Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 18, 2025

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை: பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்


பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியது. இந்த படிப்புகளுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளதால் மாணவ, மாணவிகள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர்.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்) உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,500-க்கும் மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன. இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்நிலையில், துணை மருத்துவப் படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tnmedicalselection.org என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை ஜூன் 17-ம் தேதி (நேற்று) நண்பகல் 12.01-க்கு தொடங்கியது. ஜூலை 7-ம் தேதி மாலை 5 மணி வரை மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். படிப்புகளுக்கான கட்டணம், தகவல் தொகுப்பேடு, விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அதேபோல், டிப்ளமோ நர்சிங் (பெண்கள்), பார்ம்.டி படிப்புகளுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியுள்ளது என்று மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், அந்த படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு முடிந்த பின்னர், துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment