Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, September 23, 2025

32.60 லட்சம் பள்ளி மாணவர்களுக்கான 2-ம் பருவ பாட நூல்கள் தயார்!



அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 7-ம் வகுப்பு வரை பயிலும் 32.60 லட்சம் மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான பாட நூல்கள் முதல் நாளிலேயே வழங்கும் வகையில் தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 44,000-க்கும் அதிகமான அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1 முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 70 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கான பாட நூல்கள் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது. அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு குறைந்த விலையிலும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

இதற்கிடையே, பள்ளிக் கல்வியில் 1 முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முப்பருவக் கல்வி முறையும், 8 முதல் 12ம் ஆண்டு வரையான மாணவர்களுக்கு முழு ஆண்டு கல்வியும் நடைமுறையில் உள்ளது. அதன்படி 1 முதல் 7ம் வகுப்பு வரை 3 பருவங்களுக்கும் தனித்தனியாக பாடப் புத்தகங்கள் வழங்கி தேர்வுகள் நடத்தப் படுகின்றன.

தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வுகள் செப்டம்பர் 26ம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளன. இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் அக்டோபர் 6ம் தேதி திறக்கப்படும். அப்போது 1 முதல் 7ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு 2ம் பருவத்துக்கான வகுப்புகள் தொடங்கும். தற்போது மாணவர்களுக்கான 2ம் பருவப் பாட நூல்கள் அனைத்து மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கிடங்கில் மாணவர்களுக்கு விநியோகிப்பதற்கான வைக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நடப்பு கல்வியாண்டில் 2ம் பருவம் அக்டோபர் 6ல் தொடங்கவுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 7ம் வகுப்பு வரை பயிலும் 32 லட்சத்து 60,960 மாணவர்களுக்கு வழங்குவதற்காக விலையில்லா பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாட நூல்களை விநியோகிப்பதில் எந்த தொய்வும் இருக்கக் கூடாது என்பதற்காக தொடர் ஆய்வுகள் மூலம் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன” என்று கண்ணப்பன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment