Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, January 27, 2025

‘‘பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது?’’


அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளைச் சரி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ள அண்ணாமலை, பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், குடிநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யாமல் குடிநீர் அசுத்தமானதால், மாணவர்கள், அருகிலுள்ள ஆற்றங்கரையில் ஊற்றுத் தோண்டி, தண்ணீர் குடிக்க வேண்டிய அவலம் நிலவுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக, வெறும் விளம்பரங்களிலேயே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக அரசு, பள்ளிக் கல்வித் துறையை முழுவதுமாகப் புறக்கணித்திருக்கிறது. ஏழை எளிய பின்புலத்திலிருந்து வரும் மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகள் குறித்த அக்கறை சிறிது கூட, தமிழக அரசுக்கு இல்லை.

பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்கள், குடிநீர், கழிப்பறை, சுற்றுச்சுவர் என அடிப்படை வசதிகள் கூட முறையாக இல்லாத பள்ளிகள், என அரசுப் பள்ளிகளை முழுவதுமாக அழித்தொழித்து, திமுகவினர் நடத்தும் தனியார்ப் பள்ளிகளுக்கு உதவிக் கொண்டிருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர். பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது?

உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளைச் சரி செய்ய வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். இல்லையேல், தமிழக பாஜக சார்பாக, இதனை ஒரு இயக்கமாக முன்னெடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment