அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று (செப்.17) அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியருக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காக பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக நடப்பு கல்வியாண்டில் (2024-25) உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்று இதுவரை எமிஸ் இணைய தளத்தில் பதிவு செய்யாத பள்ளிகளின் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பதிவுசெய்த ஆசிரியர்களின் தகவல்களும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில் உள்ள உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களில் எவரேனும் பணிபுரிந்த பள்ளியிலிருந்து இடமாறுதல் அல்லது பணி ஒய்வு பெற்றிருப்பின் அவர்களுக்கு பதிலாக புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும். அதன்படி 250 மாணவர்களுக்கு ஒரு உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர் என்ற விகிதத்தில் சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களை தேர்வு செய்து செப்டம்பர் 16 முதல் 23-ம் தேதிக்குள் எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இதுதவிர உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் எமிஸ் தளத்தில் பதிவு செய்யவில்லை எனில், அவர்களால் இந்த பயிற்சிக்கான மதிப்பீட்டு தேர்வை நடத்த முடியாது. எனவே, அனைத்து பள்ளிகளிலும் தலைமையாசிரியர்களுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி எமிஸ் தளத்தில் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment