Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, September 30, 2025

பழைய ஓய்வூதியத் திட்டம் - அரசு ஊழியர்கள் கவனத்திற்கு! இன்றே கடைசி நாள்!



Old Pension Scheme Deadline: பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை பெற விரும்பும் தகுதியான ஊழியர்கள், தங்களது விருப்பத்தை இன்று மாலைக்குள் தங்களது துறை தலைவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

மத்திய அரசு பணியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த ஊழியர்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து, பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறுவதற்கான காலக்கெடு, இன்றுடன் செப்டம்பர் 30 முடிவடைகிறது. இந்த இறுதி வாய்ப்பை ஊழியர்கள் பயன்படுத்தி கொள்ள தவறினால், அவர்கள் தொடர்ந்து புதிய ஓய்வூதிய திட்டத்திலேயே நீடிக்க நேரிடும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

யாருக்கான இந்த வாய்ப்பு

டிசம்பர் 22, 2003ம் தேதிக்கு முன்பு, மத்திய அரசு பணிக்காக வெளியிடப்பட்ட விளம்பரங்களின் அடிப்படையில் தேர்வாகி, ஜனவரி 1, 2004ம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு மட்டுமே இந்த ஒரு முறை வழங்கப்படும் வாய்ப்பு பொருந்தும். ஏனெனில், ஜனவரி 1, 2004ம் தேதிக்கு பிறகு பணியில் சேர்பவர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, பங்களிப்பு அடிப்படையிலான புதிய ஓய்வூதியத் திட்டம் கட்டாயமாக்கப்பட்டது.

இந்த சூழலில், தேர்வு அறிவிப்பு பழைய விதிகளின் கீழ் வெளியானதால், தங்களையும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும் என்று ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு தகுதியான ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுத்து கொள்ள இந்த இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம் vs புதிய ஓய்வூதியத் திட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டம்

இது, ஒரு வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய திட்டமாகும். இதில், ஊழியரின் சம்பளத்தில் இருந்து எந்த பிடித்தமும் செய்யப்படாது. ஓய்வு பெற்ற பிறகு, ஊழியர் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50% தொகையை, வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியமாக பெறுவார். இது, ஒரு பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான ஓய்வூதியமாக பார்க்கப்படுகிறது.

புதிய ஓய்வூதியத் திட்டம்

இது, ஒரு பங்களிப்பு அடிப்படையிலான திட்டமாகும். இதில், ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10% தொகையும், அதற்கு நிகரான அரசு பங்கும், ஓய்வூதிய நிதியில் முதலீடு செய்யப்படும். ஓய்வுபெற்ற பிறகு கிடைக்கும் தொகையானது, சந்தை நிலவரத்தை பொறுத்து மாறுபடும். இதில், உத்தரவாதமான ஓய்வூதியம் எதுவும் கிடையாது.

இன்றே கடைசி நாள்!

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை பெற விரும்பும் தகுதியான ஊழியர்கள், தங்களது விருப்பத்தை தெரிவிக்கும் விண்ணப்பத்தை, இன்று மாலைக்குள் தங்களது துறை தலைவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்ததேதிக்குப் பிறகு, எந்த காரணத்திற்காகவும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. இந்த தேதிக்குள் தங்களது விருப்பத்தை தெரிவிக்க தவறும் ஊழியர்கள், தாமாகவே புதிய ஓய்வூதிய திட்டத்தைத் தேர்ந்தெடுத்ததாகக் கருதப்பட்டு அதில் நீடிப்பார்கள். எனவே தகுதியான மத்திய அரசு ஊழியர்கள், தங்களது ஓய்வூதிய காலத்தின் நிதி பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த இறுதி வாய்ப்பை உடனடியாக பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இது, அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு முக்கியமான முடிவாகும்.

No comments:

Post a Comment