பள்ளிக்கல்வித்துறையில் எமிஸ் பணிகளை மேற்கொள்ள 6 ஆயிரம் பேர் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டிடங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திறந்துவைத்து பேசியதாவது:
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கிட்டத்தட்ட 1 கோடியே 27 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். கடந்த 2022 நவம்பர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'நமக்கான நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி' என்னும் திட்டத்துக்கு தன்னுடைய சொந்த பணம் ரூ.5 லட்சம் கொடுத்து ஆரம்பித்து வைத்தார். அது இன்று பல கோடியை தாண்டிச் செல்கிறது. கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் பேராசிரியர் அன்பழகனார் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 14,109 வகுப்பறைகள் கட்டிக் கொடுத்துள்ளோம். இன்னும் 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டிக்கொடுக்க உள்ளோம். தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, பள்ளி கல்வித்துறை மேம்பாட்டுக்கு ரூ.44 ஆயிரத்து 42 கோடி நிதியை நமது முதல்வர் ஒதுக்கி உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறுகையில், ''பள்ளி கல்வித்துறையில் 'எமிஸ்' பணிகளை மேற்கொள்ளும் போது, பணிச்சுமை அதிகமாக இருப்பதாக ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அதனால் இப்பணியை மேற்கொள்ள 6 ஆயிரம் பேர் பணியமர்த்தப்படுவார்கள்'' என்றார்.
No comments:
Post a Comment