Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 17, 2025

கலாச்சார விழிப்புணர்வு புத்தாக்கப் பயிற்சி; ஆசிரியர்கள் பட்டியலை அனுப்ப பள்ளிக் கல்வித் துறை உத்தரவு


ஆசிரியர்களுக்கான கலாச்சார விழிப்புணர்வு புத்தாக்க பயிற்சி முகாம்; தகுதிப் பட்டியலை அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

கலாச்சார விழிப்புணர்வு தொடர்பான மத்திய அரசின் புத்தாக்கப் பயிற்சிகளுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்ப வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;

மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்த பயிற்சி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், கலைகள் குறித்த புரிதலை ஏற்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி முகாம்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகின்றன. ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் முறைகளில் புதிய உத்திகளை கையாளவும், மாணவர்களுக்கு கலாச்சாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த பயிற்சிகள் உதவுகின்றன.

அதன்படி நடப்பாண்டு கல்வியில் பொம்மலாட்டத்தின் பங்கு, இயற்கை மற்றும் பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பில் பள்ளிகளின் பங்களிப்பு, இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மை, பள்ளிக் கல்வியில் அருங்காட்சியகங்களின் பணிகள் உட்பட தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களில் 440 பேர் இந்த பயிற்சிக்காக தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு புதுடெல்லி, ராஜஸ்தான், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் புத்தாக்கப் பயிற்சிகள் அக்டோபர் மாதம் வரை பல்வேறு கட்டங்களாக வழங்கப்படும். இதற்கான பயிற்சி கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்து இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment