JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, June 27, 2025

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் 1,000 பேருக்கு மாதம் ரூ.7,500 - விண்ணப்பிப்பது எப்படி?

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் தமிழக மாணவர்கள் 1,000 பேருக்கு மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ‘நான் முதல்வன்’ சிறப்பு திட்ட இயக்குநர் (போட்டித் தேர்வுகள் பிரிவு) இன்று (ஜூன் 26) வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவு வாயிலாக ஒவ்வோர் ஆண்டும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் தமிழக மாணவர்கள் 1,000 பேருக்கு மாதம் ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தகுதியான மாணவர்கள் இதற்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்நிலையில், 2026-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத் தேர்வு ஜூலை 26-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதன்மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாதம் ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையங்களில் சேர விரும்பும் ஆர்வமுள்ள தமிழக மாணவர்கள் www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூலை 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மதிப்பீட்டுத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஜூலை 3-வது வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு ஜூலை 26-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment