Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 29, 2025

தமிழரின் பெருமை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
'தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு' என்று தமிழரை அடையாளப்படுத்தினார் நாமக்கல் கவிஞர். வேறு எந்த இனத்திற்கும் மொழிக்கும் இல்லாத பெருமை தமிழுக்கும் தமிழருக்கும் உண்டு. காரணம் மனித இனம் எப்படி வாழ வேண்டும் என்பதனை விட எப்படி வாழக் கூடாது என்று வாழ்வியலை கற்றுக் கொடுத்த தமிழரின் பண்பாட்டு அடிச்சுவடுகள் இன்றும் உலகம் முழுவதிலும் தடம் பதித்து இருக்கிறது என்றால் உயர்ந்த சிந்தனைகளையும், உயர்வான எண்ணங்களையும் சமூகம் எனும் மணற்பரப்பில் விதைத்துச் சென்றிருக்கிறது என்று தானே அர்த்தம்.பண்பட்ட மண்ணில்தான் செடிகளும் கொடிகளும் துளிர்விடும். அதுபோல இந்தச் சமூகம் பண்பட வேண்டும் என்றால் நல்ல பண்பாடு இருக்க வேண்டும் என்பதனை தமிழினம் இத்தரணிக்குக் கற்று கொடுத்து இருக்கிறது. நாடாண்ட மன்னன் முதல் குடிசை வாழும் சாதாரண குடிமகன் வரை குலம் காக்கும் பண்பாட்டை கட்டிக் காத்து பார் போற்ற வாழ்ந்த இனம் தமிழினம். இது வரலாற்றுப் பதிவு.இலக்கியங்கள் தொடங்கி இன்றைய இணையம் வரைக்கும் தமிழரின் பண்பாடும் பதிவுகள் தன்னைக் காட்சிப்படுத்தி நிற்கிறது. நாகரீகம் என்ற பெயரில் தலைமுறை கடந்து விட்டாலும் தமிழரின் பண்பாட்டு எச்சங்கள் வாழ்வியலின் ஒவ்வொரு தளத்திலும் பின் தொடர்ந்து வருகிறது.

தமிழரின் விருந்தோம்பல் பண்பு

தமிழரின் தலைசிறந்த பண்பாடுகளில் ஒன்று விருந்தோம்பல். வீட்டிற்கு வரும் உறவினர்களை மட்டுமல்ல, முகம் தெரியாத யாராக இருந்தாலும் அவர்களை அன்போடு உபசரித்து முகம் மலர உணவளித்து உள்ளன்போடு வழியனுப்பும் வாழ்வியலை தருகிறது தமிழரின் பண்பாட்டுக் கோட்பாடு. காலம் காலமாக இப்பண்பாட்டை கட்டிக்காத்து வருவது நம் தனிச் சிறப்பு. இதிலும் ஒரு படி மேலே சென்று இது குடும்பத் தலைவியின் கடமைகளில் ஒன்றாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.விருந்தோம்பலை இல்லத்தரசியின் கடமையாக வேறு எந்த இனமும் நாடும் சுட்டிக்காட்ட வில்லை. இதனை தமிழ் இலக்கியங்களும் பதிவு செய்திருக்கின்றன. வாரி வழங்கும் வள்ளல்கள் வாழ்ந்த பரம்பரை நம் தமிழ்ப் பரம்பரை. கடையெழு வள்ளல்கள் வாழ்ந்த வரலாற்றை பதிவு செய்து பாதுகாத்து வருகிறோம். இவ்வுலகம் இருக்கும் வரை இவ்வரலாறு சொல்லும். தமிழரின் ஈகைப் பண்பாட்டிற்கு இணையாக நாம் எதையும் சொல்லிவிடவும் முடியாது, செய்து விடவும் முடியாது.மனிதனுக்கு மனிதன் மட்டும் உதவுவது ஈகை அல்ல. படர்ந்து செல்லும் செடிகொடிகளுக்கும் கூட உற்றுழி உதவி செய்து தமிழ்ப்பண்பாட்டை உலக அரங்கில் உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்றது தமிழினம். ஆமாம் குளிரில் நடுங்கிய மயிலுக்கு போர்வை அளித்துச் சென்றான் பேகன். பற்றிப்படர கொம்பில்லாமல் கிடந்த கொடிகளுக்கு தான் வந்த தேரினை விட்டுச் சென்றவன் பாரி. இதே போல் நீண்ட நாள் உயிர்வாழும் நெல்லிக்கனியை அதியமானுக்கு கொடுத்துச் சென்றாள் ஔவை.இப்படி நாடு நகரம், பணம், காசு இத்தனையும் அள்ளி அள்ளி கொடுத்த ஈகை எனும் ஈரமனதினை இலக்கியங்கள் இன்றளவும் போதித்து வருகிறது. இந்த ஈகைக்கும் இலக்கணம் சொன்னவன் வள்ளுவன்.

தமிழரின் வீரம்

கொடுப்பதிலும் பெறுவதிலும் மட்டும் பண்பாட்டை காட்டவில்லை. வீரத்திலும் பண்பாட்டை விதைத்துச் சென்றவன் தமிழன் இதற்கு காலத்தால் அழியாத பல காவியக் கதைகளை சுமந்து நிற்கும் புறநானுாற்று நுாலே இதற்குச் சாட்சியாக இருக்கிறது. எதிரிநாட்டு படையினை தாக்கும் பொழுது கூட ஈரமும் இரக்கமும் இருந்ததனை காண முடியும்.புறமுதுகிட்டு ஓடுவதும், புறமுதுகில் அம்பு பட்டு வீழ்ந்து போவதும் அவமானம் எனக் கருதிய பரம்பரை தமிழ்ப்பரம்பரை. போரில் அடிபட்டு மாண்டு போன தன் மகன் இறந்த செய்தி அறிந்த ஒரு தமிழ்த்தாய் போர்க்களம் நோக்கி நடக்கிறாள். அப்போது சொல்கிறாள், இறந்து போன என்மகன் நெஞ்சிலே அம்பு பட்டு இறந்திருக்க வேண்டும்.ஆனால் முதுகில் அம்பு பட்டு புறமுதுகு காட்டி இறந்து போயிருப்பானேயானால் அவன் வாய்வைத்து பால்குடித்த இந்த மார்பகங்களை அறுத்தெறிவேன் என்று சபதம் செய்து செல்கிறாள். போர்க்களத்தில் நெஞ்சிலே அம்புபட்டு மாண்டு கிடக்கிறான் மகன். அதனை பார்த்து அவனை ஆரத்தழுவி அழும் தாயைத்தான் சங்க இலக்கியங்கள் நமக்கு சொல்லிக் கொடுத்து இருக்கின்றன. ஆக வீரத்தில் கூட பண்பாட்டை பதிவு செய்த இனம்.போரில் தந்தையை இழந்து, கணவனை இழந்து இறுதியில் தனக்குத் உதவியாக இருக்கும் ஒரே மகனையும் போர்க்களத்திற்கு அனுப்பி வைத்த புறநானுாற்றுத் தாயும் ஒரு தமிழச்சி என்பதில் பெருமை கொள்வோம். இதுதான் தரணிபோற்றிய தமிழர் பண்பாடு என்பதனை உலகிற்கு உரக்கச் சொல்வோம்.

