Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 14, 2025

தமிழகத்தில் 2.34% குறைந்த நீட் தேர்ச்சி விகிதம்; தேசிய அளவில் டாப் 100-ல் 6 தமிழக மாணவர்கள்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் 12.36 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக மாணவர் சூரிய நாராயணன் தேசியளவில் 27-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில் நீட் தேர்ச்சி விகிதம் 2.34 சதவீதம் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக முதல் 100 இடங்களில் தமிழக மாணவர்கள் 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.

நம் நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது.

அதன்படி நடப்பாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 552 நகரங்களில் கடந்த மே 4-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வெழுத மொத்தம் 22 லட்சத்து 76,069 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அதில் 22 லட்சத்து 09,318 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது தேர்வுக்கு விண்ணப்பித்த மற்றும் எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. ஏனெனில், 2024-ல் நீட் தேர்வெழுத 24.06 லட்சம் பேர் பதிவு செய்ததில், 23 லட்சத்து 33,297 பேர் தேர்வை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்ச்சி விகிதம் சரிவு: இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. நாடு முழுவதும் மொத்தம் 12 லட்சத்து 36,531 (55.96%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டை விட 0.45% சதவீதம் குறைவாகும். அதேபோல், தமிழகத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு ஒரு லட்சத்து 35,715 பேர் தேர்வு எழுதியதில் 76,181 (56.13%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2024-ல் ஒரு லட்சத்து 52,919 பேர் தேர்வு எழுதியதில் 89,199 (58.47%) பேர் தேர்ச்சி பெற்றனர். அந்த வகையில் தேர்ச்சி விகிதம் 2.34 சதவீதம் குறைவாகும்.

நீட் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஷ் குமார் 686 மதிப்பெண்களுடன் தேசியளவில் முதலிடம் பெற்று சாதித்துள்ளார். அதற்கடுத்த 2, 3-ம் இடங்களில் உத்கர்ஷ் அவதியா (மத்தியப் பிரதேசம்), கிரிஷாங் ஜோஷி (மகாராஷ்டிரா) உள்ளனர். தமிழகத்தில் இருந்து எஸ்.சூரிய நாராயணன் 99.99 சதவீத மதிப்பெண்களுடன் மாநிலத்தில் முதலிடமும், தேசியளவில் 27-வது இடமும் பிடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக முதல் 100 இடங்களில் தமிழக மாணவர்கள் 6 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இதற்கிடையே, கடந்த ஆண்டு நீட் தேர்வில் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்களை எடுத்தனர். அதனால், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. ஆனால், இந்த முறை தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததால் யாரும் 720-க்கு 720 எடுக்கவில்லை. ராஜஸ்தான் மாணவர் 720-க்கு 686 மதிப்பெண் எடுத்ததே அதிகபட்சமாக உள்ளது. இதுதவிர ஓபிசி - 5 லட்சத்து 64,611 பேரும், எஸ்சி - ஒரு லட்சத்து 68,873 பேரும், எஸ்டி - 67,234 பேரும், பொதுப் பிரிவு (யுஆர்)-3 லட்சத்து 38,728 பேரும், இடபிள்யூஎஸ் -97,085 பேரும் இடம் பிடித்துள்ளனர். மேலும் மாற்றுத் திறனாளிகள் 3,673 பேரும் மருத்துவம் படிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.

கட்-ஆப் மதிப்பெண்: நீட் தேர்வில் தகுதிப்பெற்ற மாணவர்களுக்கான கட்ஆப் மதிப்பெண் விவரம் வெளியாகியுள்ளன. அதன்படி பொதுப்பிரிவு மற்றும் இடபிள்யூஎஸ் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 686 முதல் 114 வரையான மதிப்பெண்களில் (50 பெர்சன்டையில்) 11 லட்சத்து 01,151 பேர் இடம்பெற்றுள்ளனர்.

ஓபிசியில் 143 முதல் 113 வரையான மதிப்பெண்களில் (40-50 பெர்சன்டையில்) 88,692 பேரும், எஸ்சி, எஸ்டி பிரிவில் 143 முதல் 113 மதிப்பெண்களில் (40-50 பெர்சன்டையில்) 45,935 பேரும் இடம் பிடித்துள்ளனர். பொதுப்பிரிவு மற்றும் இடபிள்யூஎஸ் மாற்றுத் திறனாளிகளுக்கு 143 முதல் 127 வரை மதிப்பெண்களில் (45-50 பெர்சன்டையில்) 472 பேரும், ஓபிசி, எஸ்சி, எஸ்டி மாற்றுத்திறனாளி பிரிவில் 126 முதல் 113 வரையான மதிப்பெண்களில் (40-45 பெர்சன்டையில்) 281 பேரும் இடம் பெற்றுள்ளனர். நீட் நுழைவுத் தேர்வில் சென்ற ஆண்டைவிட கட்ஆப் மதிப்பெண் சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News