Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, September 19, 2025

TET - ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் - மறுபரிசீலனை செய்ய ராமதாஸ் கோரிக்கை


தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற முடியாது. ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை

Teacher eligibility test supreme court ruling : தகுதி தேர்வால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சிக்கல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவருக்கும் தரமான, இலவச கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் கொண்டு வரப்பட்டது. 2012-ஆம் ஆண்டு அச் சட்டத்தில், ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டது.

தகுதி தேர்வால் ஆசிரியர்கள் பாதிப்பு

இதனை எதிர்த்து ஆசிரியர் சங்கங்கள் தொடுத்த வழக்கின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது. அதில் 5 ஆண்டுகளில் ஓய்வு பெறக்கூடிய ஆசிரியர்களை தவிர தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2011 தகுதித் தேர்வுக்கு முன்பாக பதிவு மூப்பின் அடிப்படையில் பணியில் சேர்ந்த சுமார் ஒன்றரை லட்சம் ஆசிரியர்கள் 2 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றாக வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியிலிருந்து விலகிக் கொள்ள நேரிடும். அதுபோல், பதவி உயர்வுக்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறையில் பணியாற்றுபவர்களுக்கு பெறும் அதிர்ச்சியையும், சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் ஆகி பல ஆண்டுகள் பணியாற்றி ஆண்டு தோறும் ஏராளமான மாணவர்களுக்கு கல்வி கற்பித்து, மதிப்பெண்கள் எடுக்க வைத்த பின்பும் தங்களின் தகுதியை நிருபிக்க வேண்டும் என்கிற நிலை ஆசிரியர்களின் எதிர்காலத்தை பாதிக்க கூடியது.

ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, மாணவர்களுக்குமான கல்வியையும் பாதிக்கும்

மேலும் ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்ற கல்வியை மீண்டும் மீண்டும் பயிற்றுவிப்பதன் மூலம் தங்களை மென்மேலும் செழுமைப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் தகுதித் தேர்வு என்கிற பெயரில் பாடத்திட்டம் அல்லாமல் வேறு பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டுமாயின் அவர்களும் போட்டித் தேர்வுக்கு தயாராவது போல தங்களின் நேரத்தையும், சிந்தனையையும் செலவழிக்க வேண்டும்.மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் அவர்களும் மாணவர்களாக படிக்க வேண்டும் என்பது கற்பிக்கும் மனநிலையில் இருந்து மாறி மேலும் சிரமத்தை ஏற்படுத்தும். இது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, மாணவர்களுக்குமான கல்வியையும் பாதிக்கும்.

மறுபரிசீலனை செய்திடுக

வாழ்நாளின் சரிபாதி காலத்தை பொருளாதார சிரமத்துடன் கழித்தவர்கள் ஆசிரியர் பணியில் சேர்ந்த பிறகு தான் ஓரளவுக்கு பொருளாதார மேம்பாடு அடைந்து, குடும்பத்தை பராமரித்து, பிள்ளைகளுக்கும் நல்ல கல்வியை கொடுப்பார்கள். ஓய்வு பெறுவதற்கு 10, 15 ஆண்டுகள் இருக்கின்ற நிலையில் அவர்களின் வேலையை பறிப்பது வாழ்வாதாரத்தை பறிப்பதாகும். அவர்கள் பிள்ளைகளின் உயர் படிப்பு, திருமணம் போன்றவை பாதிக்கப்படும். எனவே ஒன்றரை லட்சம் குடும்பங்களின் எதிர்காலம் கருதி இந்த தீர்ப்பினை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாநில அரசும் ஆசிரியர்களின் எதிர்காலத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment