்துக்கு மேலாக ஒரே வீட்டில் குடி இருந்தால் அந்த வீடு உரிமை கொள்ளப்படாது... வாடகைக்கென்று சென்றுவிட்டாலே, எந்தவித சொத்துரிமையும் அந்த வீட்டின் மீது கோர முடியாது.. அதேபோல, ஒருவர் 12 வருடத்துக்கு மேலாக அதே இடத்தில் எந்தவித பணமும் செலுத்தாமலிருந்தால், அவர்களுக்கே அந்த இடம் சொந்தமாகிவிடும். ஆனால், வாடகைக்கு இருப்பவர்களுக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News