தீதும் நன்றும்

தீதும் நன்றும் பிறர்தர வாரா எனும் உயரிய பண்பாட்டை உரக்கச் சொல்லியதும் தமிழினம் என்பதனை மறந்துவிடாதீர்கள். நாம் என்ன செய்கிறோமோ அது தான் நம்மிடம் திரும்பிவருகிறது. நாம் எதை விதைக்கிறமோ அது தான் முளைத்து நமக்கு பலன் கொடுக்கிறது. நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும். கெட்டது நினைத்தால் கெட்டதே நடக்கும்; இது தான் வாழ்வியல் யதார்த்தம். ஆக நமக்கு நடக்கும் நல்லவற்றிற்கும், கெட்டவற்றிற்கும் பிறரைக் குறை கூறாதீர்கள்.அது உன்னிடம் இருந்து தான் முளைக்கப்படுகிறது என தமிழ்ப்பண்பாடு தான் கற்றுக்கொடுத்தது. ஒழுக்கத்தோடு வாழப்பழகிக்கொள்ளுங்கள் எனும் உயரிய சிந்தனையை எடுத்துச் சொல்லி இருக்கிறது. சமூகம் நலம் பெற, நாடு வளம் பெற ஒவ்வொரு தனிமனிதனும் ஒழுக்கத்தோடு வாழ வேண்டியது அவசியம். மேலை நாடுகளில் இதுபோன்ற பதிவுகளும், பண்பாட்டுக் கூறுகளும் சொல்லப்படவும், எழுதப்படவும் இல்லை. ஆனால் உலகம் போற்றும் இது போன்ற உயர்வான பண்பாட்டுக் கருத்துக்களை உலகறியச் செய்தது தமிழரும் தமிழர் பண்பாடும் என்பது தான் உண்மை.

யாதும் ஊரே

ஜாதி, மதம், இனம், நிறம், மொழி, நாடு என பல்வேறு பிரிவினைகள் சொல்லி நமக்குள் வேற்றுமையை ஏற்படுத்தி ஒற்றுமையான வாழ்க்கைக்கு உலைவைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழன் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று ஒற்றுமை வாழ்க்கைக்கு தன் பண்பாட்டு அடிச்சுவட்டை பதிவு செய்து சென்றிருக்கிறான். எல்லா நாடும் நம் நாடே, எல்லா ஊரும் நம் ஊரே. எல்லோரும் நம் உறவுகளே இதில் வேற்றுமை வேண்டாம் எனச் சொன்ன இனம் தமிழினம்.இப்பண்பாட்டுக் கோட்பாட்டை பின்பற்றி வந்தால் நமக்குள் சண்டைகளும், வழக்குகளும் நம்மை அண்டாது. சரித்திரம் போற்ற வாழும் வாழ்க்கை நம் வசமாகும். இது போன்ற ஒரு பண்பாட்டுச் சிந்தனையை இது நாள் வரைக்கும் வேறு எந்த இனமும், மொழியும் பதிவு செய்யவில்லை. காலங்கள் ஓடிவிட்டது. தலைமுறை கடந்து விட்டது.அறிவியலின் வளர்ச்சி அபரிதமாக வளர்ந்துவிட்டது. ஆனாலும் தமிழரின் பாண்பாட்டு எச்சங்கள் வாழ்வியலின் ஒவ்வொரு தளத்திலும் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரைக்கும் பண்பாடு போற்றப்படுகிறது. பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் வாழ்வியலின் ஒவ்வொரு நகர்விலும் பண்பாடு கடைபிடிக்கப்படுகிறது. உறவுகள் தொடங்கி இறை வழிபாடு வரைக்கும் பண்பாடு பறைசாற்றப்படுகிறது. இல்லறம் முதல் துறவறம் வரை பண்பாட்டு வாழ்வியல் பகிரப்படுகிறது. இப்படியாக ஊருக்கும் உலகத்திற்கும் உன்னதக் கருத்துகளையும், உயர்வான எண்ணங்களையும் தனிமனித ஒழுக்கத்தையும் பண்பாடு என்ற பெயரில் அள்ளிக் கொடுத்த தமிழரின் தலை சிறந்த நாகரீக வாழ்வியலை உலகம் உச்சி நுகர்ந்து போற்றுகிறது. வழியில் வந்து செல்லும் வழிப் போக்கர்கள் கூட அமர்ந்து செல்ல திண்ணை அமைத்து வீடுகட்டிய தமிழரின் பண்பாட்டு கோட்பாட்டை யாரும் புறந்தள்ளி விட முடியாது.இன்னும் எத்தனை காலங்கள் ஆனாலும் தமிழர் பண்பாடு தலை சிறந்து நிற்கும்.

நன்றி : தினமலர்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News