Thursday, September 19, 2024

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்களும் பிஎட் படிப்பில் சேரலாம்: தமிழக உயர்கல்வி துறை அறிவிப்பு

தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்துவிட்டு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் பிஎட் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

அரசு கல்வியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுநேற்று முன்தினம் (16-ம் தேதி)தொடங்கியது. ஆன்லைனில் (www.tngasa.in) விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 26-ம் தேதி ஆகும்.

இதற்கிடையே, நடப்பு கல்வி ஆண்டில் பிஎட் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணுடன் பட்டம் பெற்றவர்கள் பிஎட் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அதேநேரத்தில் பிசி, பிசி-முஸ்லிம் பிரிவினர் எனில் 45 சதவீத மதிப்பெண்ணும், எம்பிசி, டிஎன்சி வகுப்பினர் என்றால் 43 சதவீத மதிப்பெண்ணும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் எனில் 40 சதவீத மதிப்பெண்ணும் போதுமானது. 10-ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்துவிட்டு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். அதேநேரத்தில் எஸ்எஸ்எஸ்சி, பிளஸ் 2 இல்லாமல் நேரடியாக பட்டம் பெற்றவர்களாக இருந்தால் அவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

பட்டப்படிப்பு மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கும்போது முதுகலை பட்டதாரிகள்என்றால் கூடுதலாக 4 மதிப்பெண்ணும் எம்.பில் முடித்திருந்தால் 5 மதிப்பெண்ணும் பிஎச்டி-யாக இருப்பின் 6 மதிப்பெண்ணும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படும். மேலும், கல்லூரியில் படிக்கும்போது என்எஸ்எஸ்மற்றும் என்சிசி-யில் இருந்திருந்தாலோ, விளையாட்டு வீரர்களாக இருந்தாலோ கூடுதலாக 3 மதிப்பெண் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக அளிக்கப்படும் என வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News